herzindagi
image

முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் கூந்தலை வலுப்படுத்த உதவும் பயோட்டின் சத்து நிறைந்த 7 சைவ உணவுகள் இதோ

முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்தி உங்கள் கூந்தலை வலுப்படுத்த உதவும் பயோட்டின் சத்து நிறைந்த 7 சைவ உணவுகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம். இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும்.
Editorial
Updated:- 2025-11-17, 15:21 IST

தற்போதைய காலகட்டத்தில் உலகில் பலருக்கும் முடி உதிர்தல் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொண்டால், அடர்த்தியான மற்றும் முழுமையான கூந்தல் வளர்ச்சியை பெற முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக உங்கள் உணவுமுறையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

புதிய செல்களையும், முடியின் வேர்க்கால்களை பராமரிக்கவும் பயோட்டின் சத்து இன்றி அமையாதது ஆகும். இதனை உங்கள் உணவில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக, முட்டை மற்றும் சால்மன் மீன் போன்றவற்றை சாப்பிட்டால் பயோட்டின் அளவை அதிகரிக்கலாம் என்று கேள்விபட்டிருப்போம். ஆனால், அதற்கு பதிலாக தாவர அடிப்படையிலான, பயோட்டின் நிறைந்த உணவு பொருட்கள் இருக்கிறதா என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். அதனடிப்படையில், பயோட்டின் சத்து நிறைந்த 7 சைவ உணவுகளை இதில் பார்க்கலாம்.

 

பருப்பு வகைகள்:

 

பயிறு, பீன்ஸ் மற்றும் லென்டில்ஸ் போன்ற பருப்பு வகைகள் ஆகியவை குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் அதிக புரதம் கொண்ட உணவுகளாகும். மேலும், அவை குறைந்த கிளைசெமிக் அளவைக் கொண்டிருக்கின்றன. இந்த உணவு பொருட்களும் போதுமான அளவு பயோட்டினை வழங்குகின்றன. குறிப்பாக, வறுத்த அரை கப் வேர்க்கடலையில் சுமார் 5 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது, அதே சமயம், அரை கப் சோயாபீன்ஸில் 19.3 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. இவற்றை உங்கள் சாலட், சூப்கள் அல்லது பொரியல் வகைகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பயோட்டின் தேவையை பூர்த்தி செய்யலாம்.

 

வெண்ணெய் பழம் (Avocados):

 

இந்த கிரீமியான மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த பழம் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. மேலும், ஒரு பழத்தில் சுமார் 3 முதல் 6 மைக்ரோகிராம் பயோட்டின் இருக்கிறது. இதில் வைட்டமின்கள் பி5 மற்றும் ஈ நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. மேலும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து முடியை பாதுகாக்கின்றன. இந்த வைட்டமின்கள் இணைந்து செயல்பட்டு, உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்க உதவுகின்றன. நீங்கள் வெண்ணெய் பழத்தை உங்கள் டோஸ்ட், சாலடுகள் மற்றும் ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிடலாம்.

Avocados

மேலும் படிக்க: அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தலுக்கு சில எளிய டிப்ஸ்கள்; இவற்றை அவசியம் பின்பற்றவும்

 

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

 

சர்க்கரைவள்ளிக் கிழங்குகள் ஊட்டச்சத்துகளின் களஞ்சியமாகும். ஒரு நடுத்தர அளவிலான கிழங்கில் சுமார் 2 முதல் 3 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. பீட்டா-கரோட்டின் நிறைந்திருப்பதால், நமது உடல் பொதுவாக இதை வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. இது சீபம் (sebum) உற்பத்தியை தூண்டுகிறது. இதன் மூலம் நமது உச்சந்தலையை ஈரப்பதத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வறுத்து, உங்கள் உணவில் சேர்க்கலாம். இல்லையெனில், அவற்றை வேகவைத்து சிற்றுண்டி போல சாப்பிடலாம். இது கூந்தலுக்கான ஈரப்பதத்தை பூர்த்தி செய்ய சிறந்த வழி ஆகும்.

 

கீரை:

 

ஒரு கப் கீரையில் சுமார் 12 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை கீரையில் காணப்படுகின்றன. இவை கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலமும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிப்பதன் வாயிலாகவும் இயற்கையான முடி வளர்ச்சியை ஊக்கிவிக்கின்றன. கீரையை, ஸ்மூத்திகள் மற்றும் சாலட்களில் சேர்க்கலாம். இவை மட்டுமின்றி இதனை எளிதாக பொரியல் செய்து உங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

Spinach

 

காளான்:

 

சில வகை காளான்களில் பயோட்டின் சத்து காணப்படுகிறது. ஏறத்தாழ 2 முதல் 6 மைக்ரோகிராம் வரை பயோட்டினை இவை கொண்டுள்ளன. இவை நமது முடியின் இயற்கை நிறத்தை அப்படியே வைத்திருக்க உதவுகின்றன. எனவே, காளான்களை உட்கொள்வதன் மூலம் நீங்கள் நீளமான, வலிமையான மற்றும் கருமையான கூந்தலை பெறலாம். காளான்களை வேகவைத்து அல்லது வறுத்து என உங்களுக்கு பிடித்தமான வகையில் சாப்பிடலாம்.

மேலும் படிக்க: கெரட்டின் அளவை ஊக்குவித்து கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

 

விதை வகைகள்:

 

பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற விதை வகைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்து எளிதாக பயோட்டின் சத்தை பெறலாம். ஒரு கைப்பிடி அளவு விதைகளில் சுமார் 1 முதல் 2 மைக்ரோகிராம் வரை பயோட்டின் உள்ளது. குறிப்பாக, பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது முடி திசுக்களை உருவாக்க உதவுகிறது. மறுபுறம், அக்ரூட் பருப்புகளில் ஒமேகா-3 உள்ளன. இவை உச்சந்தலை ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன.

 

வாழைப்பழங்கள்:

 

நார்ச்சத்து, பொட்டாசியம், பி வைட்டமின்கள் மற்றும் பல சத்துகள் நிறைந்துள்ள வாழைப்பழங்களில் பயோட்டினும் காணப்படுகிறது. அரை கப் வாழைப்பழத்தில் ஏறத்தாழ 0.2 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. இவை உடனடியாக ஆற்றலை வழங்குவதுடன், உங்கள் முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. காலை உணவில் அல்லது மாலை சிற்றுண்டியாக ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, உங்கள் கூந்தலுக்கான ஊட்டச்சத்தை எளிதாக பெறலாம்.

 

ஆரோக்கியமான கூந்தலுக்கான வழிமுறை:

 

முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் இன்று பலரை வருத்தும் ஒரு கவலையாகும். இதை எதிர்த்து போராடவும், அடர்த்தியான, பளபளப்பான கூந்தலை பெறவும், நீங்கள் விலையுயர்ந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை. இந்த 7 இயற்கையான, தாவர அடிப்படையிலான உணவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம், உங்கள் உடலுக்கு தேவையான பயோட்டின் சத்தை நீங்கள் எளிதாக பெற முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com