herzindagi
image

Bone health: எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 வகை உணவுகள்; அளவுடன் சாப்பிட்டால் ஆபத்து இல்லை!

Bone health: உங்களுடைய எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட 5 வகையான உணவுகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவை என்ன மாதிரியான உணவுகள் என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.
Editorial
Updated:- 2025-09-13, 09:26 IST

Bone health: நமது உடல் வலிமையாக இருப்பதற்கு பெரிதும் உதவியாக இருப்பது எலும்புகள் தான். இவை உடலை நிமிர்ந்து நிற்க வைப்பதுடன், உள் உறுப்புகளையும் பாதுகாக்கின்றன. ஆனால், நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் எலும்புகளின் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் தூக்கம்; நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சிம்பிள் டிப்ஸ்

 

சில சமயங்களில், நாம் அறியாமலேயே எலும்புகளின் வலிமையை குறைக்கும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். ஒரு துண்டு பிட்சா அல்லது ஒரு கிளாஸ் சோடா உடனே பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டால் நிச்சயம் தீங்கு விளைவிக்கும். எனவே, எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை அதிக அளவில் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. அந்த உணவு பொருட்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.

Women bone health

 

உப்பு:

 

உணவுக்கு சுவையூட்டுவதில் உப்புக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அதிகப்படியான சோடியம், உடலில் உள்ள கால்சியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. இதனால் உடல் இழந்த கால்சியத்தை ஈடுசெய்ய எலும்புகளிலிருந்து பெறுகிறது. நாளடைவில் இது எலும்புகள் மெலிந்துபோக வழிவகுக்கிறது. உப்பு என்பது நாம் உணவுப் பொருட்களில் நேரடியாக சேர்க்கும் உப்பு மட்டும் அல்ல. இது ரொட்டி, நூடுல்ஸ், சிப்ஸ், ஊறுகாய் மற்றும் பலவற்றில் மறைந்திருக்கிறது. எனவே, அதிக உப்பு சேர்ப்பதை தவிர்த்து, அதற்கு பதிலாக மசாலா பொருட்கள், எலுமிச்சை சாறு அல்லது குறைந்த உப்பு கொண்ட வறுத்த நட்ஸ்களை பயன்படுத்தலாம்.

 

சர்க்கரை:

 

சர்க்கரை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது என்று தோன்றலாம். ஆனால் அது நாம் நினைப்பதைவிட ஆபத்தானது. அதிக சர்க்கரை உட்கொள்வது கால்சியம் உறிஞ்சுதலை தடுக்கிறது. மேலும், எலும்பு திசுக்களை மீண்டும் உருவாக்குவதை உடலுக்கு கடினமாக்குகிறது. சர்க்கரை என்பது இனிப்பு வகைகளில் மட்டுமல்ல, சாஸ்கள், தானியங்கள், குளிர்பானங்கள் போன்றவற்றிலும் மறைந்துள்ளது. சர்க்கரைக்கு பதிலாக பழங்கள், பேரீச்சம்பழம் அல்லது வெல்லம் போன்றவற்றை தேர்வு செய்வதன் மூலம் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற நன்மைகளை கூடுதலாக பெறலாம்.

மேலும் படிக்க: Foods to reduce menstrual pain: மாதவிடாய் நேரத்தில் அதிக வலி இருக்கிறதா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

 

குளிர்பானங்கள்:

 

சோடா பானங்களில் உள்ள நுரை திருப்தியளிக்கும் உணர்வை ஏற்படுத்தலாம். ஆனால் பல குளிர்பானங்களில் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சமநிலையை சீர்குலைக்கிறது. இவற்றுடன் அதிகப்படியான சர்க்கரை சேரும்போது, எலும்புகளுக்கு இருமடங்கு பாதிப்பு ஏற்படுகிறது. உங்களுக்கு குளிர்பானங்கள் தேவைப்பட்டால், அதற்கு பதிலாக எலுமிச்சை கலந்த சோடா, வீட்டில் தயாரித்த லெமன் சோடா அல்லது ஐஸ் டீ போன்றவற்றை தேர்வு செய்யலாம். இதன் மூலம் எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் புத்துணர்ச்சி பெறலாம்.

Soft drinks

 

காஃபின்:

 

தேநீர் மற்றும் காபி நம் அன்றாட வாழ்வில் புத்துணர்ச்சி தரும் பானங்கள். ஆனால் அதிகப்படியான காஃபின் சிறுநீர் வழியாக கால்சியம் இழப்பை விரைவுபடுத்துகிறது. இதற்குத் தீர்வு இந்த பானங்களை முற்றிலுமாக நிறுத்துவது அல்ல. மாறாக, சமநிலையுடன் உட்கொள்வதே சரியான வழி. பால் சேர்ப்பது அல்லது காஃபின் அருந்தும்போது கால்சியம் நிறைந்த சிற்றுண்டிகளை சாப்பிடுவது எலும்புகளை பாதுகாக்கும். குறிப்பாக, எனர்ஜி பானங்கள் அதிக காஃபின் மற்றும் சர்க்கரையை கொண்டுள்ளதால், அவை எலும்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

 

பேக்கரி உணவுகள்:

 

வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரிகள் மற்றும் பிஸ்கட்கள் சாப்பிட நன்றாக இருக்கும். ஆனால் அவை எலும்புகளுக்கு தேவையான மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை கொண்டிருப்பதில்லை. இதனால் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துக்களை நாம் இழந்துவிடுகிறோம். வெள்ளை ரொட்டி போன்ற பேக்கரி உணவுகளுக்கு பதிலாக பிரவுன் ரைஸ், ஓட்ஸ், அல்லது பாரம்பரிய சிறு தானியங்களை தேர்வு செய்யலாம். இவை கூடுதல் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீண்ட நேரம் நீடிக்கும் ஆற்றலை வழங்குவதுடன், திருப்தியான உணர்வையும் தருகின்றன.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com