நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பிலோ அல்லது தனி வீட்டிலோ வசித்தாலும், எலி தொல்லை என்பது ஒரு கடினமான பிரச்சனையாகும். அவை வீட்டில் உள்ள வயர்களை கடிப்பதும், உணவு பொருட்களை உண்பதும் மிகவும் தொந்தரவாக இருக்கும். ஆனால், எலிகள் வெறுமனே தொல்லை கொடுக்கும் உயிரினம் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. ஏனெனில் அவை லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் ஹண்டாவைரஸ் போன்ற அபாயகரமான நோய்களை பரப்பலாம், அத்துடன் உணவு பொருட்களையும் அசுத்தப்படுத்தலாம்.
மேலும் படிக்க: வீட்டில் பல்லிகள் தொல்லை அதிகமாக இருக்கிறதா? அதனை விரட்ட இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
வீட்டில் இருந்து எலிகளை விரட்ட கடுமையான ரசாயனங்கள் அல்லது விலையுயர்ந்த பூச்சிக் கொல்லிகள் தேவையில்லை. மாறாக, சில எளிய மற்றும் புத்திசாலித்தனமான உத்திகள் மூலம் அவற்றை விரட்டலாம். வீட்டின் வாசல்களை அடைப்பது முதல் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது வரை பயனுள்ள சில குறிப்புகளை இங்கே காணலாம்.
எலிகள் சிறிய உருவம் கொண்டிருப்பதால், ஒரு நாணயம் நுழையக்கூடிய அளவுக்கு சிறிய துளைகள் வழியாகவும் அவை வீட்டிற்குள் நுழைய முடியும். எனவே, அவை நுழையாமல் தடுக்க, கதவுகள், ஜன்னல்கள், குழாய்கள் மற்றும் காற்றோட்ட பகுதிகளை சுற்றியுள்ள விரிசல்கள், துளைகள் அல்லது இடைவெளிகளை சரிபார்த்து அடைப்பது தான் எளிமையான வழி. சமையலறை, குளியலறை மற்றும் அடித்தள பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், இந்த இடங்கள் வழியாகவே எலிகள் பெரும்பாலும் வீட்டிற்குள் நுழைகின்றன. ஒரு சிறிய இடைவெளி கூட எலி ஊர்ந்து செல்லவும், வீட்டிற்குள் புகுந்து தொல்லை கொடுக்கவும் போதுமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எலிகள் பொதுவாக உணவு தேடியே வீடுகளுக்குள் நுழைகின்றன. எனவே, அவற்றுக்கு உணவு இல்லாமல் செய்வது, அவை வீட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கான எளிதான வழியாகும். செல்ல பிராணிகளின் உணவு உட்பட, அனைத்து உணவு பொருட்களையும் காற்று புகாத டப்பாக்களில் சேமித்து வைக்க வேண்டும்.
மேலும், இரவு முழுவதும் பாத்திரங்களை சின்க்கில் போட வேண்டாம். உங்கள் குப்பைக் கூடை இறுக்கமாக மூடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். சிதறியுள்ள உணவு துணுக்குகளை உடனடியாக சுத்தம் செய்வது, தினமும் இரண்டு முறை சமையலறையை சுத்தம் செய்வது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ, அவ்வளவு தூரம் எலிகள் உங்கள் வீட்டை விரும்பாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: 2 மாத்திரைகள் மட்டும் இருந்தால் போதும்; உங்கள் வீட்டின் பழைய மெத்தையை புதியது போன்று மாற்றலாம்!
செய்தித்தாள்கள், அட்டை பெட்டிகள் மற்றும் பயன்படுத்தப்படாத துணிகள் போன்ற பொருட்களை குவித்து வைப்பது, எலிகள் மறைந்து கொள்வதற்கு ஏற்ற இடமாகிறது. எனவே, உங்கள் வீட்டில் எலி தொல்லையை தடுக்க அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
அட்டை பெட்டிகளுக்கு பதிலாக, எலிகளால் கடிக்க முடியாத சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்களில் பொருட்களை ஒழுங்குபடுத்தி வையுங்கள். உணவு துணுக்குகள் அல்லது குப்பைகள் சேரக்கூடிய தரைகள் மற்றும் ஃபர்னிச்சருக்கு பின்னால் உள்ள இடங்களை சுத்தம் செய்யுங்கள். உங்கள் வீட்டை சுத்தமாகவும், தேவையற்ற பொருட்கள் இல்லாமலும் வைத்திருப்பது எலிகள் மறைந்து கொள்வததை தடுக்கும்.
புதினா எண்ணெய், பூண்டு மற்றும் மிளகாய் போன்ற பொருட்களின் வாசனை எலிகளை இயற்கையாகவே விரட்டக் கூடியவை. எனவே, காட்டன்களில் புதினா எண்ணெயை நனைத்து, எலிகள் நுழையக்கூடிய இடங்கள், சின்க்குக்கு அடியில் உள்ள பகுதிகளில் வைக்கலாம். இது எலிகளை உங்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்க உதவும். இதேபோல், உங்கள் வீட்டின் வாசல்கள், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் போன்ற இடங்களில் பூண்டு அல்லது மிளகாயை வைக்கலாம்.
கவனிக்கப்படாத மற்றும் தேவையற்ற பொருட்கள் குவிந்திருக்கும் பால்கனிகள் மற்றும் தோட்டங்களில் எலிகள் எளிதாக அடைக்கலம் பெறுவதை நாம் காணலாம். அதிகமாக வளர்ந்த புற்கள், மரக் குவியல்கள், உரம் தயாரிக்கும் பெட்டிகள் மற்றும் அடர்ந்த புதர்கள் ஆகியவை எலிகள் மறைந்து கொள்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ற இடங்களை உருவாக்குகின்றன.
எனவே, இதை தடுக்க புல்வெளியை வெட்டியும், கீழே விழுந்த பழங்கள், குப்பைகள் அல்லது பறவை உணவுகளை அகற்றியும் சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் தோட்டத்தில் அல்லது பால்கனியில் உரம் தயாரிக்கும் தொட்டி இருந்தால், அது சீல் செய்யப்பட்டு, தரையிலிருந்து சற்று உயரமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் காய்கறிகள் வளர்த்தால், எலிகள் உள்ளே நுழையாதபடி சரியான வேலி அமைப்பை உருவாக்குங்கள். சுத்தமான மற்றும் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டமும், பால்கனியும் அழகாக இருப்பதுடன், எலிகள் உங்கள் வீட்டிற்கு அருகில் வருவதையும் தடுக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com