மாதவிடாய் நிறுத்தம் என்பது இயற்கையாக நிகழும் ஒரு உயிரியல் மாற்றம் ஆகும். இது மாதவிடாய் சுழற்சியின் முடிவைக் குறிக்கிறது. 45 வயதிற்கு மேற்பட்ட ஒரு பெண்ணுக்கு தொடர்ச்சியாக 12 மாதங்கள் வரையிலும் மாதவிடாய் ஏற்படவில்லை என்றால், அதை மாதவிடாய் நிறுத்தமாக எடுத்துக்கொள்ளலாம். இனம், பாரம்பரியம், மரபியல் மற்றும் மருத்துவ நிலைகளைப் பொறுத்து மாதவிடாய் நிறுத்தத்தின் வயது மாறுபடும். உலக அளவில் மாதவிடாய் நிறுத்தத்தின் சராசரி வயது 51 ஆகவும், இந்தியளவில் இது 46.2 வயதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
அறிவியல் ரீதியாக, பெண் பாலின ஹார்மோன் அளவு குறைந்து, அவர்களின் கருப்பைகள் கருமுட்டைகள் வெளியிடுவதை நிறுத்தும் போது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகிறது. இதனுடன் பெண்ணின் இனப்பெருக்க காலமும் நிறைவுபெறுகிறது. மாதவிடாய் நிறுத்த வயதை நெருங்கும் பெண்கள், அந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய அறிகுறிகளை சந்திக்கின்றனர். இந்த அறிகுறிகள் வாழ்நாள் முழுவதும் கூட தொடரலாம். மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளை இப்போது தெரிந்து கொள்வோம்.
மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகள்
மாதவிடாய் நிறுத்தத்தின் போது பல உளவியல் மற்றும் உடல் சார்ந்த மாற்றங்கள் வெளிப்படுகின்றன. இதன் நிகழ்வு, தீவிரம், கால அளவு மற்றும் தீவிரத்தன்மை நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த அறிகுறிகள் குறைவான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி மற்றும் ஹார்மோன் மாற்றங்களைக் குறிக்கின்றன. மனநிலை மாற்றங்கள், லேசான மனச்சோர்வு மற்றும் சோகமான உணர்வு போன்ற உணர்ச்சிகரமான மாற்றங்களும் இதில் அடங்கும். மார்பக வலி, முடி உதிர்தல் அல்லது மெலிதல், எடை அதிகரிப்பு, உடலுறவில் நாட்டமின்மை, மூட்டு வலி போன்ற உடல் மாற்றங்கள் மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.
மாதவிடாய் தாமதமாக வருவது, சீரற்ற மாதவிடாய் சுழற்சிகள், குறைந்த அல்லது அதிக நாட்கள் மாதவிடாய் ஏற்படுவது, அதிக அல்லது மிக குறைவான உதிரப்போக்கு போன்ற மாற்றங்கள் மாதவிடாய் நிறுத்தத்தின் மிக முக்கியமான அறிகுறிகளாகும்.
மாதவிடாய் நிறுத்தத்தின் பிற அறிகுறிகள்
மாதவிடாய் நிறுத்தத்தை பின்வரும் அறிவுரைகள் மூலம் உறுதி செய்யலாம்
- திடீர் வெப்பம்: திடீரென உடல் முழுவதும் உணரப்படும் இந்த சூடான உணர்வு உடல் முழுவதும் பரவுகிறது. இது முகம், மார்பு மற்றும் கழுத்தில் மிகவும் தீவிரமாக இருக்கும். அடுத்த கட்டமாக இதனுடன் அதிகப்படியான வியர்வையும் உணரப்படுகிறது.
- திடீர் குளிர்: இது திடீர் வெப்பத்திற்கு பிறகு உடனடியாக உருவாகின்றன. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் ஹைபோதாலமஸின் திறனை ஹார்மோன்கள் பாதிக்கும்போது இந்த வெப்பநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன.
- இரவு வியர்வை: இரவு வேளையில் ஏற்படும் திடீர் உஷ்ணம் அல்லது சூடான உணர்வினால் வியர்வை ஏற்படலாம்.
- பிறப்புறுப்பில் வறட்சி: இது மாதவிடாய் நிறுத்தத்தின் போது, உங்கள் உடலின் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் ஏற்படும் இயற்கையான சரிவு காரணமாக உண்டாகிறது. இதனால் பிறப்புறுப்பு திசுக்கள் மெலிந்து, எளிதில் எரிச்சலடைலாம். இந்த அறிகுறிகள் உடலுறவின் போது அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
- தூக்கமின்மை: மாதவிடாய் நிறுத்தத்தின் போது தூக்கமின்மை அல்லது தூங்குவதில் சிக்கல் போன்ற அறிகுறிகளையும் உணரலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சந்திக்கும் பாலியல் ஆரோக்கிய பிரச்சனைகள்
- கட்டுப்படுத்த முடியாத சிறுநீர்: எப்போதாவது இருமல் அல்லது தும்மல் வரும் போது சிறுநீர் வெளியேறுவது, உடனே சிறுநீர் கழிப்பதற்கான தீவிரமான தூண்டுதல் போன்ற அறிகுறிகளை உணரலாம். சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை இழக்கும் போது இது போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
வயது சார்ந்த இந்த மாதவிடாய் நிறுத்தத்தை பெண்களால் தவிர்க்க முடியாது. இருப்பினும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகள் மூலம் இதன் அறிகுறிகளை சமாளிக்கலாம். சரியான இடைவெளியில் உடல்நலப் பரிசோதனைகள், இரத்தப் பரிசோதனைகள், பாப் ஸ்மியர்ஸ், அல்ட்ராசவுண்ட், மேமோகிராபி போன்ற மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்கால சிக்கல்களைத் தடுக்கலாம். தினசரி உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு முறை மாற்றங்கள், காஃபின் உள்ள பானங்களை தவிர்த்தல் போன்ற சில மாற்றங்கள் மூலம் மாதவிடாய் கட்டத்தை சுலபமாக சமாளித்து, கடந்து விடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வெர்டிகோ தலை சுற்றலுக்கான எளிய யோகாசனங்கள்
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com