herzindagi
image

பெண்களிடையே அதிகரிக்கும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள்; முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பெண்களிடையே அதிகரித்து வரும் முடி உதிர்வு பிரச்சனைக்கான சில முக்கிய காரணங்களை இந்தக் கட்டுரையில் காண்போம். இவற்றை சீரமைப்பதன் மூலம் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும்.
Editorial
Updated:- 2025-10-16, 14:10 IST

இன்றைய காலகட்டத்தில், பெண்களிடையே முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்து வருகிறது. இது ஒருவரது தோற்றத்தை மட்டும் பாதிக்காமல், தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியையும் ஆழமாக பாதிக்கிறது எனக் கூறப்படுகிறது. அதிகரித்து வரும் மன அழுத்தம், பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, இளம் பெண்களிடம் கூட இந்த சிக்கல் பரவலாக காணப்படுகிறது.

மேலும் படிக்க: கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தை பெற பீட்ரூட் ஐஸ் கட்டிகளை இப்படி பயன்படுத்தவும்

 

சுமார் 50 வயதுக்கு முன்பாகவே முடி அடர்த்தி குறைவு பிரச்சனை பலரிடம் காணப்படுகிறது. கூந்தல் ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் நலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உடலில் சமநிலையின்மை ஏற்படும் போது, அதன் விளைவுகள் பெரும்பாலும் முதலில் கூந்தலில் வெளிப்படுகின்றன. இதற்கான காரணங்கள் குறித்து இதில் காண்போம்.

 

ஹார்மோன்களின் தாக்கம்:

 

முடி உதிர்வுக்கான முதன்மையான காரணங்களில் ஹார்மோன் மாற்றங்கள் அடங்கும். மெனோபாஸ் நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோன் அளவு குறையும் போது, ஆன்ட்ரோஜன் (Androgen) ஹார்மோன்கள் முடியின் வேர்க்கால்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் படிப்படியாக முடி உதிர்வு ஏற்படுகிறது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) குறைபாடுள்ள பெண்களுக்கு, ஆன்ட்ரோஜன் ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் சமநிலையின்மை, முடி அடர்த்தி மற்றும் வளர்ச்சி முறைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

Hair loss

 

மன அழுத்தம்:

 

மன அழுத்தம், முடி உதிர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். உடல் மன அழுத்தத்தின் கீழ் இருக்கும் போது, அது கார்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது முடி வளர்ச்சியின் இயற்கையான செயல்முறையை தடுக்கிறது. இது டெலோஜென் எஃப்ளூவியம் (Telogen Effluvium) எனப்படும் நிலையை தூண்டுகிறது. இதனால், ஏதேனும் மன அழுத்த நிகழ்வுக்கு பிறகு சில வாரங்களில் முடி உதிர்வு திடீரென அதிகரிக்கும். உடல்நலக்குறைவு அல்லது திடீர் வாழ்க்கை முறை மாற்றங்கள் அனைத்தும் இந்த விளைவுக்கு பங்களிக்கின்றன.

மேலும் படிக்க: கருவளையங்களை போக்க சிம்பிள் தீர்வு; இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம்

 

ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை:

 

முடி வலிமைக்கு சீரான ஊட்டச்சத்து மிகவும் அவசியம். புரதம் , இரும்புச்சத்து, வைட்டமின் டி அல்லது சின்க் ஆகியவற்றின் குறைபாடு முடி உதிர்வை ஏற்படுத்தும் பொதுவான காரணிகளாகும். இந்தியாவில் பல பெண்கள் இரும்புச் சத்து குறைபாட்டுடன் இருப்பதாக கூறப்படுகிறது. சீரான உணவு பழக்கம் இல்லையென்றால் அது முதலில் கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் மூலம் வெளிப்படும்.

Hair care

 

முடி உதிர்வை தடுப்பதற்கான வழிகள்:

 

எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள், கூந்தல் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். புரதம் நிறைந்த சீரான உணவுகளை உட்கொள்வது, உறக்கத்தை மேம்படுத்துவது, யோகா அல்லது தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பது போன்றவை இதற்கு பலன் அளிக்கும். மேலும், அதிகப்படியான இரசாயன பொருட்களை கூந்தலில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

 

எனினும், முடி உதிர்வு பிரச்சனை அதிகரிப்பதாக உங்களுக்கு தோன்றினால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது தேவையற்ற சிக்கல்களை தடுக்க உதவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com