herzindagi
image

முடி உதிர்வை தடுக்க வேண்டுமா? அடர்த்தியான கூந்தலுக்கு இந்த 5 எண்ணெய்களை பயன்படுத்தவும்

முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் 5 இயற்கை எண்ணெய்கள் குறித்து இதில் பார்க்கலாம். இவை நம் கூந்தலை வலுப்படுத்தி ஆரோக்கியமாக பராமரிக்க பெரிதும் உதவுகின்றன.
Editorial
Updated:- 2025-11-19, 15:03 IST

அடர்த்தியான, கருமையான முடி என்பது ஒரு காலத்தில் நம்முடைய அடையாளமாக இருந்தது. ஆனால், சமீப காலமாக கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் பலருக்கும் ஏற்பட்டுள்ளன. பெருகி வரும் மாசுபாடு, மன அழுத்தம், சீரற்ற வேலை நேரம், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை பலருக்கு இருக்கிறது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து விளம்பரங்களில் வரும் விலையுயர்ந்த சீரம்களை பலர் வாங்குகின்றனர். ஆனால், இதன் மூலம் நமக்கு பலன் கிடைக்கிறதா என்று பார்த்தால் கேள்விக்குறியாக இருக்கிறது. எனினும், இயற்கையான முறையில் முடி உதிர்வை தடுத்து, கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்க முடியுமா என்று கருதுபவர்கள் ஏராளமாக உள்ளனர்.

 

அந்த வகையில், கூந்தலை அடர்த்தியாக வளர்க்கவும், முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்தவும் உதவும் இயற்கையான 5 எண்ணெய்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவை விலை குறைவாக இருப்பதால் பலராலும் எளிதாக வாங்கி பயன்படுத்த முடியும்.

 

தேங்காய் எண்ணெய்:

 

தேங்காய் எண்ணெய்க்கு பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை. இதனை நம் வீடுகளில் அதிகப்படியாக பயன்படுத்தி நாம் பார்த்திருக்கிறோம். தேங்காய் எண்ணெய் ஆழமாக ஊடுருவும் திறன் கொண்டது. அதாவது, சில வகை சீரம்களை போல முடியின் மீது மட்டும் படர்ந்திருக்காமல், முடியின் அடிப்பகுதிக்குள் இது நுழைகிறது. இது புரத இழப்பை குறைக்கிறது, முடி உதிர்வதை தடுக்கிறது மற்றும் கூந்தலை உள்ளிருந்து பலப்படுத்துகிறது.

 

தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது கறிவேப்பிலையை சேர்த்து லேசாக சூடாக்க வேண்டும். பின் இதை ஆற வைத்து, உச்சந்தலை முழுவதும் தேய்க்கவும். கறிவேப்பிலையில் பீட்டா-கரோட்டின் மற்றும் அன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால், இது கூந்தல் வளர்ச்சிக்கு கூடுதல் பலன்களை தருகிறது.

மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் பொலிவை தக்க வைப்பதற்கு செம்பருத்தி பூ எவ்வாறு பயன்படுகிறது என்று தெரியுமா?

 

பாதாம் எண்ணெய்:

 

இதில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அடிப்படையில், உங்கள் கூந்தல் வலிமையை மீண்டும் உருவாக்க தேவையான அனைத்தும் இதில் உள்ளன. உங்கள் முடி எளிதில் உதிரும் தன்மையுடன் இருந்தால், பாதாம் எண்ணெய் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இது கூந்தலுக்கு இயற்கையான ஊட்டமளிக்கிறது.

Almond oil

 

கூந்தல் அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் இதை தினசரி அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தலாம். கூடுதல் வளர்ச்சிக்கு, பாதாம் எண்ணெய்யுடன் சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்தலாம்.

 

ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்:

 

இதனை சிலர் ஆமணக்கு எண்ணெய் என்றும், சிலர் விளக்கெண்ணெய் எனவும் கூறுகின்றனர். இதை கழுவி நீக்குவது கொஞ்சம் கடினமான வேலையாக இருக்கும். ஆனால், இதன் பலன் அற்புதமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதில் ரிசினோலிக் அமிலம் (Ricinoleic Acid) நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், முடி உதிர்வதை குறைக்கவும், புதிய முடிகள் வளரக்கூடிய சூழலை உருவாக்கவும் உதவுகிறது.

 

இது ஒவ்வொரு கூந்தல் இழை மீதும் ஒரு மெல்லிய படலம் போல் படர்ந்து, வறண்டு போவதை தடுத்து, கூந்தல் அடர்த்தியாக தெரிய உதவுகிறது. ஆனால், இந்த எண்ணெய் மிகவும் கனமானது என்பதால், அத்துடன் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற லேசான வகை எண்ணெய்களை கலந்து பயன்படுத்தவும். இதனை இரவு நேரத்தில் தலையில் தேய்த்து விட்டு, காலை எழுந்ததும் குளித்து விடலாம். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் கூட, சில மாதங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

மேலும் படிக்க: முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் கூந்தலை வலுப்படுத்த உதவும் பயோட்டின் சத்து நிறைந்த 7 சைவ உணவுகள் இதோ

 

நல்லெண்ணெய்:


நல்லெண்ணெய்யில் அன்டிஆக்சிடென்ட்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தும் போது முடியின் வேர்க்கால்களுக்கு பலம் கிடைக்கிறது. இதில் காணப்படும் சத்துகள் காரணமாக ஆயுர்வேதத்தில் இதனை பயன்படுத்துகின்றனர். அந்த அளவிற்கு இதில் எண்ணற்ற பயன்கள் உள்ளன.

Sesame oil

 

இதனை லேசாக சூடுபடுத்தி, உச்சந்தலையில் தேய்த்து விட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் குளித்து விடலாம். இவ்வாறு செய்தால் உங்கள் உச்சந்தலை புத்துணர்ச்சியாக இருக்கும். கூந்தலின் வேர்க்கால்களும் வலுவடைந்து, அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்.

 

கறுஞ்சீரக எண்ணெய்:


கூந்தல் வளர்ச்சிக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கறுஞ்சீரக எண்ணெய்யை பலர் அழைக்கின்றனர். இந்த ஆற்றல் மிகுந்த எண்ணெய்யில் தைமோகுவினோன் (Thymoquinone) என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இது முடி உதிர்வுக்கு காரணமான அழற்சியை குறைக்கவும், மந்தமாக இருக்கும் முடியின் வேர்ல்கால்களை தூண்டி அதனை பலப்படுத்தவும் உதவுகிறது.

 

கறுஞ்சீரக எண்ணெய்யை உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, நரை முடி ஏற்படுவதை தடுக்கிறது மற்றும் இழந்த கூந்தல் அடர்த்தியை திரும்பக் கொண்டு வருகிறது. சிறந்த பலன்களுக்கு, சிறிதளவு எண்ணெய்யை லேசாக சூடாக்கி, அதை தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயுடன் கலந்து வாரத்திற்கு இரண்டு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள். இவ்வாறு தொடர்ந்து பின்பற்றும் போது நல்ல பலன்களை காணலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com