ரூ.1300ல் ஒரு நாள் திருச்சி சுற்றுலா திட்டம் ; 6 முக்கிய தலங்களுக்கு அழைத்துச் செல்லும் அரசு

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சோழர்களின் தலைநகரமான திருச்சியின் முக்கியமான சுற்றுலா தலங்களை ஒரே நாளில் காணும் விதமாக தமிழக அரசின் சுற்றுலா துறை ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒரே நாளில் திருச்சி மாவட்டத்தின் ஆறு முக்கிய தலங்களை நீங்கள் காணலாம்.
image
image

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழக அரசின் சுற்றுலா துறை பிரத்யேக திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தின் 4வது பெரிய நகரமும் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரான திருச்சியின் முக்கியமான வழிபாட்டு மற்றும் சுற்றுலா தலங்களை ஒரே நாளில் காண சுற்றுலா துறையினால் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு நபருக்கு ஆயிரத்து 300 ரூபாய் கட்டணமாகும். காலை 7.45 மணி அளவில் இந்த பயணம் தொடங்கி இரவு 8 மணி அளவில் இந்த பயணம் நிறைவு பெறும். குடும்பத்தோடு ஒரு நாள் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் தமிழக சுற்றுலாத்துறையின் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

jambukeshwarar temple

திருச்சிக்கு ஒரு நாள் சுற்றுலா

இந்த சுற்றுலாவை மேற்கொள்ள https://www.ttdconline.com/trichy_tour.html என்ற தளத்தில் முன்பதிவு செய்யவும். நேரடியாக முன்பதிவு செய்ய விரும்புவோர் மத்திய பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள அரசின் ஹோட்டல் தமிழ்நாடு செல்லுங்கள். அங்கே சுற்றுலாத்துறை அதிகாரியிடம் பணம் கொடுத்து முன்பதிவு செய்யலாம். திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், அக்கரைப்பட்டி சாய்பாபா கோவில், கல்லணை, மலைக்கோட்டை ஆகிய ஆறு தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

srirangam temple

திருச்சி சுற்றுலா விவரம்

காலை 7.45 மணி அளவில் சுற்றுலாத்துறை அதிகாரி உங்களின் முன்பதிவு விவரத்தை பரிசோதிப்பார். அதன் பிறகு அரசு பேருந்து அல்லது வேனில் இந்த சுற்றுலா பயணம் தொடங்கும். ஆட்களின் எண்ணிக்கை பொறுத்து சுற்றுலா வாகனம் தேர்வு செய்யப்படும். காலை 8 மணிக்கு திருவானைக்காவல் ஜம்புகேஷ்வரர் கோவில் அழைத்து செல்லப்படுவீர்கள். இங்கு நீங்கள் ஒரு மணி நேரம் தரிசனம் செய்யலாம். இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனை அப்பு லிங்கம் என்றழைக்கின்றனர். அடுத்ததாக பயணம் ஸ்ரீரங்கத்தை நோக்கி தொடரும். அங்கு உலகப்புகழ் பெற்ற ஸ்ரீரங்கநாதர் கோயிலில் பெருமாளை தரிசிக்கலாம். இது 108 விஷ்ணு பகவான் தலங்களில் முக்கியமானது.

kallanai

திருச்சி சுற்றுலா தலங்கள்

9.30 மணியில் இருந்து 11 மணிக்குள் ஸ்ரீரங்கத்தில் தரிசனம் முடித்த பிறகு 11.30 மணி அளவில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். இந்த இடங்கள் அனைத்திலும் உங்களுடன் சுற்றுலாத்துறை அதிகாரி வருவார். இது அரசின் சுற்றுலா திட்டம் என்பதால் நுழைவு கட்டணம் கிடையாது. இதை தொடர்ந்து 1 மணி அளவில் தென் இந்தியாவின் ஷீரடி அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். சமயபுரத்தின் அருகே உள்ள இந்த கோவில் ஆசியாவின் மிகப்பெரிய சாய்பாபா கோவில்களில் ஒன்றாகும். இந்த கோயிலின் கட்டடக்கலை நம்மை பிரமிக்க வைக்கும்.

மேலும் படிங்கஏசி பஸ்ஸில் பாண்டிச்சேரி சுற்றுலா : 6 இடங்களுக்கு ரவுண்ட்ஸ் அடிக்க ரூ.2000

கல்லணை, மலைக்கோட்டை

2 மணி அளவில் கெளரி பார்வதி ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக வாகனம் நிறுத்தப்படும். இங்கு உங்களுக்கு சைவ உணவு வழங்கப்படும். சாதம், சாம்பார், ரசம், கூட்டு, அப்பளம் உணவுப் பட்டியலில் இடம்பெறும். இதைத் தவிர்த்து வேறு ஏதாவது வாங்க நினைத்தால் அதற்கு நீங்கள் தனியாக காசு கொடுத்து பெறலாம். சுமார் ஒரு மணி நேர இடைவேளைக்கு பிறகு வெயில் சற்று குறைந்தவுடன் 4 மணி அளவில் கல்லணைக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். கரிகால சோழனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கல்லணையில் காவிரி நீர் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு செல்லும். 5.30 மணி அளவில் இறுதியாக விநாயகர் வசிக்கும் மலைக்கோட்டைக்கு சுற்றுலா வாகனத்தில் செல்வீர்கள். மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் 275 அடி உயர மலையில் உள்ளது. 437 படிக்கட்டு ஏறி மலை உச்சியை நீங்கள் அடையலாம். இங்கு தரிசனம் செய்வதற்கு சுமார் 2 மணி நேர அவகாசம் வழங்கப்படும். நீங்கள் கீழே வந்த பிறகு மேலப்புதூரில் உள்ள அரசின் தமிழ்நாடு ஹோட்டலில் இறக்கி விடப்படுவீர்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP