வாழக்கையில் என்றாவது ஒரு நாள் நிச்சயமாக ஆண் பிள்ளைகள் மாதவிடாய் பற்றி தெரிந்து கொள்ள போகிறார்கள். ஆனால் அவர்கள் அதை தெரிந்து கொள்ளும் முறை மாதவிடாய் பற்றிய அவர்களது காணோட்டத்தை தீர்மானிக்கிறது. மாதவிடாய் சமயத்தில் உடல் மற்றும் மனதளவில் பெண்கள் எதிர்கொள்ளும் மனநிலை மாற்றங்கள், உதிரப்போக்கு போன்ற விஷயங்களை இளம் வயது பிள்ளைகளிடம் சொல்லிக்கொடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் பிள்ளைகள் பெண்களையும், மாதவிடாய் சுழற்சியையும் ஒருபோதும் அவமதிக்க மாட்டார்கள். ஆண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பற்றி ஏன் சொல்லிக் கொடுக்க வேண்டும்? இதற்கான காரணங்களை இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பிள்ளைகளிடம் மனித உடல் சார்ந்த விஷயங்கள் பற்றி பேசும் போது, அவர்களை ஆண்,பெண் என வேறுபடுத்தி பார்க்க வேண்டாம்.
உதாரணமாக உங்களுக்கு நான்கு முதல் ஆறு வயதுடைய ஆண் அல்லது பெண் பிள்ளை இருந்தால் அவர்களுக்கு மாதவிடாய் பற்றிய சரியான தகவல்களை சொல்லிக் கொடுங்கள். சில சமயங்களில் நீங்கள் பயன்படுத்தும் பேடு அல்லது மென்சுரல் கப் போன்ற பொருட்களை அவர்கள் காண நேரிடலாம். இந்நிலையில் அதனை பற்றிய தவறான புரிதலுக்கு இடம் கொடுக்காமல், அதனைப் பற்றிய சரியான தகவல்களை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது பெற்றோருடைய கடமை. மாதம் தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி பற்றியும், உதிரப் போக்கை உறிஞ்சுவதற்காக பயன்படுத்தப்படும் பேடு குறித்தும் அவர்களுக்கு ஏற்ற வகையில் புரியும்படி சொல்லிக் கொடுக்கலாம்.
ஆண் பிள்ளைகள் தங்கள் வாழ்க்கை பயணத்தில் உறவினர்கள், பெண் நண்பர்கள், சகோதரிகள் அல்லது பள்ளியில் தங்களுடன் படிக்கும் மற்ற சிறுமிகள் என பல பெண்களை சந்திக்கிறார்கள். சிறு வயதிலேயே ஆண் பிள்ளைகளுக்கு மாதவிடாய் பற்றிக் கற்றுக் கொடுத்தால், மற்றவர்களை பற்றி புரிந்து நடக்கும் பெரியவர்களாக அவர்கள் வளருவார்கள்.
ஆண் பிள்ளைகள் மாதவிடாய் குறித்து கேலி செய்யும் பல சம்பவங்களை நாம் கேள்விபட்டிருப்போம். இந்நிலையில் அவர்களுக்கு மாதவிடாய் பற்றி சிறு வயதிலேயே சொல்லிக் கொடுக்கும் பொழுது இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம். இதனால் உடலின் இயல்பான செயல்முறையாக மாதவிடாயை பார்க்கத் தொடங்குவார்கள் மேலும் மாதவிடாய் குறித்து கேலி செய்யாமல், பெண்களுக்கு உதவி செய்யவும் முயற்சி செய்வார்கள்.
மாதவிடாய் ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. பெண்கள் மாதவிடாய் பற்றி ஆண்களிடம் பேசவது ஒரு பெரிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஏன், ஒரு சில பெண் பிள்ளைகள் தங்கள் அப்பாவிடம் கூட இதை பற்றி பேச விரும்புவது இல்லை. சானிட்டரி பேடுகளை செய்தித்தாள் அல்லது கருப்பு பாலிதீன் கவரில் சுற்றிக் கொடுக்கும் நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. மாதவிடாய் உடலில் ஏற்படும் ஒரு இயற்கை மாற்றமாக பார்க்கப்பட வேண்டும்.
இது போன்று சூழ்நிலைகள் மாற வேண்டுமெனில் கட்டாயமாக ஆண் பிள்ளைகளுக்கும் மாதவிடாய் குறித்த விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். மற்ற உடல்நல பிரச்சனைகள் பற்றி தயங்காமல் பேசுவதை போல, மாதவிடாய் பற்றியும் வெளிப்படையாக பேசுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : அடிக்காமல் திட்டாமல் குழந்தையை சமாளிப்பது எப்படி?
மாதவிடாய் நாட்களில் சில சமயங்களில் ஆடைகளில் கறை படியலாம். இது வீட்டில் நிகழும் போது நாம் பேடு மாற்றி, வேறு உடை அணிந்து கொள்வோம். ஆனால் இதுவே ஒரு பொது இடத்தில் நடந்தால் நம் மனநிலையையும், சங்கடமான உணர்வுகளையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சில சமயங்களில் இது போன்ற மாதவிடாய் கறைகள் ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் மாதவிடாய் குறித்த மற்றவர்களின் கண்ணோட்டம் மாறும் போது, மாதவிடாய் கறைகள் பற்றி பெண்கள் அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
இது போன்ற நிலை மாறுவது இன்றைய பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. ஆண் பிள்ளைகளுக்கும் மாதவிடாய் பற்றி சொல்லி கொடுத்து, நாளைய சமுதாயத்தை சிறப்பாக மாற்றுவோம்!!
இந்த பதிவும் உதவலாம் : குழந்தையை அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com