தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக அரசின் சுற்றுலா துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அறுபடை வீடுகள், நவகிரக தலங்களுக்கான ஆன்மிக சுற்றுலா போல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களுக்கும் சுற்றுலா அழைத்து செல்ல பேக்கேஜ்கள் உள்ளன. அந்த வகையில் தமிழக சுற்றுலா துறையின் ஒரு நாள் பாண்டிச்சேரி சுற்றுலா கட்டணம், பயண விவரம், சுற்றுலா தலங்கள், உணவு வசதி உட்பட அனைத்து விவரத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு நாள் பாண்டிச்சேரி சுற்றுலா
இந்த சுற்றுலா செல்ல விரும்பும் நபர்கள் https://www.ttdconline.com/pondicherry-tour.html என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டுமே பாண்டிச்சேரி சுற்றுலா வசதி உண்டு. தலா ஒரு நபருக்கு 1,850 ரூபாய், முன்பதிவு கட்டணம் என மொத்தம் இந்த சுற்றுலாவின் செலவு 2 ஆயிரம் ரூபாய். காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு இந்த பயணம் நிறைவடையும். இதில் நீங்கள் 6 இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
பாண்டிச்சேரி சுற்றுலா விவரம்
காலை 6 மணிக்கு நீங்கள் திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முன்பதிவு விவரத்தை அளித்த பிறகு சில நிமிடங்களுக்கு காத்திருங்கள். காலை 6.30 மணி அளவில் ஏசி பஸ் அல்லது வேனில் இந்த சுற்றுலா தொடங்கும். கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்து நீங்கள் பாண்டிச்சேரிக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். காலை 8 மணிக்கு டிபன் சாப்பிடுவதற்கு மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா துறை அலுவலகத்தில் பேருந்து நிற்கும். அங்கு காலை உணவாக இட்லி, பொங்கல், பூரி, வடை வழங்கப்படும். கடந்தாண்டு இந்த திட்டத்தில் உணவிற்கு நீங்கள் தனியே காசு செலவு வேண்டியிருந்தது. தற்போது கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பதால் உணவும் வழங்கப்படுவதாக தகவல். எதற்கும் முன்பதிவின் போது விசாரித்துக் கொள்ளுங்கள்.
பாண்டிச்சேரி சுற்றுலா தலங்கள்
பாண்டிச்சேரியில் முதல் நிறுத்தம் ஆரோவில். பயணத்தில் உங்களுக்கு வரும் அரசு அதிகாரி ஒருவர் உள்ளே உங்களை அழைத்துச் செல்வார். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு ஆரோவில் அழகை கண்டு ரசிக்கலாம். பசுமை மிகு காட்சிகள் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற சூழலாக தெரியும். 10 மணியில் இருந்து 11.15 மணி வரை ஆரோவில்-ல் நேரம் செலவிடுவீர்கள். வெளியே வருவதற்கு தனி பேருந்தில் இலவசமாக அழைத்து வரப்படுவீர்கள். அங்கிருந்து பண்டிச்சேரிக்குள் நுழையும் இடத்தில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் ஏசி பஸ் நிற்கும்.
மேலும் படிங்கவேலூர் மாவட்டத்தின் முக்கியமான ஏழு சுற்றுலா தலங்கள்! தவற விடாதீங்க... கண்டிப்பாக சுற்றிப் பாருங்க...
பாண்டிச்சேரி அருங்காட்சியகம்
பாண்டிச்சேரி அருங்காட்சியத்தில் இலவசமாக அனுமதிக்கப்படுவீர்கள். உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை. அங்குள்ள பிரெஞ்ச் காலனியில் புகைப்படங்கள் எடுத்து சாலையோரக் கடைகளில் தேவையான பொருட்களை வாங்கி மகிழுங்கள். சரியாக ஒரு மணி அளவில் பாண்டிச்சேரி கடற்கரைக்கு பேருந்து செல்லும். அங்கு ஒரு மணி நேரம் உற்சாக குளியல் போட்ட பிறகு மதிய உணவு வழங்கப்படும். 2 மணிக்கு பிறகு அரவிந்தர் ஆசிரமம் அழைத்து செல்லப்படுவீர்கள். இங்கு நேரம் செலவிட்ட பிறகு சென்னையை நோக்கி பயணம் தொடரும். ஆனால் சரியாக 4 மணி அளவில் முதலியார் குப்பத்தில் படகு சவாரி காத்திருக்கிறது.
உயிர் காக்கும் உபகரணங்கள் அணிவிக்கப்பட்டு இயந்திர படகில் சுமார் 20 நிமிடங்ளுக்கு சவாரி செய்யலாம். அப்போது ஏராளமான பறவைகளை காண முடியும். இதன் பிறகு பயணம் தொடங்கிய இடத்திற்கு பஸ் செல்லும். சென்னைக்குள் நுழைந்த பின் உங்களுக்கு ஏற்ற இடத்தில் இறங்க அனுமதிப்பார்கள். குடும்பமாக சுற்றுலா செல்ல விரும்புவோர் இந்த வாய்ப்பை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation