
உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி நான்காம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். புற்றுநோயை கண்டறிதல், புற்றுநோய்க்கான சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான செயல்பாடுகளை வலுப்படுத்தவும் இந்த நாளில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.
புற்றுநோய் என்பது உடலில் எந்த உறுப்பையும், திசுக்களையும் பாதிக்கும் நோய்களில் முதன்மை வகிக்கிறது. புற்றுநோய் உடலில் உள்ள உயிரிணுக்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் அதன் பரவலும் அசாதாரண வளர்ச்சியாக இருக்கும். புற்றுநோய் ஒரு உடலின் உறுப்பு, திசுக்களில் இருந்து மற்றொன்றுக்கு வேகமாகப் பரவும் திறன் கொண்டது.

2024ஆம் ஆண்டு உலக புற்றுநோய் தினத்திற்கான கருப்பொருள் Close the care gap ஆகும். இதற்கு கவனிப்பு இடைவெளியை நெருக்கவும் என பொருள். புற்றுநோய் பாதிப்பு உள்ள அனைவருமே கவனிப்புக்கும் சிகிச்சைக்கும் தகுதியானவர்கள் என்பதை கருப்பொருள் உணர்த்துகிறது. இந்தாண்டு மட்டுமல்ல 2022 முதல் 2024 வரை மூன்று ஆண்டு கால விழிப்புணர்வின் ஒரு பகுதியாக இந்த கருப்பொருள் அமைந்துள்ளது.
சர்வதேச புற்றுநோய்க் கட்டுப்பாட்டுக்கான ஒன்றியம் (UICC) இந்தப் பிரச்சாரத்தின் கீழ் ஒரே நிரலில் கவனம் செலுத்துகிறது. UICC-ன் படி 2024-க்கான நிகழ்ச்சி நிரல் 'ஒன்றாக இணைந்து, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சவால் விடுப்போம்' என்பதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் புற்றுநோய்க்கு எதிரான பல நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் செயல்பாடுகள் மூலம் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைப்பதிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒவ்வொரு தனிமனிதனும் பங்கு இருக்கிறது என்பதை நினைவூட்டி வருகின்றன.
மேலும் படிங்க நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு BMI வரம்பு என்ன ?
உலக புற்றுநோய் தினம் முதன் முதலில் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி புதிய ஆயிரமாவது ஆண்டு தொடக்கதையொட்டி பாரிஸில் நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான சர்வதேச உச்சி மாநாட்டில் கடைபிடிக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலகளவில் இறப்புக்கு புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாகும். உலகளவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும் ஆரம்பக்கட்டத்திலேயே நோயறிதல் மற்றும் அதிநவீன சிகிச்சை உதவியுடன் உயிர்வாழ்வு விகிதம் மேம்பட்டு வருகிறது. தொடர் பரிசோதனைகள் மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை உயிர்வாழ்வு விகிதங்களை மேம்படுத்த உதவும் இரண்டு முக்கிய காரணிகளாகும்.
நுரையீரல், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு மிகவும் பொதுவான வகை புற்றுநோயாகும், அதே நேரத்தில் மார்பகம், பெருங்குடல், நுரையீரல், கர்ப்பப்பை வாய் மற்றும் தைராய்டு புற்றுநோய்கள் பெண்களிடையே மிகவும் பொதுவானவை என்று உலக சுகாதார அமைப்பின் இணையதளம் குறிப்பிடுகிறது.
மேலும் படிங்க சத்தம் போட்டு கத்தாதீங்க! உடல்நலன் பாதிக்கப்படும்
புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு புகையிலை பயன்பாடு மட்டுமே காரணமாகும். மற்ற ஆபத்துக் காரணிகள் அதிக உடல் நிறை குறியீட்டெண், மது அருந்துதல், சில சுகாதார நிலைமைகள், சுற்றுச்சூழல், சில வைரஸ்கள் மூலம் ஏற்படுகின்றன. புற்றுநோய் பாதிப்பு ஒருவரின் உடலில் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com