சமீபத்தில் தங்கல் பட நடிகை சுஹானி பட்நாகர் டெர்மடோமயோசிடிஸ் என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவருக்கு வயது 19. இது நம்மில் பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சுஹானிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த அரிய வகை நோய்க்கான அறிகுறிகள் இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் உடல் நிலை மோசமானதாக கூறப்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிப்ரவரி 7 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நடிகை சுஹானிக்கு டெர்மடோமயோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையில் இவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகை சுஹானி பிப்ரவரி 16 ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து டெர்மடோமயோசிடிஸ் (dermatomyositis) நோய் பற்றி மக்களிடையே பயம் அதிகரித்துள்ளது. இந்த நோயின் அறிகுறிகள் குறித்தும், இது ஏற்பட காரணங்கள் குறித்தும் டாக்டர். ஸ்டாலின் ராபர்ட் BDS., FMC (பெல்லோஷிப் இன் மெடிக்கல் காஸ்மெட்டாலஜி) கூறியுள்ளதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இது தோல் தசை வீக்கம் என்று கூறப்படும் ஒரு வித அரியவகை நோய். டெர்மடோமயோசிடிஸ் எனப்படும் இந்த நோய் தசைகளில் வீக்கம் மற்றும் தோல் தடிப்புகளை ஏற்படுத்தும். 40 வயது முதல் 60 வயது வயதுக்குட்பட்ட பெரியவர்கள் மற்றும் 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என இருவரும் இந்த தசையழற்சி நோயால் பாதிக்கப்படலாம். குறிப்பாக பெண்கள் இந்த டெர்மடோமயோசிடிஸ் நோயால் பாதிக்கப்படுவது அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்த அரிய வகை நோய் மரபணு பாதிப்பு அல்லது வேறு ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த டெர்மடோமயோசிடிஸின் சரியான காரணம் கண்டறிய முடியாது. ஒரு சிலருக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் பிரச்சனையின் காரணமாக தசை சிதைவு மற்றும் மேல் தோல் மெளிதல் ஏற்படக்கூடும். மேலும் சில மருந்துகள் அல்லது நோய் தொற்றுகளும் இந்த நோயை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கம் கூட இந்த நோய் ஏற்பட ஒரு முக்கிய காரணம். இந்த அல்ட்ரா வயலட் கதிர்கள் அதிக அளவு பெண்களை பாதிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
குறிப்பு : சூரிய ஒளிக்கதிர் தாக்கத்தில் இருந்து நம் சருமத்தை பாதுக்காக்க தினசரி சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது நல்லது. இந்த டெர்மடோமயோசிடிஸ் நோயின் அறிகுறிகளை கண்டறிந்தால் உடனடியாக அருகில் உள்ள ஒரு தோல் நோய் மருத்துவரை அணுக வேண்டும். சரியான சிகிச்சை முறையை மேற்கொண்டால் இந்த நோய் தீவிரம் அடைவதற்கு முன்பே குணப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com