herzindagi
image

பளபளக்கும் சருமம் வேண்டுமா? உங்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய பழங்களின் லிஸ்ட் இதோ!

உங்கள் சருமத்திற்கு இயற்கையான முறையில் பளபளப்பை கொடுக்கும் பழங்கள் குறித்து காணலாம். இவை சருமம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியதாக அமைகிறது.
Editorial
Updated:- 2025-10-09, 13:07 IST

சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதில் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படும் கிரீம்கள், சீரம்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அதை விட முக்கியம் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது. இவை நமது சருமத்திற்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன.

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஆலிவ் எண்ணெய்; எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

 

குறிப்பாக, இயற்கையான வகையில் நமக்கு கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் நம் சருமத்திற்கு தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் முழு பலனையும் நாம் பெறலாம். அதன்படி, நம் சருமத்திற்கு நன்மை அளிக்கும் பழங்கள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

 

ஆரஞ்சு:

 

நமது சருமத்தின் வறட்சிதன்மையை போக்கி, பொலிவை கொடுக்கும் ஆற்றல் ஆரஞ்சு பழத்தில் உள்ளது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் கொலஜன் (Collagen) உற்பத்தியை தூண்டுகிறது. வைட்டமின் சி, சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து (Free Radicals) பாதுகாக்கும் ஒரு கவசம் போல் செயல்படுகிறது. தினசரி ஒரு ஆரஞ்சு சாப்பிடுவதன் மூலம் சருமத்தின் நிறத்தை பிரகாசமாக மாற்றி, இயற்கையான முறையில் பளபளப்பை அதிகரிக்க முடியும். ஆரஞ்சில் உள்ள இயற்கையான நீர்ச்சத்து, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

Orange

 

மாதுளை:

 

மாதுளையின் மூலம் நம் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. வயதான தோற்றத்தை எதிர்த்து போராடக் கூடிய அன்டிஆக்ஸிடன்ட்கள் மாதுளையில் அதிகமாக உள்ளன. இது சேதமடைந்த சரும செல்களை சரிசெய்ய உதவுகிறது. மாதுளை சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது சருமத்திற்கு இயற்கையான பொலிவை வழங்குகிறது. குளிர்காலத்தில் உண்டாகும் வறட்சியை போக்க, மாதுளையின் நீர்ச்சத்தும், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உதவுகின்றன. மாதுளையை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். இது சரும வறட்சியை உள் இருந்தே எதிர்த்து போராட உதவுகிறது.

மேலும் படிக்க: சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நாவல் பழம்; உங்கள் பராமரிப்பு முறையில் இப்படி பயன்படுத்தவும்

 

பப்பாளி:

 

பப்பாளி பழத்தை சருமத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். இந்தப் பழத்தில் பப்பைன் (Papain) போன்ற என்சைம்கள் நிறைந்துள்ளன. இது இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்தை வெளிப்படுத்துகிறது. பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் ஈ அதிகம் உள்ளன. இவை சருமத்தை சீராக பராமரிக்க உதவுகின்றன. பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவது சரும அமைப்பை மென்மையாக்கி, அதன் ஈரப்பதத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இரவு உணவிற்கு பிறகு அல்லது மதிய உணவிற்கு இடையில் பப்பாளியை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

 

கொய்யாப்பழம்:

 

இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட கொய்யாப்பழம், சரும ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. கொய்யாப்பழத்தில் ஆரஞ்சை விட நான்கு மடங்கு அதிகமான வைட்டமின் சி சத்து உள்ளது. சருமத்தை பிரகாசமாக்கவும், வறட்சியை எதிர்த்து போராடவும் உதவுகிறது. குளிர்காலத்தில் சளி, இருமல் போன்ற நோய் தொற்றுகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. அந்த வகையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொய்யாப்பழம் உதவுகிறது. மேலும், சருமம் புத்துணர்ச்சியுடன் மற்றும் பொலிவுடன் இருக்க உதவுகிறது. தினசரி உணவில் கொய்யாப்பழத்தை சேர்ப்பது, சருமத்தின் ஈரப்பதத்தையும், இளமை பொலிவையும் தக்கவைக்க உதவுகிறது.

Guava

 

சாத்துக்குடி:

 

சாத்துக்குடியில் அதிகப்படியான நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதனால், நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சருமம் வறட்சியாகவும், பொலிவு இல்லாமலும் காணப்பட்டால் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்ல பலன் அளிக்கும். இது மட்டுமின்றி, நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் சருமம் புத்துணர்வு பெற உதவுகிறது. இதனால் உங்கள் முகம் எப்போதும் பொலிவாக காட்சி அளிக்கும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com