
கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க நம் உடல் சூட்டை தணிக்கும் பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். கோடை வெயிலில் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இது போன்ற உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க ஒரே வழி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது தான். பொதுவாகவே கோடை வெயிலில் நம் உடலில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். இதனால் நுங்கு, இளநீர், மோர் மற்றும் சிறுதானிய கூழ் வகைகளை நீங்கள் கோடை காலத்தில் சாப்பிடலாம். ஏனென்றால் கோடை காலத்தில் இது போன்ற உணவுகள் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். அதே போல கோடை காலங்களில் செயற்கையான குளிர்பானங்களை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த குளிர்பானங்களால் உடலில் உள்ள நீர்ச்சத்து எளிதில் குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இயற்கை முறையில் வீட்டிலேயே கிடைக்கும் பழங்களை வைத்து ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், பலாப்பழ ஜூஸ், தர்பூசணி ஜூஸ் போன்ற ஜூஸ்களை செய்து சாப்பிடலாம். கொளுத்தும் கோடை வெயிலுக்கு சிறுதானியங்கள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சிறுதானிய வகைகள் என்று கூறும் போது கேழ்வரகு, கம்பு, ராகி, திணை, மாப்பிள்ளை சம்பா போன்ற அனைத்தும் அடங்கும். கொடைக்காலம் முடியும் வரை இதுபோன்ற சிறுதானியங்களை வைத்து வீட்டிலேயே கூழ் செய்து சாப்பிட்டு வரலாம்.

கேழ்வரகு சாப்பிட்டால் நம் உடலுக்கு சூடு என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. 100 கிராம் கேழ்வரகில் 7.3 கிராம் புரோட்டின், 3.6 கிராமம் நார்ச்சத்து, 3.9 கிராம் இரும்புச்சத்து என்று நம் உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. தினசரி காலையில் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். அதே போல தோசை மாவில் பாதிக்கு பாதி கேழ்வரகு கலந்து தோசை செய்து சாப்பிட்டால் கோடை வெயிலுக்கு நீரிழிவு நோயாளிகளுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஆரோக்கியம் மேம்பட உதவும்.

கோடை வெயிலில் நம் உடலை குளிர்ச்சி படுத்த கம்பு சாதம் செய்து சாப்பிட்டு வரலாம்; 100 கிராம் கம்பில் புரதச்சத்து 11.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம், கால்சியம் 42 மில்லி கிராம், 8 மில்லி கிராம் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக முளைகட்டிய கம்பில் வைட்டமின் டி வைட்டமின் சி என இரண்டு சத்துக்களும் நிறைந்துள்ளது. இந்த கம்பு சாதம் சமைப்பதும் எளிது தான். உடைத்த கம்பை ஒரு குக்கரில் போட்டு வேக வைக்க வேண்டும். ஒருவேளை முழு கம்பு கிடைத்தால் அதை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் போட்டு வேக வைக்கலாம். கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து உங்களை நிச்சயம் காப்பாற்ற இந்த கம்பு பெரிதும் உதவுகிறது.

கோடை வெயிலை சமாளிக்க வரகரிசி உப்புமா செய்து சாப்பிட்டு வரலாம். இந்த உப்புமா ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதே போல இந்த வரகரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளும் சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக இந்த வரகு அரிசி உப்புமாவை சாப்பிடலாம். இது அவர்கள் சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. 100 கிராம் வரகரிசியில் புரதச்சத்து 8.3 கிராம், நார்ச்சத்து ஒன்பது கிராம், இரும்புச்சத்து 5 கிராம், கால்சியம் சத்து 27 மில்லி கிராம் நிறைந்துள்ளது. எனவே கோடை காலத்தில் வெயிலை சமாளிக்க இந்த வரகரிசி ஒரு சிறந்த உணவு ஆகும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com