ஜல்லிக்கட்டு, சல்லிக்காசு, ஏறு தழுவுதல், என பல பெயர்களுடன் அறியப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் பல நூற்றாண்டுகளாக தமிழகர்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றிவருகிறது. தமிழகர்கள் கொண்டாடக்கூடிய ஒவ்வொரு பண்டிகையும் அவர்களது வாழ்நாளோடு தொடர்புடையது. அந்த வகையில் தான் அறுவடை திருநாளை தைப் பொங்கல் தினமாகவும், அவற்றிற்கு உதவியாக இருந்த காளைகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் தினமும், ஆண்டு முழுவதும் உழைத்து களைத்தவர்கள் ஓய்வெடுப்பதற்காகவும், உறவினர்களுடன் மகிழ்வுடன் இருப்பதற்காகவும் காணும் பொங்கல் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
தமிழகம் முழுவதும் மூன்று தினங்கள் ஒவ்வொரு விதமாக கொண்டாட்டங்கள் இருந்தாலும், மதுரை என்றாலே சட்டென்று அனைவரது நினைவிற்கு நியாபகம் வருவது ஜல்லிக்கட்டு போட்டிகளாக இருக்கும். தை 1 ல் மதுரை அவனியாபுரம், தை 2 ஆம் தேதி மதுரை பாலமேடு, தை 3 ல் மதுரை அலங்காநல்லூர் என மூன்று இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் புகழ்பெற்றது. குறிப்பாக மற்ற இரண்டு ஊர்களைக் காட்டிலும் அலங்காநல்லூர் மட்டும் ஏன் இவ்வளவு புகழ்பெற்றது? வெளிநாட்டினரே வியந்துப் பார்க்கும் அளவிற்கு அதன் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
![alanganallur jallikattu]()
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு:
தமிழகத்தில் எந்த ஊர்களில் பங்கேற்று வெற்றி பெற்றாலும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துக் கொள்ள வேண்டும் என மாடு பிடி வீரர்களும், காளை உரிமையாளர்களும் பெருமைக் கொள்வார்கள். இதற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொள்வார்கள். அடங்காத காளைகளையும் அலங்காநல்லூரில் அடக்கும் போது தன்னுடைய வீரத்தை நினைத்து இளைஞர்கள் பெருமைக் கொள்வார்கள்.
வாடிவாசல் சிறப்பு?
தமிழகத்தில் பிற இடங்களில் இல்லாத வகையில் அலங்காநல்லூரில் அமைந்துள்ள வாடிவாசல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஊர் மந்தையில் காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் என இரண்டு கோவில்களுக்கு இடையே வாடிவாசல் அமைந்துள்ளது. அவனியாபுரம், பாலமேடு என மற்ற இடங்களைப் போன்றில்லாமல் அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசல் நேராக இருக்காது. மிகவும் குறுகலாக இருப்பதோடு நேராக வந்து கொஞ்சம் திருப்பிச் செல்லும். அதாவது வாடிவாசலில் இருந்து “ட“ வடிவில் வாடிவாசல் அமைந்திருக்கும்.
போட்டிகள் தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகள் உடனே வெளியே செல்ல முடியாது. ஒவ்வொரு மூலைகளாக ஆங்காங்கே ஆங்காங்கே சுற்றித் திரியும். துள்ளி வரும் காளைகளை அடக்க காளையர்களும் போட்டி போட்டுக் கொண்டு திமிலைப் பிடிக்க முயல்வார்கள். ஜல்லிக்கட்டு காளைகளும், வீரர்களும் மாறி மாறி தங்களது வெற்றிக்குப் போராடும் அழகு ஒருபுறம் இருந்தாலும், கொம்பு முட்டி பல வீரர்கள் காயம் அடைவார்கள். இதெல்லாம் எங்களது வீரத்திற்கு ஒரு அடையாளம் என கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மீண்டும் களத்தில் உற்சாகம் குறையாமல் துள்ளி விளையாடுவார்கள்.
கூட்டத்தைப் பார்த்து பயந்து செல்லாமல், குறுகலான வாடிவாசலில் நின்று விளையாடும் காளைகள் மற்றும் வீரர்களைப் பார்ப்பதற்காகவே உள்ளூர்வாசிகள் மட்டுமல்ல வெளிநாட்டினர் பலரும் கலந்துக் கொள்வார்கள். “ அடக்க முடியாத எந்த காளைகளும் அலங்காநல்லூரில் அடங்கிவிடும்” என்பதால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசிதிப்பெற்றதாக உள்ளது என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதோடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெறக்கூடிய காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்க காசுகள் முதல் பல பரிசுகள் வழங்கப்படும். இதைப் பெறுவதை வீரர்கள் தனி பெருமையாகக் கருதுகின்றனர்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation