தொழிலாளர் வர்க்கமும், தொழிலாளர்களும் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகும். இந்திய தேசத்தின் உள்கட்டமைப்பு, வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக தொழிலாளர்கள் திகழ்கின்றனர். தொழிலாளர் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்துவதையும், அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பதையும் உறுதி செய்வதற்காக தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பே உயர்வு தரும் என்று நம்பும் தொழிலாளர்களுக்கான இந்த நாளின் பின்னணி குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
தொழிளாலர் தின வரலாறு
தொழிலாளர் தினத்தின் வரலாறு 19ஆம் நூற்றாண்டுடன் தொடர்புடையது. மே 1, 1886ல் எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள தொழிற்சங்க இயக்கத்தினர் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். எதிர்பாராதவிதமாக சிகாகோவில் போராட்டம் வன்முறையாக மாறியது. இது ஹேமார்க்கெட் படுகொலைக்கு வழிவகுத்தது.
சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் வேலைநிறுத்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. அப்போது அங்கு குண்டுவீசப்பட போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பல போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இதன் பிறகு 1889ஆம் ஆண்டில் சர்வதேச சமூகவுடைமை மாநாட்டில் ஹேமார்க்கெட் படுகொலையை நினைவுகூரும் வகையில் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 1890 ஆம் ஆண்டு முதல் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியா உட்பட சுமார் 80 நாடுகளில் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக 1923ஆம் ஆண்டு மே தினம் கொண்டாடப்பட்டது. சென்னையை சார்ந்த ஹிந்துஸ்தான் தொழிலாளர் கட்சி மே தினத்தை கடைபிடித்தது. மே 1ஆம் தேதி மகாராஷ்டிரா தினம் மற்றும் குஜராத் தினம் கொண்டாடப்படுகின்றன.
தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவம்
கடின உழைப்பின் மூலம் மகத்தான தேசத்தை கட்டி எழுப்புவதில் தொழிலாளர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உரிமைகளைப் பற்றி அவர்களுக்கு கற்பித்து முதலாளித்துவ சுரண்டல்களில் இருந்து காப்பாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. தொழிலாளர்களுக்கு உகந்த பணிச்சூழலை உருவாக்கி அவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு உதவுவதற்கான முயற்சிகள் இந்த தினத்தில் பேசப்படுகிறது.
தொழிலாளர் தின கொண்டாட்டம்
பல நாடுகளில் தொழிலாளர் தினத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நாளில் தொழிலாளர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்த கருத்தரங்குகள் நடைபெறும். சில இடங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்கத்தினர் பதாகைகளுடன் பேரணி செல்வது வழக்கம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation