ஆங்கிலேயரின் ஆதிக்கம் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ஜான்சி என்ற பகுதியில் வீரமங்கை ஜான்சி ராணி லட்சுமிபாய் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வென்றால் வெற்றி இல்லையெனில் மோட்சம் என முழக்கமிட்டவர். குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும் அன்பு, வீரம், ரெளத்திரம் என சிறப்புமிக்க குணங்களுடன் இந்தியா கண்ட வீரமங்கைகளில் ஒருவராக பிரதானமாக வரலாற்றில் எழுதப்பட்டவர் ராணி லட்சுமி பாய்.
களத்தில் தன் கட்டளைக்கு கட்டுப்படும் ஆயிரக்கணக்கான வீரர்களின் ஒற்றை நம்பிக்கையாக எதிரிகளிடம் ராஜ்ஜியத்தை தரமாட்டேன் என்ற கர்வத்துடன் வால்களை சுழற்றியது தான் ஜான்சி ராணியின் வீரத்திற்கான அடையாளம். இவரது வாழ்க்கை ஒரு சரித்திரம் மட்டுமின்றி வளரும் பெண் சமூகத்திக்கு முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வரையறையை உடைத்தெரிந்த ஜான்சி ராணி தனது அசாத்திய திறனால் ஒரு பெண்ணால் இப்படியும் இருக்க முடியும் என நிரூபித்தார். ஜான்சி ராணியின் அத்தியாயம் ஆரம்பிக்கும் போது ஒருங்கிணைந்த இந்திய பிராந்தியங்களை பிரிட்டீஷார் ஒவ்வொன்றாக ஆட்சி செய்யத் தொடங்கினர்.
அப்போது ஜான்சி ராஜ்ஜியத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்க்க தொடங்கியவர் தான் ராணி லட்சுமி பாய். இவர் உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 1828ஆம் ஆண்டு நவம்பர் 19 தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் மணிகர்ணிகா. சிறுவயதிலேயே துடிதுடிப்பாக இருந்ததால் மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் தனித்துவமான பயிற்சிகளை பெறத் தொடங்கினார். இதனால் சிறுவயதிலேயே லட்சுமி பாய் குதிரை சவாரி, வாள் பயிற்சி போன்றவற்றை பழக நேர்ந்தது.
இயற்கையாகவே ரெளத்திரம் பழகு குணம் கொண்டவராக இருந்ததால் லட்சுமி பாய் பெற்று வந்த பயிற்சிகள் அவரை போர் வீராங்கனையாக மாற்றியது. அடிமையாக இருப்பதை விட போர் தொடுக்கலாம் என்பதே ஜான்சி ரானியின் எண்ணமாகவும் இருந்தது.
ஆங்கிலேய கமாண்டர் தலைமையிலான பெரும் பிரிட்டீஷ் படை ஜான்சியை நோக்கி வந்தது. அப்போது சரணடையுமாறு ஆங்கிலேய கமாண்டர் தூதுவிட அதற்கு போராடி வென்றால் வெற்றி இல்லையெனில் மோட்சம் என கம்பீரமாக பதில் அனுப்பினார் ஜான்சி ராணி லட்சுமி பாய். இதனால் ஆத்திரம் அடைந்த ஆங்கிலேய படை ஜான்சி கோட்டையை நோக்கி சுடத் தொடங்கியது. இதற்கு தயாராக இருந்த ஜான்சி படை பலமான முறையில் பதிலடி கொடுத்தது.
போர் களத்தில் இந்தியர்களிடம் இருக்கும் ஆயுதங்களை வைத்து ஆங்கிலேயர்களை வீழ்த்துவது எளிதான காரியமல்ல என்பதை அந்த ஜான்சி ராணியின் படை வீரர்கள் அறிந்திருந்தாலும் அடிமையாகக் கூடாது என்ற மன உறுதியை கொண்டு தைரியமாக போராடினர். அங்கிலேய படை தொடர்ந்து முன்னேறுவதை அறிந்திருந்த ஜான்சி ராணி அருகே ஆட்சி செய்து கொண்டிருந்த தனது நண்பரான தாந்தியா தோபேவிடம் உதவி கேட்டார்.
இதையடுத்து 20 ஆயிரம் வீரர்களுடன் ஜான்சிக்கு சென்று ஆங்கிலேயர்களை தனது படை வீரர்களுடன் எதிர்த்தார் தாந்தியா தோபே. இவர்கள் ஒருங்கிணைந்தும் ஆங்கிலேயர்களை வீழ்த்துவது பெரும் சவாலாக இருந்தது.
மேலும் படிங்கRepublic Day 2024 : குடியரசு தினம் வரலாறு, முக்கியத்துவம், சிறப்பம்சங்கள்…
அப்போது ஆங்கிலேயர்கள் ஜான்சி ராணியின் படைகளை வீழ்த்தி அவரை பிடிக்க கோட்டைக்குள் நுழைந்தார். ஆங்கிலேயர்களிடம் அடிமையாகக் கூடாது என்பதற்காக மீதம் இருந்த வீரர்களுடன் தனது நண்பர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த பகுதிகளுக்கு புறப்பட்டார் ஜான்சி ராணி. இதனால் ஆங்கிலேயர்கள் ஜான்சியை கைப்பற்றினர். ஜான்சி ராணி குவாலியரை நோக்கி படைகளை நகர்த்தினர். ஆங்கிலேயருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த மன்னர்களும் ஜான்சி ராணியுடன் இணைந்தனர்.
கிட்டத்தட்ட நான்கு படைகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சண்டையிட்டனர். வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஜான்சி ராணியும் போர்க் களத்தில் இறங்கினார். ஆனால் நாலாபுறமும் பிரிட்டீஷார் தாறுமாக தாக்கினர். சண்டையிடும் போது தனது மகனையும் சுமப்பார். போர்க்களத்தில் பின்னடைவு ஏற்படவே பின்வாங்கிய ஜான்சி சக மன்னர்களுடன் ஆலோசனை செய்தார்.
அவர்கள் அனைவரும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட முடிவு செய்தனர். அதற்கு ஒரு தற்காலிக கோட்டை அமைத்து பயிற்சி எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் அங்கும் ஆங்கிலேய படைகள் தாக்குதல் நடத்தின. கோபமடைந்த ஜான்சி ராணி லட்சுமி பாய் போர் முழக்கமிட்டு இரண்டு கையில் வாளுடன் ஆங்கிலேய படை வீரர்களை வெட்டி சாய்த்தார். ஜான்சி ராணியின் மீது கத்தியும், குண்டுகளும் பாய்ந்தன.
ஆங்கிலேயர்களிடம் மண்டியிடக் கூடாது என்பதற்காக சில வீரர்களுடன் பூல் பாக் என்ற பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றார் ஜான்சி ராணி. அங்கு தனது மகனை பாதுகாப்பாக வீரர்களிடம் ஒப்படைத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார். சாவின் விழிம்புக்கு சென்ற போதிலும் ஆங்கிலேயர்களிடம் தன்னுடைய உடல் கிடைக்க கூடாது என்பதற்காக தன்னை எரித்து சாம்பலாக்கும் படி உத்தரவிட்டு வீரமரணமடைந்தார்.
அத்துடன் இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் வீராங்கனையான ராணி லட்சுமி பாய்-ன் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. அந்த இடத்தில் ஜான்சி ராணிக்கு நினைவிடமும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆங்கிலேயர் கமாண்டர் ஒருவர் போர்க்களத்தில் குதிரையின் கடிவாளத்தை கடித்தபடி இரண்டு கைகளிலும் வாள் பிடித்து சண்டையிட்ட ஜான்சி ராணி இந்தியாவின் மிக அபாயகரமான போர் வீராங்கனை என பதிவிட்டுள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயருக்கு எதிராக படைகளை உருவாக்கிய போது பெண் படைக்கு ராணி லட்சுமி பாய் படை என பெயர் சூட்டினார். ஜான்சி ராணி மறைந்திருந்தாலும் அவருடைய வீரம், ரெளத்திரம் பல பெண்களிடையே பிரதிபலித்து கொண்டே இருக்கிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation