herzindagi
image

ரேபிஸ் பாதிப்புக்கு சிகிச்சை என்ன ? நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி போடணுமா ?

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. தெரு நாயிடம் உடனடியாக கடி வாங்கினால் என்ன செய்ய வேண்டும் ? நாய் கடிக்கு தொப்புளை சுற்றி ஊசி போடணுமா ? உள்ளிட்ட தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-07-25, 11:08 IST

தமிழகத்தில் நாய் கடி பிரச்னை பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது. சென்னை போன்ற மாநகராட்சிகளில் தெருநாய் கடியால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ரேபிஸ் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை கிடையாது. சில நாட்களுக்கு முன்பாக உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த கபடி வீரர் ப்ரிஜேஷ் சோலங்கி ரேபிஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். வடிகாலில் சிக்கியிருந்த நாய் குட்டியை மீட்ட போது அந்த நாய் அவரை கடித்துள்ளது. ப்ரிஜேஷ் இதை பொருட்படுத்த தவறியதால் தற்போது உயிரிழந்துள்ளார். நாய் கடித்தால் நாம் உடனடியாக என்ன செய்ய வேண்டும் ? தொப்புளை சுற்றி ஊசி போடுவது அவசியமா ? உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

dog bite rabies

நாய் கடித்தால் என்ன செய்வது ?

ரேபிஸ் பாதிப்பை வெறிநாய் கடி நோய் என்றும் கூறுகின்றனர். தடுப்பூசி போட்டவர்களும் சில நேரங்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். வீட்டில் நாய் வளர்க்கிறோம், தெருவிலும் கட்டுகடங்காத நாய் தொல்லை உள்ளது. வீட்டு நாய் கடித்தால் எளிதில் கடந்து விடக் கூடாது. எந்த நாய் கடித்தாலும் உடனடி சிகிச்சை தேவைப்படும். நாய் கடித்தால் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியே தீர வேண்டும். ஏனெனில் நாய் கடித்த முதல் வாரம் முதல் மூன்று மாதங்கள் வரையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படலாம்.

ரேபிஸ் நோய்

ரேபிஸ் நோய் நாய் கடியால் மட்டுமல்ல பூனை கடி, வவ்வால் கடியால் கூட பரவும். இது ஒரு வகையான வைரஸ் நோயாகும். ரேபிஸ் நோய் மூளையை பாதிக்க கூடியது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர் சோர்வாக காணப்படுவார்கள். குழப்பமான மனநிலை, தண்ணீரை கண்டால் பயம், முகத்தில் வேகமாக காற்று வீசினால் பயம் ஆகியவை ரேபிஸ் பாதிப்பின் அறிகுறிகளாகும். வலிப்பு எடுத்து சுயநினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து உயிரிழந்துவிடுவார்கள். பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டும் ரேபிஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உயிர் பிழைத்ததும் கிடையாது.

நாய் கடித்தால் தடுப்பூசி போடுங்க

நாய் கடித்து ரேபிஸ் பாதிப்பு வந்த பிறகு தடுப்பூசி செலுத்துவது பயனற்றதாகும். நாய் கடித்த அன்றே தடுப்பூசி செலுத்த வேண்டும். இதை மூன்று வகையாக புரிந்து கொள்ளலாம். நாக்கால் நாய் நம்மை நக்கினால் அதற்கு தடுப்பூசி போட தேவையில்லை. நாய் கடித்து பற்களின் தடம் தெரிந்தால் அல்லது நாய் நகத்தால் கீறினால் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம். நாய் கடித்து இரத்தம் வந்தால் தடுப்பூசியுடன், இம்முனோகுளோபின் ஊசி போட வேண்டும். ரேபிஸ் தடுப்பூசியை நான்கு இடைவேளைகளில் முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14வது நாள், 28வது நாளில் தடுப்பூசி செலுத்த வேண்டும். இம்முனோகுளோபின் தடுப்பூசி நாய் கடித்த பகுதியில் ஆறு முதல் பத்து மணி நேரத்திற்குள் போட வேண்டும்.

முன்பு போல நாய் கடிக்கு தொப்புளை சுற்றி தடுப்பூசி போட தேவையில்லை. இப்போதெல்லாம் கையிலேயே தடுப்பூசி செலுத்துகின்றனர். நாய் கடித்தால் பாதிக்கப்பட்ட நபர் நாய் போல் குழைப்பார் என்று அர்த்தமல்ல. ஆனால் தண்ணீரை கண்டால் பயம் உண்டாகும். வீட்டிற்கு வெளியே நாய் இருந்தாலும் அதை நாம் தண்ணீரை ஊற்றி விரட்டுகிறோம். நாய் கடியால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்த அறிகுறி உண்டு.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com