70% பெண்களால் இயங்கும் சிவகாசி பட்டாசு தொழில்... ரூ.300 சம்பளத்தால் கவலையளிக்கும் வாழ்வாதாரம்

தீபாவளிக்கு எவ்வளவு ரூபாய் பட்டாசு வாங்கலாம், எந்த ரக பட்டாசு வாங்கலாம் என சிந்திக்கும் நமக்கு மிகவும் அபாயம் நிறைந்த பட்டாசு தொழிலில் சிரமப்பட்டு வேலைபார்க்கும் பெண்களுக்கு தினக்கூலியாக 300 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது என்ற உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
image

இந்தியாவிலேயே பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியில் முதன்மை நகரமாக சிவகாசி விளங்குகிறது. 1923ல் தீப்பெட்டி உற்பத்தி என ஆரம்பித்து பிறகு பட்டாசு உற்பத்திக்கு பலரும் மாறினர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கொண்டு வரப்பட்ட விதிகள் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க செய்தது. பெரும்பாலான சிவகாசி மக்கள் விவசாயத்தில் இருந்து பட்டாசு உற்பத்திக்கு மாறி தங்களது வருமானத்தை பெருக்கி கொண்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. முதலீடு செய்த முதலாளிகளை தவிர பல ஆண்டுகளாக ஆபத்தான பட்டாசு உற்பத்தி வேலை செய்தும் பெண்களுக்கு தினக்கூலியாக 300 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது.

பட்டாசு உற்பத்தியில் பெண்கள்

ஆரம்பக்காலத்தில் விதிகள் வரையறுக்கப்படாத காரணத்தால் பெண்களுக்கென தனி சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. மகப்பேறு விடுப்பும் பெயரளவிலேயெ வழங்கப்பட்டது. ஆபத்தான பணி என்ற போதும் குடும்ப சூழ்நிலைக்காக ஏராளமான பெண்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 2014-2015ல் மத்திய தொழிலாளர் அமைச்சகம் சிவகாசி பட்டாசு உற்பத்தி தொழிலில் 95 விழுக்காடு வேலை கைமுறையானது எனவும் அதில் பட்டாசுகளில் ரசாயனம் நிரப்புவது, வரிசையாக அடுக்குவது, பேக்கிங், ஸ்டிக்கர் ஒட்டுவது போன்ற ஆபத்தான வேலைகளில் 77 விழுக்காடு பெண்களே ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.

firecracker industry

தேசிய அளவில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 30% பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இது தேசிய சராசரியை விட அதிகமாகும். நாட்டின் 90 விழுக்காடு பட்டாசு உற்பத்தியாகும் சிவகாசியில் 3 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாக 5 லட்சம் பேர் வேலை பெறுகின்றனர்.

பட்டாசு உற்பத்திக்கு கடுமையான சட்டங்கள்

70 விழுக்காடு பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களுக்கு ஆண்கள் வாங்கும் தினக்கூலியில் பாதியளவே கிடைக்கிறது. ரசாயனம் எடுத்து பட்டாசு உருட்டி அதை வரிசையாக அடுக்கி கட்டி கோர்க்கும் கைகளுக்கு தினக்கூலியாக 300 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அரிதாக ஒரு சிலர் 500 ரூபாய் வாங்குகின்றனர். ஆனால் ஆண்களுக்கு தினக்கூலியாக 600 முதல் 800 ரூபாய் வழங்கப்படுகிறது. பல பட்டாசு நிறுவனங்கள் பெண்களை நேரடியாக பணி அமர்த்துவதில்லை. மூன்றாம் தரப்பு ஏஜென்ஸிகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு பணி செய்ய வைக்கின்றன.

sivakasi women workers

செய்தி தொலைக்காட்சிகளில் அடிக்கடி சிவகாசி தொடர்பாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நான்கு பேர் பலி அல்லது பத்து பேர் பலி என பார்த்திருப்போம். செய்திகளில் பார்க்கும் போது நமக்கே நெஞ்சு படபடக்கும். தற்போது தொடர் விபத்துகள் மற்றும் ஆபத்தான முறையில் பணியாற்றுவதை தடுக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டு பட்டாசு உற்பத்தியில் ஓரளவு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான முகங்களில் புன்னகை வரவழைக்கும் இவர்களுடைய கைகளுக்கு பட்டாசு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து உரிய தினக்கூலியை பெற்றுத் தர அரசிக்கு குறைந்தபட்சம் கோரிக்கையாவது விடுக்கலாமே.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP