Women's Day Special: 100 தடவை கீழ விழுந்திருக்கேன்.. ஆனாலும் பைக் ரேஸிங் தான் எல்லாமே!

மகளிர் தினத்தை முன்னிட்டு நம் தமிழகத்தை சேர்ந்த தேசிய பைக் ரேஸிங் சாம்பியன் நிவேதாவுடன் ஒரு சிறப்பு நேர்காணலை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

Nivedha main

பைக் ரேஸிங் என்று சொன்னாலே அது பசங்களுக்கான ஒரு விஷயம் தான் என்று நினைக்கும் இந்த சமூகத்தில்,பெண்ணாக பிறந்தால் என்ன? நானும் பைக் ஓட்டுவேன் என்று ஒட்டுமொத்த பெண் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்த நம் தமிழகத்தை சேர்ந்த தேசிய பைக் ரேஸிங் சாம்பியன் நிவேதா ஜெஸிகாவுடன் ஓர் சிறப்பு நேர்காணல்.

பெண்கள் பைக் ஓட்டக்கூடாது என்று சொல்லும் இந்த சமூகத்தில் இந்த இளம் வயதில் நீங்கள் பைக் ரேஸர் ஆக என்ன காரணம்?

nivedha bike racer () ()

'நீ ஒரு பொண்ணு, அதுனால பைக் ஓட்டக்கூடாது' என்று எல்லாரும் சொல்லும்போது 'நான் ஏன் பைக் ஓட்டக்கூடாது?' என்று யோசித்தேன். 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை தான் என்னை இவ்வளவு தூரம் கொண்டுவந்து விட்டது என்று கூட சொல்லலாம். நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது பைக் ஓட்ட கத்துக்கிட்டேன். பல வருடங்களுக்கு பிறகு நான் கல்லூரியில் படிக்கும் போது வெவ்வேறு ஊர்களுக்கு பைக்கிலேயே போவேன். சில மாதங்களுக்கு பிறகு தான் பைக் ரேஸிங் பற்றி முதல் முறையாக கேள்விப்பட்டேன். இந்திய அளவில் வெறும் 4 அல்லது 5 பெண்கள் மட்டுமே அப்போது இந்த ரேஸிங்கில் இருந்தனர். இன்றைய காலத்தில் பல பெண்கள் இந்த துறையில் வந்திருந்தாலும் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் பைக் ரேஸிங் என்றால் அது ஆண்களுக்கான போட்டி என்று தான் பலரும் நினைத்தார்கள். எனக்கு எப்பவும் பைக் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். அப்படியே பைக்கை ரோட்டில் மட்டும் ஒட்டாமல் டிராக்கில் ஓட்ட ஆரம்பித்தேன். தினமும் பைக் டிராக்கில் சென்று வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன். அதே டிராக்கில் முதன்முறையாக பைக் ஓட்டவே எனக்கு ஒரு வருஷம் ஆச்சு. என்னுடைய 19 வயதில் முதன்முறையாக டிராக்கில் பைக் ரேஸிங் போட்டியில் ஓட்டினேன். அந்த அனுபவம் இன்றும் எனக்கு மறக்காது.

பெற்றோர், உறவினர் ஆதரவு இருந்துச்சா?

nivedha ()

நான் பைக் ரேஸிங்கில் வந்த ஆரம்ப நாட்களில் என்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் முதலில் பயந்தனர். டிராக்கில் வேகமாக பைக் ஓட்டும்போது ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு அதிகம் இருந்தது. இந்த பயத்தை தாண்டி பைக் ரேஸிங் என்பது ஒரு ஆடம்பர விளையாட்டு என்று கூறலாம். ஸ்போர்ட்ஸ் பைக், அதற்கு ஏற்ற ஹெல்மெட், சேஃப்டி உடை, ஸ்போர்ட்ஸ் ஷுஸ் என்று இதுக்கே 4 அல்லது 5 லட்சம் செலவு செய்ய வேண்டியது இருக்கும். இது போக நம் உடல் ஆரோக்கியம், உணவுமுறை என்று அதுவும் செலவு தான். இதனால் எனக்கு ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து பைக் ரேஸிங்க்கு வர நினைக்கும்போது ஆதரவு கிடைப்பது கொஞ்சம் கடினமாக தான் இருந்தது.

பைக் ரேஸிங்கில் இருந்த சவால்கள் என்ன?

பண ரீதியாகவும், உடல் ஆரோக்கியம், மன நிலை ரீதியாகவும் எனக்கு இதில் பல சவால்கள் இருந்தது. பைக் ரேஸிங் எனக்கு முக்கியம் என்பதால் அதனை தாண்டி சில சின்ன சின்ன வேலைகள் செய்து அதற்கு தேவையான பணத்தை எப்போதும் சேர்த்து வைப்பேன்.

டிராக்கில் மறக்க முடியாத ஒரு சம்பவம்?

nivedha jessica

டிராக்கில் கீழே விழுந்து ஏற்பட்ட காயங்கள் தான் எப்பவும் மறக்க முடியாத சம்பவம். சுமார் 100 தடவைக்கும் மேல் பைக் டிராக்கில் விழுந்திருப்பேன். முதல் முறையாக தேசிய அளவு சாம்பியன்ஷிப் பைக் ரேஸிங் ஓட்டும்போது சென்னையில் நடந்த இரண்டாம் சுற்றில் சக போட்டியாளர் ஒருவர் என் மீது பைக்கை மோதியதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அடுத்த 3 மாதம் என்னால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த வருஷம் முழுவதும் என்னால் டிராக்கில் பைக் ரேஸிங் போட்டியில் கலந்துகொள்ள இயலவில்லை. ஒரு வருடம் கழித்து 2019 ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தேசிய அளவில் பைக் ரேஸிங் போட்டியில் வெற்றி பெற்றேன்.

விளையாட்டு துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு சில வார்த்தைகள்?

nivedha jessica biker

பெண்ணாக பிறந்தாலே கண்டிப்பாக ஆசைகள் இருக்கும். பல பெண்களும் இந்த விளையாட்டு துறையில் வரவேண்டும் என்று பல கனவுகளோடு உள்ளனர். ஆனால் சில குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக அவர்கள் இந்த துறையில் வருவதற்கு தயங்குகிறார்கள். நம் தமிழக அரசு இப்போது விளையாட்டு துறையில் சாதிக்கும் பெண்களுக்கு பிரத்யேகமாக நிறைய வாய்ப்புகள் கொடுத்து வருகிறது. சாதிக்க நினைக்கும் பெண்கள், அது எந்த துறையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் முதலில் தைரியமாக குரல் கொடுங்கள். எது தப்பு எது சரி என்று தைரியமாக முடிவு எடுக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் உங்களை அதிகம் கவர்ந்த பெண்?

எனக்கு அன்னை தெரசா ரொம்ப பிடிக்கும். அவரின் அன்பு, கருணை, பிறருக்கு உதவும் குணத்தை நான் இன்றும் ரசிக்கிறேன். அதே போல என் அம்மாவிடம் இருந்தும் இந்த உதவி செய்யும் குணத்தை கற்றுக்கொண்டுள்ளேன். என்னை போல பைக் மீது காதலோடு இருக்கும் பெண்களுக்காக பைக் ரேஸிங் கிளப் ஒன்று ஆரம்பித்து, அதில் இன்று 1200க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சி எடுப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP