
Skin care tips: ஒவ்வொருவருக்கும், ஒரே நொடியில் தங்களுடைய சருமத்தை மேம்படுத்தி, முகத்தில் உடனடியாக பொலிவை கொண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், இது சாத்தியமற்றது என்று எல்லோருக்குமே தெரியும்.
எனினும், சருமத்தை இயற்கையான முறையில் பொலிவாக பராமரிப்பதற்கு நாம் சில விஷயங்களை மேற்கொள்ளலாம். அவற்றை தொடர்ந்து செய்வதன் மூலம் காலப்போக்கில் நீடித்த, நிலையான பொலிவான சருமத்தை நம்மால் அடைய முடியும். அது நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்து அமைகிறது. ஆரோக்கியமான, பொலிவான சருமம், அடர்த்தியான கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனை மேம்படுத்தும் உணவுகளில் கவனம் செலுத்தினால், ஒரு மாத காலத்திலேயே உங்களால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணர முடியும்.
சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த அழகுசாதன பொருட்களை மட்டுமே நம்பி இருப்பதற்கு பதிலாக, சில அற்புதமான உணவுகளில் முதலீடு செய்யலாம். இந்த ஆறு இயற்கையான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், உங்கள் சருமம் உள்ளிருந்து ஒளிர தொடங்கும். அந்த உணவுகள் என்னவென்று இதில் காண்போம்.
வெண்ணெய் பழம், ஆரோக்கியமான கொழுப்புகளின் களஞ்சியம் போன்றது. இந்த மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. மேலும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, வறட்சியை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள வைட்டமின் ஈ, செல்களின் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது மற்றும் சருமத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது. இதன் அன்டிஆக்சிடென்ட்கள், சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. வெண்ணெய் பழத்தை சாலடுகள், சாண்ட்விச்களில் சேர்த்து அல்லது அப்படியே சாப்பிடுவதன் மூலம் உங்கள் சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்துகளை வழங்க முடியும்.

கீரைகளை நம்முடைய சரும ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஆற்றல் மையமாக செயல்படுகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே ஆகியவை உள்ளன. குறிப்பாக, கொலஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி உதவுகிறது. வைட்டமின் ஏ, செல்களை ஆரோக்கியமாக பராமரிக்கிறது. கீரைகளில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவி, உங்கள் சருமத்திற்கு கூடுதல் துடிப்பான நிறத்தையும், பொலிவையும் அளிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் சருமம் சோர்வாக காணப்படும். எனவே, நாள்தோறும் ஏதேனும் ஒரு வகை கீரை உட்கொள்வதை வழக்கமாக மாற்றிக் கொள்ளலாம்.
பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை உங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிக சிறந்த உணவுகள் ஆகும். இவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. இவை சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து நீரேற்றமாக வைக்கின்றன. மேலும், இவை வீக்கத்தை குறைத்து, முகப்பருக்கள் வருவதை தடுக்க உதவுகின்றன. வைட்டமின் ஈ, முதிர்ச்சியான தோற்றத்தை தடுக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. அதன்படி, தினமும் சில வகையான பருப்புகள் மற்றும் விதைகளை சிற்றுண்டியாக சாப்பிட்டால் சருமம் மட்டுமின்றி கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒரு இனிமையான பலன் அளிக்கக் கூடியது. இதில் பீட்டா-கரோட்டின் நிறைந்துள்ளது. இந்த பீட்டா-கரோட்டின், சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இது சருமத்தின் நிறத்தையும், அமைப்பையும் மேம்படுத்துகிறது. இவற்றில் உள்ள அதிக நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. ஆரோக்கியமான குடல் ஆரோக்கியம் என்பது சருமம் பொலிவாக இருப்பதற்கான அடிப்படை அம்சமாகும்.
மேலும் படிக்க: Skin care tips: சரும பராமரிப்புக்கு உதவும் பீட்ரூட்; இனிமே தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க
கிரீன் டீ, உலகின் மிகவும் பிரபலமான ஆரோக்கிய பானங்களில் ஒன்றாகும். இது அன்டிஆக்சிடென்ட்களின், குறிப்பாக கேடசின்கள் நிறைந்த ஒரு பானம். இதில் உள்ள பாலிஃபீனால்கள், சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, முகப்பருக்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. இது சூரிய ஒளியினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. கிரீன் டீயை தொடர்ந்து குடிப்பதால் வளர்சிதை மாற்றம் மேம்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த சரும ஆரோக்கியமும், பொலிவும் கிடைக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தயிரின் பங்களிப்பும் கணிசமான அளவு இருக்கிறது. இதன் முக்கிய பலன்கள், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உள்ளன. ஆரோக்கியமான குடல், பொலிவான சருமத்திற்கு மிக அவசியம். இதில் உள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க உதவுகின்றன. இவை, உடலில் உள்ள வீக்கத்தை குறைத்து, அது தொடர்பான சரும பிரச்சனைகள் வருவதை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள புரதம், கொலஜன் உற்பத்திக்கு தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது.
இது போன்ற சத்தான உணவுகளை நாள்தோறும் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் சரும ஆரோக்கியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com