உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் தினமும் ஒரு ஆசனம் குறித்து பகிர்ந்து வரும் நிலையில் நாம் அடுத்து பார்க்கப் போகும் ஆசனம் மர்ஜரி ஆசனம். இது ஆங்கிலத்தில் CAT - COW என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்யும் போது நாம் இரு நிலைகளில் இருப்போம். அது பூனை மற்றும் மாடு போல இருக்கும்.
இந்த ஆசனத்தைத் தொடங்கும் போது வஜ்ராசனம் நிலையில் இருப்பது அவசியம். அதனால் முதலில் வஜ்ராசனத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். நேராக அமர்ந்து கால்களை நீட்டி அதன் பிறகு இரண்டு கால்களையும் மடித்து கால்கள் மீதே உட்கார முயற்சி செய்யுங்கள். இதை செய்யும் போது சிலருக்கு கடினமாக இருக்கும். அதனால் கால்களுக்கு அடியில் தலையணை வைத்துக் கொள்ளவும் அல்லது குதிகால்கள் மீது தலையணை போட்டுவிட்டு உட்காரவும்.
தற்போது வஜ்ராசனம் நிலையில் இருந்து கைகளை நீட்டி வையுங்கள். இரண்டு கால்களுக்கு இடையிலும் இடைவெளி இருக்க வேண்டும். இடது கைக்கு நேராக இடது கால் இருக்க வேண்டும், அதே போல வலது கைக்கு நேராக வலது கால் இருக்க வேண்டும். அதே போல கைகளின் நிலையைக் கவனிக்கவும். தோள்பட்டைக்கு நேராக கைகள் கீழே இருக்க வேண்டும். உடலை விட்டு தூரமாகத் தள்ளியோ அல்லது உடலுக்கு மிகவும் நெருக்கமாகவோ வைக்கக் கூடாது.
நிலையை மாற்றி வைத்து யோகாசனம் செய்தால் தோள்பட்டை வலிக்கும். தற்போது முதுகு தண்டை உட்புறமாகத் தள்ளி நன்றாக வளைய வேண்டும். அதன் பிறகு தலையை மேலே நிமிர்த்திப் பார்க்கவும். தற்போது நீங்கள் ஒரு பூனையைப் போல் இருப்பீர்கள். மூச்சை விட்டுக் கிழே குனிந்து வயிற்றை உட்புறமாகத் தள்ளுங்கள்.
மேலும் படிங்க தைராய்டு பிரச்சினை இருந்தால் சேது பந்தாசனம் செய்யுங்க
மீண்டும் இந்த ஆசனத்தை முயற்சி செய்யவும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டே முதுகை உட்புறமாக அதாவது கீழ் நோக்கித் தள்ளித் தலையை மேலே உயர்த்திப் பார்க்கவும். அதே போல மூச்சை விட்டுத் தலையை நன்கு குனிந்து வயிற்றை உட்புறமாகத் தள்ளவும். தற்போது Cow போஸில் இருப்பீர்கள். மீண்டும் வஜ்ராசனம் நிலைக்கு வந்துவிடுங்கள். ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.
இந்த ஆசனத்தை வேறுவிதமாகவும் செய்யலாம். கால்களை மடித்து உட்கார்ந்து கைகளை முட்டி பகுதியில் வைக்கவும். உட்கார்ந்த நிலையிலேயே தலையைப் பின் நோக்கி நகர்த்தி முதுகை வளைக்கவும். அதே போல தலையைக் குனிந்து வயிற்று பகுதியை உள்ளே தள்ளவும்.
இந்த ஆசனத்தை செய்யும் போது முதுகு தண்டிற்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். நுரையீரலுக்கு மிகவும் நல்லது.
மேலும் படிங்க உற்று நோக்கும் திறன் மேம்பட கருடாசனம் செய்யுங்கள்
சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த ஆசனத்தைச் செய்யலாம். ஆனால் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை, மணிகட்டில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்த்துவிடலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com