உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்க்கும் நபர்களுக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்படும். கழுத்து வலி இருந்தால் தூங்குவதில் சிரமம் ஏற்படும். கழுத்து பிடிப்பு, கழுத்து எலும்பு மற்றும் நரம்பு தேய்மானம், பாதிப்படைந்த கழுத்து நரம்புகள், கழுத்துடன் தொடர்புடைய தோள்பட்டை வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெற செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். நீங்கள் கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை அல்லது தீவிர காயங்களால் அவதிப்பட்டு இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு இந்த பயிற்சிகளை செய்யலாம். கழுத்து பகுதிக்கான பயிற்சி செய்யும் போது உட்கார்ந்த நிலையில் இருப்பது அவசியம். தலைசுற்றல், கிறுகிறுப்பு வரலாம் என்பதால் உட்கார்ந்து பயிற்சி செய்யவும்.
முதல் பயிற்சி
நேராக அமர்ந்தபடி கழுத்தை வலது பக்கம் மெதுவாக திருப்பவும். அப்படியே ஐந்து முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். அதன் பிறகு இயல்பு நிலைக்கு வரவும். இதேபோல இடது பக்கம் கழுத்தை மெதுவாக திருப்பவும். ஐந்து முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்ட பிறகு இயல்பு நிலைக்கு வரவும். இதே போல ஐந்து முறை செய்யுங்கள்.
இரண்டாவது பயிற்சி
இப்போது உங்கள் கழுத்தை வலது புறமாக சாய்க்கவும். ஐந்து முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்கள். நேர் கோட்டிற்கு வந்த பிறகு இடது புறமாக கழுத்தை சாய்க்கவும்.
மூன்றாவது பயிற்சி
தாடை பகுதி நெஞ்சை தொடும் அளவிற்கு கொண்டு குனிந்து பத்து முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். அப்படியே கழுத்தை மேல் நோக்கி உயர்த்தவும். பத்து முறை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். இயல்பு நிலைக்கு வாருங்கள். பத்து முறை இதே போல முயற்சிக்கவும்.
நான்காவது பயிற்சி
வலது கையை வலது புருவத்தின் மேல் வைத்து அழுத்தி கழுத்தை வலது பக்கம் திருப்ப முயற்சிக்கவும். ஐந்து முறை இது போல செய்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்புங்கள். அதன் பிறகு இடது கையை இடது புருவத்தின் மேல் வைத்து அழுத்தி கழுத்தை இடது பக்கம் திருப்ப முயற்சிக்கவும்.
ஐந்தாவது பயிற்சி
இரண்டாவது பயிற்சி போலவே இந்த பயிற்சி இருக்கும். வலது கையை வலது புருவத்தின் மீது வைத்து கழுத்தை 45 டிகிரிக்கு சாய்க்கவும். இதே போல இடது புறமும் செய்யுங்கள்.
மேலும் படிங்கதினமும் விளையாடுங்க... வேகமாக எடையைக் குறைக்க இதான் வழி!
ஆறாவது பயிற்சி
நெற்றியின் நடுப்பகுதியில் கைகளை வைத்து தாடையை நெஞ்சு பகுதியுடன் ஒட்ட முயற்சிக்கவும். இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு அடுத்ததாக கைகளை கழுத்தின் பின்பகுதியில் வைத்து அழுத்தி மேல் நோக்கி பார்க்க முயற்சிக்கவும்.
ஏழாவது பயிற்சி
நீங்கள் அமர்ந்திருக்கும் சேரின் கால்களை கெட்டியாக பிடித்து இடது காதில் வலது கையை வைத்து கழுத்தை வலது பக்கம் சாய்க்கவும். இதே போல வலது காதில் இடது கையை வைத்து கழுத்தை இடது பக்கம் சாய்க்கவும்.
எட்டாவது பயிற்சி
வலது முதுகுப்பகுதியில் வலது கையை வைத்து வலது புறமாக கழுத்தை திருப்பவும். இதே போல இடது முதுப்பகுதியில் இடது கையை வைத்து வலது புறமாக கழுத்தை திருப்பவும்.
இறுதி பயிற்சி
இரண்டு கைகளையும் தாடையின் கீழ் வைத்து பொறுமையாக அழுத்தி கீழ் தாடை பற்கள் மேல் தாடை பற்கள் ஒட்டும்படி செய்யுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation