herzindagi
image

Nayanthara Documentary : உருவக்கேலி, கிசு கிசு, போராட்டம், லேடி சூப்பர் ஸ்டார் டூ காதல் திருமணம்; நயனின் மறுபக்கம்

நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி நவம்பர் 18ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான Nayanthara beyond the fairy tale-ன் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். டயானா மரியம் குரியன் டூ லேடி சூப்பர்ஸ்டாராக நயன்தாரா உருவெடுத்தது பற்றி இந்த ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2024-11-19, 09:34 IST

ஜூன் 9,2022 நயன்தாராவின் திருமணத்திற்கு பிறகு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நயன்தாராவின் ஆவணப்படம் தயாராகி வருகிறது என திரையுலக வட்டாரத்தில் தகவல் கசிந்தது. விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் காதல் நானும் ரவுடி தான் படத்தில் தொடங்கிய காரணத்தால் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள், சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கிடைக்காத காரணத்தால் வேறு வழியின்றி ரீ-எடிட் செய்து தற்போது நயனின் பிறந்தநாளையொட்டி Nayanthara beyond the fairy tale என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. சுமார் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் அந்த ஆவணப்படம் ஓடுகிறது. முதல் 40 நிமிடங்கள் நயனின் திரையுலக பயணமும் அடுத்த 40 நிமிடங்கள் விக்னேஷ் சிவனுடனான காதல் டூ திருமணம் வாழ்க்கையும் காட்சிபடுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் நயன் ரசிகர்களுக்கு விருந்து படைத்ததா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

டயானா மரியம் குரியன் எனும் நயன்தாரா

ஜூன் 9,2022 நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாக கதை ஆரம்பிக்கிறது. இருவரின் திருமணத்தை திருப்பதியில் நடத்த முடியாமல் போகிறது. திருமண ஏற்பாடுகள் குறித்து நயன் - விக்னேஷின் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூற அவ்விடத்தில் இருந்து நகர்ந்து செல்கிறார். அங்கிருந்து நயன்தாராவின் திரையுலக அறிமுகத்தை விவரிக்கின்றனர். தனது தந்தை இந்திய விமானப் படை அதிகாரி எனவும் தாய் குடும்ப தலைவி எனவும் விவரிக்கிறார். கல்லூரி படிப்பின் போது நயன்தாராவின் புகைப்படம் ஒரு வார இதழின் முன்பக்கத்தில் வெளியாகிறது. இதை பார்த்த இயக்குநர் சத்யன் தனது அடுத்த படத்தில் புதுமுகமாக நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை தேடுகிறார். வாய்ப்பை ஏற்க மறுக்கும் நயன்தாரா அதன் பிறகு சூட்டிங் ஸ்பாட் சென்று அனைவரையும் கவனிக்கிறார். தன்னை தயாராக்கி கொண்ட பிறகு கேமரா முன்பு நடிக்க தொடங்குகிறார். முதல் படமே ஜெயராம் மற்றும் அனுபவம் வாய்ந்த ஷுலா செலினுடன் திரையை பகிர்ந்துகொண்டார். இரண்டாவது படம் மோகன்லால், அடுத்த ஆண்டிலேயே தமிழில் சரத்குமாருடன் அய்யா படத்தில் அறிமுகமென நயன்தாராவின் திரைப்பயணம் ஜெட் வேகத்தில் செல்கிறது.

கஜினியில் உருவக்கேலி, முதல் காதலில் கிசு கிசு

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க கஜினியில் ஒரு கவர்ச்சியான பாடலுக்கு நயன்தாரா நடனமாடுகிறார். அந்த பாடல் வெளியானதும் பத்திரிகைகளில் நயன்தாராவின் இடுப்பு, உடல் எடை குறித்து விமர்சிக்கிப்படுகிறது. அவருக்கு கவர்ச்சி ஒத்துவரவில்லை என்பது போல் எழுதியிருந்தனர். இதை பற்றி விவரிக்கும் நயன்தாரா இயக்குநர் சொன்னதையே செய்தேன் என்கிறார். தன்னை உருவக்கேலி செய்த வாய்களுக்கு பூட்டு போடும் விதமாக அஜித்துடன் பில்லா படத்தில் படுகவர்ச்சியாக நடிக்கிறார் நயன்தாரா. இந்த கதாபாத்திரத்திற்கு நயன்தாரா மிகவும் பொருந்தியதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் காரணங்களை அடுக்கிறார். முதல் காதல் அனுபவம் பற்றி அந்த நடிகரின் பெயரை குறிப்பிடாமல் பேசும் நயன்தாரா காதல் முறிவுக்கு என்னை சுற்றி மட்டுமே எழுதினார்கள் எனவும் மறுபக்கத்தில் நடந்ததை யாருமே நேரடியாக கேட்வில்லை எனவும் தெரிவிக்கிறார்.

