எவ்வளவோ செயற்கை பானங்கள் இருந்தாலும் இயற்கை கொடுத்த இளநீருக்கு என்றுமே மக்களிடையே நல்ல மவுசு இருக்கிறது. அதனாலேயே விலை அதிகம் இருந்தாலும் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று பெரும்பாலான மக்கள் கோடையில் உடலில் நீரிழப்பை தவிர்க்க இளநீரை வாங்கி பருகுகின்றனர். இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், தாதுகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் அதை குடித்து உடலை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க முடியும். என்ன தான் இளநீர் ஆரோக்கியத்திற்கு அமிர்தம் என்றாலும் அதிகளவில் குடிப்பது உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்
செயற்கை இனிப்புகள் இல்லாத இளநீரில் கணிசமான அளவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவர்கள் மருத்துவ அறிவுரை பெற்று இளநீரை குடிக்க வேண்டும்.
செரிமான கோளாறுகள்
வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் எக்கச்சக்க நன்மைகள் இருக்கலாம். ஆனால் அது ஒரு அளவுக்கு மட்டுமே. வெறும் வயிற்றில் இளநீரை அதிகமாக குடித்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். இளநீரில் அதிகமாக உள்ள பொட்டாசியத்தால் வயிறு தொந்தரவு அடையும். இது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். அதனால் செரிமான பிரச்சனைகள் இருக்கும் சமயத்தில் இளநீர் குடிக்க வேண்டாம்.
இரத்த அழுத்த பிரச்சனை உண்டாகும்
இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை அதிகம் குடிப்பது இரத்த அழுத்தத்தை பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனெனில் இளநீரில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதே வேளையில் இளநீரில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதன் தாக்கத்தால் இரத்த அழுத்தத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் உங்கள் உடல்நிலையை பாதிக்கும். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
எலக்ட்ரோலைட் சமநிலையின்மை
இளநீரில் உள்ள முக்கிய எலக்ட்ரோலைட்களான சோடியமும் பொட்டாசியமும் நீர்ச்சத்தை அதிகரித்து உடல் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. ஆனால் இளநீரில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருக்கும். இதனால் இளநீரை அதிகம் பருகும் போது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை உண்டாகும். இதன் விளைவாக ஹைபோகலீமியா போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஹைபோகலீமியா என்பது இரத்தத்தில் பொட்டாசியம் அதிகரிக்கும் போது ஏற்படும் சோர்வு, தலைச்சுற்றல், உடல் பலவீனம் ஆகும்.
உடல் எடை அதிகரிக்கக்கூடும்
பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்க தங்கள் பயிற்சிகளுக்கு இடையே இளநீர் பருகுவதை பார்த்திருப்போம். ஆனால் அவர்கள் இளநீரை அதிகம் குடிக்க மாட்டார்கள். ஏனெனில் இளநீர் அதிக கலோரிகள் உள்ளடக்கம் கொண்ட பானமாகும். மேலும் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைக்கும் திறனும் சேர்த்து உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். அதனால் உடல் எடையை குறைக்க டயட் பின்பற்றுபவர்கள் இளநீரை அதிகம் குடிக்க வேண்டாம்.
மேலும் படிக்க: கோடை காலத்தில் இந்த காய்கறிகளை சாப்பிடக்கூடாது; ஏன் தெரியுமா?
சிறுநீரக நோய் பாதிப்பு
பொதுவாக சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள எதையும் உட்கொள்ள கூடாது. இளநீரை குடிக்கும் போது அதில் அதிகமாக உள்ள பொட்டாசியம் இரத்தத்தில் அதிகரித்து சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரக பிரச்சனைகளால் அவதிப்படுவோர் இளநீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. அப்படி இளநீரை குடிப்பதாக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனையை பெறுவது முக்கியம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation