Hair fall home remedy: முடி உதிர்வது அல்லது அடர்த்தி குறைந்து காணப்படுவது ஆகிய பிரச்சனைகள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான விஷயம். மன அழுத்தம், தூக்கமின்மை, மாசு நிறைந்த சூழல், மரபணு காரணிகள் அல்லது அதிகப்படியான ஹேர் ஸ்டைலிங் உபகரணங்களை பயன்படுத்துவது போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. பல நேரங்களில், இதை எப்படி சரிசெய்வது என தெரியாமல் நாம் குழம்பி போவோம். ஆனால், இதற்கு ஒரு எளிய தீர்வு நம்முடைய சமையலறையிலேயே இருக்கிறது. ஆம், முட்டையை பயன்படுத்தி முடி வளர்ச்சிக்கான ஒரு சிறந்த தீர்வை காண முடியும்.
முட்டையில் இருக்கும் பல்வேறு சத்துகள்:
நம்முடைய முடி புரதத்தால் ஆனது. முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அது உங்கள் முடிக்கு போதுமான புரதம் கிடைக்கவில்லை என்பதற்கான அறிகுறியாகும். முட்டைகளில் அதிகப்படியான புரதச்சத்து உள்ளது. மேலும், பயோட்டின், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் முடியின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல கொழுப்புகள் ஆகிய சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது. முட்டையின் வெள்ளைக்கரு முடி மற்றும் ஸ்கால்ப்-ஐ சுத்தம் செய்யவும், மஞ்சள் கரு முடியின் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
இந்த இரண்டுமே இணைந்து, முடிக்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்தை கொடுக்கும். எனவே, விலை உயர்ந்த இரசாயன பொருட்கள் நிறைந்த மாஸ்க்குகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, முட்டையை ஒரு கெரட்டின் மாஸ்க்காக பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்குகளை தொடர்ந்து பயன்படுத்தினால், முடியின் வேர்களுக்கு பலம் கிடைத்து, உதிர்வது கட்டுப்படுத்தப்படும்.
முட்டையை கொண்டு ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?
முட்டையை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர், அதை உங்கள் முடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவவும். 20 நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த நீர் மற்றும் ஒரு மைல்டான ஷாம்புவை பயன்படுத்தி குளிக்க வேண்டும்.
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில்: வறண்ட மற்றும் மெலிந்த முடியை கொண்டிருப்பவர்கள், முட்டையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலை கலந்து முடிக்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இது முடிக்கு ஈரப்பதத்தை கொடுப்பதுடன், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
முட்டை மற்றும் தயிர்: உங்களுடைய முடி அடர்த்தி இல்லாமல் இருந்தால், ஒரு முட்டையுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து தலைக்கு பயன்படுத்தலாம். தயிர் ஸ்கால்ப்பை சுத்தம் செய்யவும், முட்டை முடிக்கு பலம் கொடுக்கவும் உதவும்.
முட்டை மற்றும் தேன்: முட்டையுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முடிக்கு பயன்படுத்தினால், முடி பொலிவு பெறும். தேன் முடியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடியை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.
மேலும் படிக்க: வெயிலின் தாக்கத்தால் முகம் கருமையாகி விட்டதா? கவலையே வேண்டாம்... இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!
முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய்: முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருந்தால், ஒரு முட்டையுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து மாஸ்க்காக பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதுடன், முடி உடைவதையும் கட்டுப்படுத்தும்.
முட்டையை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:
முடிக்கு முட்டையை பயன்படுத்திய பிறகு, எப்போதுமே குளிர்ந்த அல்லது மிதமான சூட்டில் உள்ள தண்ணீரை கொண்டு மட்டுமே குளிக்க வேண்டும். சூடான நீரை பயன்படுத்தினால், தலையில், முட்டை ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே முட்டையை முடிக்கு பயன்படுத்தவும். தினமும் பயன்படுத்தினால் முடி பிசுபிசுப்பாக மாறும்.
முட்டையை முடிக்கு பயன்படுத்தும் போது, ஸ்கால்ப்பை மென்மையாக மசாஜ் செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கவும் உதவும்.
முடிக்கு முட்டையை பயன்படுத்திய பிறகு, அதன் வாசனை போவதற்காக ஒரு மைல்டான ஷாம்பூவைப் பயன்படுத்தவும். வாசனை இன்னும் இருந்தால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து முடியை அலசவும்.
முடி வளர்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். தொடர்ந்து இந்த ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தினால், முடி உதிர்வது குறையும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation