தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு திரையுலகுகளில் பணியாற்றிய லட்சுமி மஞ்சு சென்னையில் பிறந்தவர். தமிழில் கடல், இஞ்சி இடுப்பழகி, காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை மோகன் பாபு பற்றி அறிமுகம் தேவையில்லை. தென் இந்திய திரையுலகில் மிகவும் முக்கியமானவர். ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து திரையுலகை சேர்ந்த பிரபலத்திடம் பேட்டி எடுக்க ஹெர் ஜிந்தகி தொடர்ந்து முயற்சித்தது. அதன் பலனாக நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி உங்கள் பார்வை என ஹெர் ஜிந்தகி குழுவின் (தமிழ்) கேள்விகளுக்கு அவர் தனது கருத்துகளை கூறியுள்ளார். திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும் லட்சுமி மஞ்சுவின் பதில்கள் அவரை சமூகத்தின் மீது அக்கறை கொண்டரவராக காட்சிப்படுத்தியுள்ளது. வாருங்கள் ஹெர் ஜிந்தகி குழுவுக்கு அவர் அளித்த பதில்களை பார்ப்போம்...
கேள்வி 1 : ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து உங்கள் முதல் பார்வை ?
மலையாள திரையுலகில் பெண் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை வெளிகொண்டு வந்த ஹேமா கமிட்டிக்கு எனது பாராட்டுக்கள். இந்த அறிக்கை வெளிவர காரணமாக இருந்த அனைவரையும் பாராட்ட விரும்புகிறேன். மற்ற திரையுலகினரும் இந்த அறிக்கையை கண்டு விழித்துக் கொள்ள வேண்டும்.
கேள்வி 2 : தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகிலும் ஹேமா கமிட்டி தேவையா ?
பெங்காலி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் ஹேமா கமிட்டி தேவை. திரையுலகில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஹேமா கமிட்டி தேவை.
கேள்வி 3: திரையுலகில் பாலியல் குற்றங்களை தடுப்பது எப்படி?
திரையுலகில் மட்டும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக குற்றம் சுமத்த முடியாது. காலையில் செய்திகளை பார்க்கும் போது அனைத்து துறைகளிலும் இப்பிரச்னை இருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக கொல்கத்தா பயிற்சி மருத்துவர் சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். திரையுலகில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தங்களுடைய பிரச்னைகளுக்கு தாங்களே முன் நின்று எதிர்கொள்ளுமாறு பெண்களுக்கு கற்பிப்பது அவசியம்.
கேள்வி 4 : திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலா ?
திரையுலகம் ஒரு கண்ணாடி போல் இருப்பதால் அதன் மீது வெளிச்சம் செலுத்தப்படுகிறது. எந்த துறையாக இருந்தாலும் பாலியல் குற்றங்களை பெரிய பிரச்னையாக கருதி நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம்.
கேள்வி 5 : பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தலுக்கு தீர்வு என்ன ?
என்னுடைய பார்வையில் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சுழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசாத போது அதை எளிதாக கடந்துவிடுகின்றனர். இதை பேசுவதன் அவசியத்தை உணர்ந்தால் மட்டுமே தீர்வை நோக்கி பயணிக்க முடியும். நான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன்.
கோவில்களில் கூட பெண்கள் ஒரு விதமான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். தரிசனம் செய்யும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் பெண்கள் மீது கை வைத்து தள்ளுகின்றனர். இது சரியா ? இதுவும் ஒரு விதமான துன்புறுத்தல் தான். இந்த சம்பவம் பத்ரிநாத் கோவிலில் நடந்தது. பெண்கள் மீது கை வைக்க அனுமதி கொடுத்தது யார் என சண்டை செய்துள்ளேன். பொதுவான தீர்வை அடைய வேண்டி உள்ளது.
பான் இந்தியா படங்கள் குறித்து லட்சுமி மஞ்சு அளித்த பதில்களை தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation