தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாள் தொடங்கும் கந்த சஷ்டி விரதத்தின் நிறைவு நாள் இந்த சூரசம்ஹாரம். சூரபத்மனை வதம் செய்த நாளே சூரசம்ஹாரம். தீமையை அழிக்கும் நாளாகவும் சூரசம்ஹாரம் கருதப்படுகிறது. உலகில் தீமை தோன்றிக் கொண்டே இருக்கும். அதை அழிப்பதற்கு நன்மையும் ஒரு புறம் தோன்றும். நன்மையின் உருவம் முருகப்பெருமான், தீமையின் உருவம் சூரபத்மன். இந்த சூரபத்மன் யார் ? செய்த தவறு என்ன ? திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு எதற்கு ? சூரபத்மனை முருகன் வதம் செய்வதற்கு என்ன காரணம் உள்ளிட்ட வரலாற்று தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
பிரம்மாவிற்கு இரண்டு மகன்கள். ஒருவனுடைய பெயர் தட்சன், மற்றொருவனுடைய பெயர் காசிபன். தட்சனுடைய மகளான தாட்சாயினி எனும் பார்வதி தேவியை சிவபெருமான் சிறைபிடித்து செல்கிறார். இதனால் தட்சனுக்கும் சிவபெருமானுக்கும் பிரச்னை உண்டாகிறது. இதனிடையே காசிபன் தவமிருந்து ஆற்றலை பெறுகிறார். இவருடைய தவத்தை கலைத்திட மாயை என்ற பெண் அனுப்பபடுகிறாள். அவளுடைய அழகில் மயங்கிய காசிபன் மாயை-ஐ மனைவியாக ஏற்று ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் ஒவ்வொரு வகையான குழந்தையை பெற்றெடுக்கின்றனர்.
மனித வடிவில் இருவரும் கூடிய போது பிறந்தவன் சூரபத்மன். அடுத்ததாக சிங்க வடிவில் தங்களை மாற்றி இருவரும் கூடிய போது பிறந்தவன் சிங்கமுகாசூரன். யானை போன்ற தங்களை மாற்றி இருவரும் கூடிய போது பிறந்தவன் தாரகன். அதே போல ஆடாக மாறி இருவரும் கூடிய போது பிறந்தவள் அஜமுகி. ஆக காசிபன் மாயைக்கு 4 குழந்தைகள்.
சூரபத்மன் வளர்ந்த பிறகு அவனிடம் தாய் மாயை உலகை ஆழ்வதற்கு நீ தவம் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். தவம் செய்தால் சிவபெருமான் இறங்கி வந்து வரம் தருவார் என்றவுடன் நான்கு பேரும் தவம் செய்கின்றனர். இதில் சூரபத்மனின் தவம் மிக கொடிதாக மாறுகிறது. தவம் இருப்பதோடு மட்டுமல்லாமல் தனக்கு முன் கடவுள் தோன்றாவிட்டால் உடலின் அங்கங்களை அறுத்து நெருப்பில் போடுவதாக வேண்டி தவத்தை தொடங்குகிறான். கை, கால்களை வெட்டி போட்டு அகோர தவத்தை செய்கிறான். இறுதியாக தலையை வெட்ட செல்லும் போது சிவபெருமான் தோன்றி விடுகிறார்.
சிவபெருமான் மூன்று வரங்களை சூரபத்மனுக்கு கொடுக்கிறார். 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆழ்வதும், போர் செல்வதர்கு இந்திரஞாலத் தேர், பெண் வயிற்றில் தோன்றிய யாரும் தன்னை கொல்ல முடியாது என்பது அந்த வரங்களாகும். இதன் பிறகு சூரபத்மன் சகோதர்களோடு சேர்ந்து கொண்டு மண் உலகையும், விண் உலகையும் வென்றெடுத்து தேவர்களை அடிமைபடுத்தி அட்டூழியங்கள் செய்கின்றான்.
மேலும் படிங்க கந்த சஷ்டி விரதம் கடைபிடித்து முருகனை வழிபடுங்கள்! வாழ்க்கையில் சிக்கல்கள் தீரும்
சூரபத்மனின் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட பலரும் சிவபெருமானிடம் முறையிடுகின்றனர். இதையடுத்து சிவபெருமானுடைய ஆறு முகங்களில் இருந்து தோன்றிய நெருப்பு பொறிகளை வாயு பகவான் ஒன்றாக்கி சரவண பொய்கையில் விடுகிறார். இதை அங்கிருந்த கார்த்திகை பெண்கள் குழந்தைளாக மாற்றி வளர்த்தவுடன் பார்வதி தேவியிடம் கொண்டு செல்கின்றனர்.
அப்படியாக ஆறுமுகன் எனும் முருகப்பெருமான் தோன்றுகிறார். சூரனை அழிக்க பார்வதி தேவி தனது முழு ஆற்றலையும் வேலாக மாற்றி முருகனிடம் கொடுக்கிறார்.
ஆண் நெற்றியில் பிறந்த முருகப்பெருமான் திருச்செந்தூருக்கு வந்து 6 நாட்கள் தவமிருந்து சூரபத்மனின் சகோதர்களை அழித்த பிறகு சூரபத்மனோடு போராடுகிறான். ஆணவத்தால் தவறுசெய்துவிட்டேன் என சூரன் முருகனிடம் சரணடைகிறான். எனினும் மாமரமாக மாறிய சூரனை பிழந்து அவனுடைய வேண்டுகோளின்படி மயிலாகவும் சேவற்கொடியாகவும் மாற்றி கொண்டு தன்னோடு வைத்துக்கொள்கிறார் முருகன்.
திருச்செந்தூர் கடற்கரை மற்றும் அறுபடை வீடுகளில் இந்த சூரசம்ஹார நிகழ்வினை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். இந்த வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்துங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com