ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவில் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததை குறிக்கிறது. இந்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் இந்தியா - ஜனநாயகத்தின் தாய் ஆகும். ஜனவரி 26ஆம் தேதி தேசிய விடுமுறை என்றாலும் ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும். குடியரசு தினம் என்றாலே மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்படும் அல்லது கொடியேற்றும் தருணத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் குடியரசு தின சிறப்புரை குறிப்புகள் இங்கு பகிரப்பட்டுள்ளன. மானவர்களாகிய நீங்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடியரசு தினம் 2025
குடியரசு தின சிறப்புரை
மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், பெற்றோர், என்னுடைய சக மாணவர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நாம் இங்கு நாட்டின் 76வது குடியரசு தினத்தை கொண்டாட கூடியிருக்கிறோம். நம்முடைய பாரத தேசத்தின் வரலாற்றில் இது முக்கியமான நாள். இந்த தருணத்தில் உங்கள் முன்பாக உரையாற்றுவதை கெளரவமாக கருதுகிறேன்.
முதலில் நாம் அனைவருமே நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி மலைப்புக்குரிய தியாகங்களை செய்த சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை நினைவுகூர கடமைப்பட்டு இருக்கிறோம். நாட்டின் சுதந்திரத்திற்காக அவர்கள் கடுமையாக உழைத்தனர், துணிச்சலாக போராடினர். சுதந்திர போராட்ட வீரர்களின் மன உறுதியும், அர்ப்பணிப்பும் இந்த பாரத தேசத்தை வலிமையான ஜனநாயக நாடாக மாற்றியுள்ளது.
குடியரசு தினம் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல. நம் நாட்டை வலிமையாக மாற்றிய கொள்கைகளை பற்றி சிந்திக்க வேண்டிய நேரமிது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவில் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. நம்முடைய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கானது. பன்முகத்தன்மை கொண்ட மக்களின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் அரசியலமைப்பு பிரதிபலிக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த சிறப்புக்குரிய நாளில் நாட்டின் ஜனநாயக கொள்கைகளை எப்போதும் பின்பற்றுவோம் என உறுதி ஏற்போம். அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் மதிப்பளித்து பணி செய்து நாட்டின் நன்மைக்காக பாடுபடுவோம் என சத்தியம் செய்வோம். எதிர்காலத்தின் தலைவர்களாக இந்தியாவை மேலும் வளர்ச்சியடைந்த, வலிமையான நாடாக மாற்றிட பங்காற்றுவது நம்முடைய கடமை.
நம்முடைய நாடு வளமான கலாச்சாரத்தையும், திறமையான மக்களையும் கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றாக உழைத்தால் இந்தியாவை பல்வேறு துறைகளில் முதன்மையான நாடாக மாற்றிடலாம். கடுமையாக உழைத்தால் இது சாத்தியப்படும். நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மிக முக்கிய ஆயுதம். மாணவர்களாகிய நாம் படிப்பில் முழு கவனம் செலுத்தி நம்மையும், நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் வளரச் செய்திட வேண்டும். சமூகத்திற்கு தேவையான பங்களிப்பை தவறாமல் அளிக்க வேண்டும். வளமான பாரதத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம் என உறுதியேற்று நாட்டின் 76வது குடியரசு தினத்தை மகிழ்ச்சிகரமாக கொண்டாடுவோம்.
ஜெய்ஹிந்த்! ஜெய் பாரத்!
மேலும் படிங்கசுதந்திர வேட்கையை பாய்ச்சும் சுதந்திர தின விழா பேச்சு! மாணவர்களே உங்களுக்காக...
இது போல பல குடியரசு தின சிறப்புரைகள் உள்ளன. மாணவர்களாகிய நீங்கள் குடியரசு தின உரையில் 5 முக்கியமான விஷயங்களை தவறவிடக் கூடாது.
- குடியரசு தினத்தின் முக்கியத்துவம்
- இந்திய ஜனநாயகம் : நம்பிக்கையின் கலங்கரை
- வேற்றுமையில் ஒற்றுமை
- நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு
- உலகளவில் இந்தியாவின் தாக்கம்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation