எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்குவதில்லை என்ற கவலை பலருக்கும் உண்டு. மாதம் 1ஆம் தேதி சம்பளம் வாங்கினால் முதல் வாரத்திலேயே பர்ஸ் காலியாகி விடுகிறது. மாதக் கடைசியில் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகிறோம். மாதத்தின் இறுதிநாட்களை சமாளிக்க போதும் போதும் என்றாகிவிடும். வேறு வழியே இல்லை கடன் வாங்கி அந்த ஒரு வாரத்தை சமாளித்தால் அடுத்த மாதமும் பணப் பற்றாக்குறையால் தவிப்போம். இறுதியாக நம் மீது நமக்கே கோபம் உண்டாகும். அதை குடும்பத்தினரின் மீது வெளிப்படுத்துவோம். குடும்பஸ்தர்களுக்கு மட்டுமல்ல பேச்சுலர்களுக்கும் இதே நிலை தான். இந்த பதிவில் செலவினங்களை குறைத்து பணத்தை சேமிப்பதற்கான சில வழிகளை பார்ப்போம்.
செலவினங்களை கவனிக்கவும்
பாபநாசம் கமல் செய்வது போல தினசரி செலவுகளை கவனித்து பில்களை சேகரித்து வைக்கவும் அல்லது ஒரு நோட்டில் தேதியிட்டு செலவுகளை குறித்து வைக்கவும். ஒரு ரூபாயாக இருந்தாலும் அதை சரியாக கவனித்து குறித்து கொள்ளவும்.
பட்ஜெட் உருவாக்கம்
அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை அளித்து ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் உருவாக்கவும். கல்வி, மருத்துவ செலவு, மளிகைப் பொருட்கள், வேலைக்கு செல்வதற்கான எரிபொருள் செலவு என பட்ஜெட்டில் வரிசைப்படுத்தவும்.
போக்குவரத்து செலவு
இருசக்கர வாகனம் வைத்திருக்கும் நபராக இருந்தால் தினமும் 100 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய கட்டாயம் இருக்கும். நீங்கள் அலுவலகத்திற்கு மட்டுமே செல்லும் நபராக இருந்தால் அரசுப் பேருந்தில் பயணிக்கலாம். ஆயிரம் ரூபாய் மாதாந்திர பாஸ் எடுத்து பயணித்தால் இரண்டாயிரம் ரூபாயை சேமிக்கலாம். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களுக்கு செல்லும் நபர்களுக்கு இது பொருந்தாது. சிரமம் பார்க்காமல் பேருந்தில் செல்வதற்கு முன்கூட்டியே கிளம்புங்கள்.
உற்பத்தி திறன் அதிகரிப்பு
சில நிறுவனங்களில் கூடுதல் நேரம் வேலை பார்த்தால் அதற்கு தனி ஊதியம் கிடைக்கும். குடும்பத்தின் நலன் கருதி கூடுதல் நேரம் வேலை செய்யவும். அதே நேரம் உடல்நலத்திலும் கவனம் செலுத்தவும்.
மொத்தமாக வாங்கவும்
அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கவும். 25 கிலோ அரிசி மூட்டை வாங்கினால் 50 முதல் 100 ரூபாய் மிச்சமாகும். அரிசி எப்போதும் மிச்சம் ஆகாது. அடுத்த மாதமும் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் அரிசியில் வழங்கும் சர்க்கரையும் தரமானது தான். கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை விலை 50 முதல் 60 ரூபாய் விற்பனை ஆகிறது. இதில் நீங்கள் 40 ரூபாய் மிச்சப்படுத்தலாம்.
முக்கிய விஷயங்களுக்கு செலவழிக்கவும்
வீட்டிற்கு எது மிக அவசியமோ அதற்கு மட்டும் செலவழிக்கவும். தேவையில்லாத விஷயங்களுக்கு செலவழிக்க வேண்டாம்.
உணவகம் தவிர்க்கவும்
குடும்பத்தினரின் விருப்பத்திற்கு ஏற்ப மாதம் ஒருமுறையாவது உணவகம் சென்று சாப்பிட ஆசைப்படுவோம். ஆனால் இக்கட்டான நேரங்களில் இதைச் செய்வது தவறு. அதே நேரம் ஆன்லைனில் ஆர்டர் செய்வதை தவிர்க்கவும். ஆன்லைனின் ஆர்டர் செய்து வீட்டிற்கு உணவு வரும் முன்பாகவே நீங்கள் 30-40 நிமிடங்களில் சமைத்து முடித்துவிடலாம்.
மின்சார சேமிப்பு
சிலர் வீட்டில் ஏசி பயன்படுத்துவோம். குளிர்காலங்களில் ஏசி-ன் தேவை இருக்காது. ஏசி பயன்படுத்தி பழகிவிட்டால் வெயில் அதிகமாக இல்லாத நேரத்திலும் ஏசி போடுவோம். எனவே முடிந்தவரை கோடை வெயில் காலத்தில் மட்டும் ஏசி பயன்படுத்தவும். வீட்டை விட்டு செல்லும் போது மின்சாதனப் பொருட்களை ஆஃப் செய்துவிட்டீர்களா எனப் பார்க்கவும்.
உண்டியல் பயன்படுத்தவும்
தினமும் உண்டியலில் காசு போட்டு வாருங்கள். உண்டியல் நிரம்பும் வரை அதை உடைக்க வேண்டாம். அதன் பிறகு புதிய உண்டியல் வாங்கி காசு போட ஆரம்பிக்கவும். மிகவும் இக்கட்டான தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே உண்டியலை உடைத்து பயன்படுத்தவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்...
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation