தமிழகத்தில் பெரும்பாலான மலைக்கோயில்கள் சிவபெருமானை வழிப்படக்கூடிய இடமாக இருக்கும். குறிப்பிடத்தக்க மலைக்கோயில்களில் பெருமாள் குடி கொண்டிருப்பார். அப்படியான மலைக்கோயில்களில் ஒன்று நாமக்கல் மாவட்டம் பவித்திரம் அருகே அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள் கோயில். இந்த மலைக்கோயிலின் இரண்டு பிரதான தெய்வங்கள் பெருமாள் மற்றும் வீர ஆஞ்சநேயர். இங்கு பெருமாள் சுயம்புவாக காட்சியளிக்கிறார். நாமக்கல் - திருச்சி மாவட்டங்களின் எல்லையில் தலைமலை அமைந்துள்ளதால் மலையேற்றத்தின் போது இரண்டு மாவட்டங்களின் அழகை கண்டு ரசிக்கலாம். தலைமலை செல்வது எப்படி ? மலையேற்ற பாதையில் உள்ள சவால்கள் ? தலைமலை கோயில் வரலாறு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தலைமலை வரலாறு
தலைமலை வரலாறு ராமாயணத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்டெடுக்க ராமன், லட்சுமண் இராவணனுடன் போர் புரிந்த நிலையில் இராவணன் எய்திய விஷ அம்பு லட்சுமண் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. விஷத்தின் தன்மையை முறியடிக்க ஆஞ்சநேயர் இமயமலை சிறு பகுதியை உடைத்து இலங்கை எடுத்து செல்கிறார். அதிலிருந்த மூலிகை பயன்படுத்தி லட்சுமண் உயிர் பிழைத்த பிறகு ஆஞ்சநேயர் சந்தோஷத்தில் மலையை தூக்கி எறிகிறார். அப்படி உருவான மலை தலைமலை என்று வரலாறுகள் கூறுகின்றன. இங்கு சுற்றுவட்டார கிராம மக்கள் பசு, கன்று வழங்கி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலைமலை மலையேற்றம்
தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோயில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மலைக்கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த தலைமலை கோயில் சுற்றுவட்டார கிராம மக்களின் குல தெய்வமாகவும் கருதப்படுகிறது. தமிழகத்தின் பல மலையேற்றங்கள் மிகவும் கடினமாக தெரியும். ஆனால் தலைமலை மலையேற்றம் மற்ற மலைகளை ஒப்பிடுகையில் எளிதானதே.
மலை அடி வாரத்தில் இருந்து பாறைகளில் ஏறி செல்வதும், சில இடங்களில் செங்குத்தான அமைப்பில் ஏறுவதும், மலை உச்சியில் படிக்கட்டில் ஏறி செல்வதுமாக இருக்கும். மலைப்பாதையில் வழி தவறாமல் இருக்க அம்பு குறி பாறைகளில் அம்பு குறி வரையப்பட்டு இருக்கும். மலையேற தொடங்கிய சில தூரத்திலேயே விளக்கேற்றி வழிபட சுவாமி சிலைகள் இருக்கும். இந்த மலையேற்றம் ஏறுவதற்கு 3-4 மணி நேரமும் தரை இறங்குவதற்கு 2 மணி நேரமும் எடுக்கும். ஊரணி குளத்தை அடைந்துவிட்டால் உங்களுடைய பயணம் முக்கால் கிணறு தாண்டிவிட்டதாக அர்த்தம். அங்கிருந்து 45 நிமிடங்கள் மலையேறினால் தலைமலை உச்சி கோயிலை அடையலாம். அங்கு ஆஞ்சநேயர், கிருஷ்ணர், பெருமாளை வழிபடலாம். செல்லும் பாதையில் காவிரி ஆறு, பல மலைகள் பசுமையாக தெரியும். நீங்கள் அங்கு தங்கி வழிபடுவதாக இருந்தால் ஊரணி குளத்தை கடந்ததும் பெருமாள் சத்திரம் இருக்கும். விசேஷ நாட்களில் ஊர் மக்கள் அங்கு தங்குவர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்படும்.
தலைமலை செல்வது எப்படி ?
தலைமலை இரண்டு மாவட்டங்களின் எல்லையில் அமைந்திருப்பதால் இரண்டு வழிகளை தேர்ந்தெடுக்கலாம். நாமக்கல்லில் இருந்து பவித்திரம் சென்று அங்கிருந்து நீலியாம்பட்டி சென்று உள்ளே 5.5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் மலை அடிவாரத்தை அடையலாம். அதே போல திருச்சி வழியாக செல்ல முசிறி அடைந்து அங்கிருந்து நீலியாம்பட்டி செல்லலாம். மலையேறுவதற்கு நீலியாம்பட்டி, வடவாத்தூர், எருமப்பட்டி உட்பட மொத்தம் 5 பாதைகள் உள்ளன. சொந்த வாகனத்தில் சென்றால் நீலியாம்பட்டி வழியாக பயணித்து மலை அடிவாரம் செல்லுங்கள். ஏனெனில் புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமே சிறப்பு பேருந்து வசதி உண்டு. பிற நாட்களில் ஷேர் ஆட்டோ தேவைப்படும். பேருந்து போக்குவரத்து நீலியாம்பட்டி கிராமம் வரையில் மட்டுமே இருக்கும்.
தலைமலை பயணம் வசதி & ஏற்பாடுகள்
மலை அடிவாரத்தில் குளியல் அறை, கழிப்பறை உண்டு. மலைப்பாதையில் ஒரு சில கடைகள் மட்டுமே இருக்கும். எனவே அடிவாரத்தில் மலை ஏற தொடங்கும் முன்பே தண்ணீர் வாங்கிவிட்டு மலையேறவும். செல்லும் வழியில் அதிகளவு குரங்குகள் இருக்கும். எனவே உணவு பொருட்களை எடுத்துச் செல்வதாக இருந்தால் கவனம் தேவை. காலை 5 மணிக்கு மலை ஏற ஆரம்பித்தால் 11 மணிக்குள் கீழே இறங்கிவிடலாம். இங்கு செல்வதற்கு சிறப்பு அனுமதி தேவையில்லை. எனினும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மலையேற்றம் மேற்கொள்ளுங்கள். மலைப்பாதையில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவு நேர மலையேற்றம் தவிர்க்கவும்.
மேலும் படிங்கதமிழகத்தின் டாப் 5 நீர்வீழ்ச்சி தலங்களுக்கு சென்று கோடை வெயிலில் இருந்து தப்பிச்சுக்கோங்க
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation