ஒவ்வொரு நாளும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகளில் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அதனடிப்படையில், கர்ப்பிணிகளுக்கான உணவுகள் குறித்து மருத்துவர் அருண் குமார் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்களை இதில் பார்க்கலாம்.
கலோரி அளவுகளில் கவனம் தேவை:
கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களுக்கு கூடுதல் கலோரிகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக அவர்கள் நாள்தோறும் சாப்பிடும் உணவுகளை எடுத்துக் கொண்டால் போதுமானதாக இருக்கும். அடுத்த நான்கு மாதங்களுக்கு கர்ப்பிணிகளுக்கு கூடுதலாக 300 கலோரிகள் தேவைப்படும். அந்த வகையில் கூடுதலாக இரண்டு இட்லி மற்றும் சாம்பார், 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் நட்ஸ் வகைகள் அல்லது ஒரு கிளாஸ் மில்க் ஷேக் போன்றவை சரியாக இருக்கும்.
ஏழு மாதங்களுக்கு பிறகு கர்ப்பிணிகளுக்கு 450 கலோரிகள் கூடுதலாக தேவைப்படும். அதேவேளையில், இரட்டைக் குழந்தைகளாக இருந்தால் 600 கலோரிகள் கூடுதலாக தேவைப்படும். ஆனால், எந்த சூழலிலும் தேவைக்கு அதிகமாக உணவுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் உடல் எடை அதிகரித்து, கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படக் கூடும்.
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து மருத்துவர் அட்வைஸ்
புரதச் சத்தின் அவசியம்:
கர்ப்ப காலத்தில் 25 முதல் 30 கிராம் வரை கூடுதலாக புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக 5 முழு முட்டைகள் சாப்பிடலாம். இதேபோல், தினமும் 100 கிராம் அசைவ உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த கூடுதல் புரதம் கிடைத்து விடும். வேக வைக்காத சுண்டல் வகைகளை 150 கிராம் சாப்பிட்டால், தேவையான அளவு புரதத்தை பெறலாம். இது தவிர ஓமேகா 3-ஃபேட்டி ஆசிட்ஸ், நம்முடைய உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: குழந்தைப் பருவம் முதல் மெனோபாஸ் காலம் வரை; பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய தடுப்பூசிகளின் பட்டியல்
இதனை மீன் வகைகள், நட்ஸ், ஆளி விதைகள் போன்றவற்றில் இருந்து பெறலாம். கர்ப்பிணிகளுக்கு 27 மில்லி கிராம் இரும்புச் சத்து தேவைப்படும். முருங்கைக் கீரை, பயிறு வகைகள், அசைவ உணவுகள் ஆகியவற்றில் இருந்து இதனை பெற்றுக் கொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு 1000-1500 மில்லி கிராம் வரை கால்சியம் சத்து தேவைப்படும். இதற்காக கீரைகள், ராகி, பன்னீர் ஆகியவை சாப்பிடலாம்.
மேலும், ஒரு நாளைக்கு 400 மில்லி கிராம் அளவிற்கு ஃபோலிக் ஆசிட் தேவைப்படும். கூடுதலாக, கொலின் சத்தும் தேவைப்படும். இதனை முட்டையின் மஞ்சள் கருவில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் ஏ, டி, சி போன்றவையும் கட்டாயம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கேரட், ஈரல், நெல்லிக்காய், காய்கறிகள், முளைகட்டிய பயிறு வகைகள் ஆகியவை சாப்பிட வேண்டும்.
இத்தகைய உணவுகளை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும் என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளிக்கிறார்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation