உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லாமல் உடல்எடையைக் குறைக்க உகந்த வழி என்றால் அது நடைபயிற்சி தான். நடைபயிற்சி செல்வதன் மூலம் நாம் உடனடியாக பத்து கிலோ எடையை குறைக்க முடியும் என பொய் சொல்லப் போவதில்லை. ஏனெனில் உடலில் கலோரிகளை எரிப்பது எளிதான காரியமல்ல. இதில் பாலினம், உட்கொள்ளும் உணவின் அளவு மற்றும் நடைபயிற்சியின் வேகம் ஆகியவை அடங்கும். நீங்கள் சோம்பேறித்தனமாக உணரும் போதெல்லாம் உடனடியாக நடைபயிற்சி செல்லுங்கள். இதனால் உடல் செயல்பாடுகள் துரிதப்படும். மேலும் எடை இழப்பு பயணத்திற்கும் நடைபயிற்சி உதவும். அந்த வகையில் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி சென்றால் எவ்வளவு எடையைக் குறைக்க முடியும் என இந்த பதிவில் பார்ப்போம்.
கலோரி - கிலோ கணக்கீடு
நாம் உடல் எடையைக் கிலோ என்ற அளவில் குறிப்பிடுகிறோம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் நபர்கள் கலோரி எரிப்பின் மூலமே அதை சாத்தியப்படுத்த முடியும். ஒரு கிலோ என்பது 7 ஆயிரத்து 700 கலோரி ஆகும். அதாவது உடலில் ஒரு கிலோ கொழுப்பை கரைக்க விரும்பினால் 7,700 கலோரிகளை எரிக்க வேண்டும். நீங்கள் குறைக்க விரும்பும் எடையை பொறுத்து கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
- 3 கிலோ - 23,100 கலோரி எரிப்பு
- 5 கிலோ - 38,500 கலோரி எரிப்பு
- 7 கிலோ - 53,900 கலோரி எரிப்பு
- 10 கிலோ -77,000 கலோரி எரிப்பு
- 12 கிலோ - 92,400 கலோரி எரிப்பு
உதாரணமாக நீங்கள் 75 கிலோவில் இருந்து 72 கிலோவுக்கு உடல் எடையைக் குறைக்க விரும்பினால் உடலில் இருந்து 23,100 கலோரியை எரிக்க வேண்டும். நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 2,000 முதல் 2,200 கலோரி உட்கொள்கிறோம். உடற்பயிற்சி இன்றி நடைபயிற்சி மூலம் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இந்த பதிவு மிகவும் உதவும்.
5 கிலோ தூரம் நடந்தாலும் உங்கள் எடை குறைப்பு என்பது நடைபயிற்சியின் வேகம் மற்றும் நடக்கும் இடத்தைப் பொறுத்தது. உதாரணமாக 70 கிலோ எடையுள்ள நபர் 5 கிலோ தூரத்தை மிதமான வேகத்தில் நடந்து முடித்தால் 400 கலோரிகளை எரிக்க முடியும். இந்த கலோரி எண்ணிக்கை சிலருக்கு மாறுபடலாம். ஏனென்றால் உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் அதை எரிப்பது சற்று கடினம்.
நடைபயிற்சி மூலமாக கலோரி எரிப்பை அதிகப்படுத்த விரும்பினால் அதற்கு சில வழிகள் உள்ளன.
நடைபயிற்சியின் வேகம்
5 கிலோ மீட்டர் தூரமும் ஒரே வேகத்தில் நடந்தால் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்காது. அதுவே நீங்கள் 300 மீட்டருக்கு ஒரு முறை வேகத்தை அதிகப்படுத்தி விறுவிறுவென நடந்தால் அதிகளவு கலோரிகளை எரிக்க முடியும். நடைபயிற்சி சென்றால் நிச்சயம் வியர்க்க வேண்டும்.
நடக்கும் பாதை
நீங்கள் சாலையிலும், மண் பாதையிலும், கரடு முரடான மலை பாதையிலும் நடப்பதற்கு வித்தியாசம் உள்ளது. முடிந்தவரை கரடு முரடான மலை பாதையை தேர்வு செய்து 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கவும்.
நிதானம் தேவை
தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறோம்... ஆனால் உடல் எடை குறையவில்லையே என நடைபயிற்சி செல்வதை நிறுத்திவிடக்கூடாது. சிறு சிறு முயற்சிகளே வெற்றி படிகளை உருவாக்கும்.
இந்த மூன்று விஷயங்களை தவிர்த்து கலோரி எரிப்புக்கு மேலும் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க தவறினால் உடல் எடை குறையவே குறையாது. நீங்கள் தேவையான அளவை விட அதிகளவு புரதச் சத்து எடுத்தால் அது கொழுப்பாக மாறும். இதை குறைப்பது கடினம். எனவே உங்கள் உடலுக்கு ஏற்ற உணவு முறையை ஊட்டச்சத்து நிபுணரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation