உலக அதிசயமான தாஜ்மஹாலை பல தமிழ் படங்களில் கண்டு இருப்போம். நாட்டின் தலைநகரான டெல்லியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆக்ராவில் புகழ்பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. வட இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் தென் மாநிலங்களை சேர்ந்த மக்கள் தவறவிடாத இடங்களில் தாஜ்மஹாலும் ஒன்று. மனைவியின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ் மஹாலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஆக்ராவுக்கு வருகை தந்து தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க விரும்புவோருக்காக இந்த பதிவு. பயண செலவு, தங்குமிடம், ஆக்ராவில் போக்குவரத்து வசதி, உணவுக்கு எவ்வளவு செலவாகும் ? குறைந்த பட்ஜெட்டில் சுற்றிப் பார்ப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தாஜ் மஹால் சுற்றுலா
தாஜ் மஹால் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது. வெள்ளிக்கிழமையை தவிர வாரத்தின் இதர நாட்களில் தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு. தாஜ் மஹாலை காலை சூரிய உதய நேரத்திலும் மாலை சூரியன் மறைவுக்கு முன்பாக காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். காலை 5.30 மணி அளவில் தாஜ் மஹால் திறக்கப்படும். அதே போல மாலையில் சூரியன் மறையும் 15 நிமிடங்களுக்கு முன்பாக தாஜ் மஹால் மூடப்படும். ராஜஸ்தானில் கிடைக்க கூடிய மக்ரானா மார்பிள் பயன்படுத்தி தாஜ்மஹாலை கட்டியுள்ளனர்.
தாஜ் மஹால் நுழைவுக் கட்டணம்
தாஜ் மஹாலுக்கு மேற்கு, கிழக்கு என இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. ஆக்ரா ரயில் நிலையத்தில் இருந்து தாஜ்மஹால் மேற்கு கேட் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காலை சூரியன் உதயமாகும் 45 நிமிடங்களுக்கு முன்பாக உங்களுக்கு டிக்கெட் வழங்குவார்கள். பல படங்களில் நாம் பார்த்திருப்போம் தாஜ் மஹாலுக்கு முன்பாக நீர் பாதை இருக்கும். அதுவரை செல்வதற்கு 50 ரூபாய் கட்டணம். உள்ளே கல்லறை பகுதி வரை செல்ல கூடுதலாக 200 ரூபாய் கட்டணம். 15 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது. தெற்கு வாயில் தாஜ் மஹாலை விட்டு வெளியேறுவதற்கு மட்டுமே. சுமார் 2 மணி நேரம் தாஹ்மஹாலை சுற்றிப் பார்க்கலாம்.
மேலும் படிங்க300 ரூபாயில் குருசடை தீவு பயணம்; ராமேஸ்வரத்தில் துள்ளிக்குதிக்கும் டால்பின்கள்
தாஜ் மஹால் பயணம்
சென்னையில் இருந்து நீங்கள் ஆக்ரா வருவதாக இருந்தால் சென்னை டூ டெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயிலில் கிளம்புங்கள். சாதாரண படுக்கை வகுப்பில் ஒரு நபருக்கு 850 ரூபாய் பயண கட்டணமாகும். ஏசி வகுப்பில் பயணிக்க ஒரு நபருக்கு 1950 ரூபாய் பயண கட்டணமாகும். இந்த இரயிலில் பயணித்தால் சென்னையில் இரவு 9 மணிக்கு கிளம்பி ஒன்றரை நாள் கழித்து காலை 4 மணி அளவில் ஆக்ரா சென்றடைவீர்கள். ஆக்ரா வந்த பிறகு நீங்கள் உள்ளூரில் பயணிக்க எலக்ட்ரிக் ஷேர் ( டுக் டுக் ) ஆட்டோ பயன்படுத்தலாம். ஒரு நபருக்கு அதிகபட்சமாக வாங்குவார்கள்.
ஆக்ராவில் தங்குமிடம்
ஆக்ரா ரயில் நிலையத்திலேயே குறைந்த கட்டணத்தில் தனி நபர் தங்கும் அறைகள் உண்டு. நீங்கள் குடும்பமாக வந்தால் உள்ளூர் விடுதிகளில் 2ஆயிரம் ரூபாய்க்கு மேல் கேட்பார்கள். சாப்பிடுவதற்கு பல கடைகள் உண்டு. உங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்ப சுகாதாரமான கடைகளில் தேவையானதை வாங்கி சாப்பிடலாம். ஆக்ரா வந்தால் நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் ஆக்ரா கோட்டை. 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது. தவறாமல் சுற்றிப் பாருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation