இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளும் அன்று தான். குழந்தைகள் மீது அக்கறை காட்டியதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் வளமாக குழந்தைகளை ஜவஹர்லால் நேரு கருதினார். அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளுக்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் ஒவ்வொரு குடிமகனும் நேருவின் வார்த்தைகளை நினைவில் வைத்து எல்லா குழந்தைகளுக்கும் எல்லாவற்றிலும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.
இந்தியாவில் குழந்தைகள் தினம் என்பது கொண்டாட்டமல்ல. வளமான இந்தியாவை வடிவமைப்பதில் குழந்தைகளின் பங்களிப்பை இந்த நாள் எடுத்துரைக்கிறது. அதே நேரம் குழந்தைகளுக்கான உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கிறதா ? இன்னும் உள்ள சவால்கள் என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
ஜவஹர்லால் நேரு எப்போதுமே வளமான இந்தியாவை உருவாக்கிட குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என நம்பினார். இந்தியாவின் விலைமதிப்பற்ற வளமாக குழந்தைகளை நேரு கருதினார். அதனடிப்படையில் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளும் அவரை அன்போடு நேரு மாமா என்றழைத்தனர்.
1958ல் ஜவஹர்லால் நேரு ஒரு பேட்டியில் இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள் என்றார். மேலும் அவர்களை நாம் வளர்க்கும் விதம் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என குறிப்பிட்டார். குறிப்பாக குழந்தைகளை தோட்டத்தில் வளரும் மொட்டுக்கள் எனவும் அவற்றை பாதுகாப்பாகவும் அன்போடும் வளர்க்க வேண்டும் ஏனென்றால் அவர்களே நாளைய குடிமகன்கள் எனவும் தெரிவித்தார். நேருவின் கனவே நாளடைவில் ஐஐடி, ஐஐஎம் போன்ற உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுக்கு வித்திட்டன.
முன்னதாக இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 20ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிவிப்புபடி அவ்வாறு குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1964ல் நேருவின் மறைவுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டு அவருடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு பள்ளியிலும் நேரு குறித்து பேச்சு போட்டி நடத்தி அவர் கண்ட கனவுகள் குறித்து எடுத்துரைத்து குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சியில் குழந்தைகள் விதையாக நடப்படுகின்றனர். ஏனெனில் எதிர்காலத்தில் நாட்டின் தலைவர்களாக அவர்கள் உருவெடுக்கின்றனர்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image credits : Freepik, INC
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com