More For You

    நயன்தாராவின் கடைசி படமும் போராட்டமும்

    சந்திரமுகி, தெலுங்கில் மிகப்பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் சூழல் என வேகமாக பயணித்த நயன்தாராவுக்கு திடீரென திரையுலகிற்கு முட்டுக்கட்டை போடும் எண்ணம் தோன்றுகிறது. சீதாவாக நடித்து விட்டு கடைசி நாள் சூட்டிங்கில் அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேறுகிறார். அதன் பிறகு தனது அம்மாவிடம் சென்று இரண்டு வருடங்களுக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் தனியாக இருக்க விரும்புவதாகவும் நயன்தாரா கூறியுள்ளார். அவருடைய முடிவுக்கு தந்தையின் உடல்நல பிரச்னையும் காரணமாக இருக்கலாம். தனது மகள் எங்கிருந்தாலும் தினமும் மூன்று முறை போன் செய்து நலம் விசாரிப்பார்; அதே போல நயன்தாராவை பற்றி கடவுளுக்கும் எனக்கும் நன்றாக தெரியும் என்று உணர்ச்சி ததும்புகிறார் அவருடைய தாய்.

    லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

    அந்த இரண்டு வருடங்களில் தான் பலரையும் எளிதில் நம்பிவிட்டதையும், பின்புலம் இல்லாமல் வந்தால் எப்படியெல்லாம் தனிமனித தாக்குதல் செய்வார்கள் என புரிந்துகொள்கிறார் நயன். இதன் பிறகு காட்சிகள் மாறுகின்றன. நாகர்ஜுனா மூலம் தெலுங்குவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அட்லி ஐதராபாத் சென்று ராஜா ராணி கதையை விவரிக்கிறார். அங்கிருந்து தனி ஒருவன், பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடி தான், அறம், டோரா, இருமுகன், மாயா, காஷ்மோரா, வேலைக்காரன், பிகில் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக பரிணமிக்கிறார். இதோடு முதல் 40 நிமிடங்கள் முடிகிறது.

    மேலும் படிங்க வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு கோடிகளில் வருமானம்; நிகர மதிப்பு விவரம்

    விக்னேஷ் சிவனுடன் காதல் திருமணம்

    நானும் ரவுடி தான் சூட்டிங்கில் இருவருக்கும் காதல் மலர்கிறது. அங்கிருந்து அடுத்தக்கட்டம் செல்ல இருவரும் காத்திருக்கின்றனர். காதலை முதலில் வெளிப்படுத்தியது நயன்தாரா என்பது போல் ஆவணப்படத்தில் உள்ளது. விக்னேஷ் சிவன் தன்னை தேடி கொச்சின் வரை வருகிறாரா என்றெல்லாம் டெஸ்ட் செய்திருக்கிறார் நயன். காதலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல நினைக்கும் நேரத்தில் கொரானா பேரிடர். இதனால் காத்திருந்து திருமணம் செய்துகொள்கின்றனர். இந்த காதல் பயணத்தில் தன்னை கிண்டல் செய்து வெளியான மீம்கள் குறித்தும் விக்னேஷ் சிவன் பேசுகிறார். மெஹந்தி, பெரும் நட்சத்திர பட்டாளம் பங்கேற்ற திருமணம் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து வரிசையாக அடுக்கி ஆவணப்படம் நிறைவு செய்யப்பட்டு இருக்கிறது. 

     

    ஆவணப்படம் என்பதை விட நயன்தாராவின் மறுபக்கமே இந்த Nayanthara beyond the fairy tale. நயனின் ரசிகர்களுக்கு இந்த ஆவணப்படம் நிச்சயம் ஒரு விஷுவல் ட்ரீட். டப்பிங்கில் இன்னும் கூட கவனம் செலுத்தி இருக்கலாம். 

    Disclaimer

    உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com