குளிர் காலத்தில் வெளியில் பனி அதிகமாக இருக்கும் போது, வீட்டிற்குள் இருக்கவே பலரும் விரும்புகிறோம். குறைவான வெப்பநிலையில், மெல்ல நகரும் இந்த குளிர் கால நாட்களில் உடற்பயிற்சி செய்யவும் மனம் விரும்பாது. ஆனால் குளிரை சமாளித்து உடற்பயிற்சி செய்வது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. இது உங்கள் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, பருவ கால நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. குளிர்காலத்திலும் தினமும் உடற்பயிற்சி செய்வது மனித உடலுக்கு அத்தியாவசியமானது, இது உங்கள் உடலை சுறுசுறுப்பாக செயல்பட உதவும். குளிர் காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. நிறைய கலோரிகளை குறைக்கலாம்
குளிர்காலத்தில் நீங்கள் எந்த வகை உடற்பயிற்சி செய்தாலும் அதிக அளவிலான கலோரிகளை எரிக்க முடியும். வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியேறும். குளிர்காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் தனது வெப்பநிலையை சமநிலைப்படுத்தி சீராக வைத்துக்கொள்ள கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் தன்னை சூடாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும் போது வளர்ச்சிதை மாற்றமும் வேகமடைகிறது. இதனால் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகளும் எரிக்கப்படுகின்றன.
2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்
பல வழிகளில், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு உடற்பயிற்சியுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. ஆராய்ச்சியின் படி, தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு காய்ச்சல், நிமோனியா மற்றும் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. குளிர்காலத்தில் ஒரு சிலரை தவிர்த்து பலரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நேரத்தில் கிருமிகள் மற்றும் வைரஸ் சமூகம் முழுவதும் பரவுவாதல், தொற்று அடிக்கடி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. உடற்பயிற்சி செய்வது சளி மற்றும் காய்ச்சலின் அறிகுறிகளை சமாளிக்க உதவுகிறது. மேலும், நோய்வாய்ப்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
3. வைட்டமின் D தேவையை பூர்த்தி செய்யும்
குளிர்காலத்தில் வீட்டின் உள்ளேயே அதிக நேரம் செலவிடுகிறோம், இதனால் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படலாம். இதை தவிர்க்க வீட்டிற்கு வெளியே உடற்பயிற்சி செய்யலாம். வைட்டமின் D உங்கள் எலும்புகளை நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கிறது.
4. உங்களை சூடாக வைத்திருக்கும்
உடற்பயிற்சி அதிக அளவு வெப்பத்தை உருவாக்குவதால், நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது இயல்பை விட வெப்பமாக உணரலாம். இருப்பினும் வியர்வை வற்றும் போது, வெப்பம் குறைந்து மீண்டும் குளிச்சியாக உணருவீர்கள். குளிர்ந்த காற்றினால் ஏற்படும் நடுக்கத்தை தவிர்க்க உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சியின் போது ஏற்படும் உடல் அசைவுகளால் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
5. வெளி காற்றை சுவாசிக்கலாம்
எந்தவொரு மிதமான அல்லது தீவிர உடற்பயிற்சி செய்யும் போதும், இதயம் மற்றும் நுரையீரல் முழு திறனுடன் செயல்படுகின்றன. இதனால் இதயத்தில் இரத்த ஓட்டமும், நுரையீரலில் காற்றோட்டமும் மேம்படுத்தப்படுகின்றன. உடற்பயிற்சி செய்யும் போது ஒருவர் வெளியே சென்று சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். குளிர்காலத்தில்(குறிப்பாக யாராவது நோய்வாய்ப்பட்டிருக்கும் போது) வீட்டின் உள்ளே மறுசுழற்சி செய்யப்பட்ட காற்றை சுவாசிக்கும் போது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. எனவே உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் ஆடைகள் அணிந்து சுத்தமான வெளி காற்றை சுவாசித்தப்படி உடற்பயிற்சி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik