இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஜவுளி வகைகள் குறித்து ஓர் அலசல்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரபலமாக கிடைக்கும் ஜவுளி வகைகள் குறித்த தொகுப்பை இந்தக் குறிப்பில் காணலாம். இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
image

இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் கலை பொருட்களில் ஒன்றாக ஜவுளி வகைகள் விளங்குகின்றன. நேர்த்தியான கைத்தறி ஆடைகள் முதல் வசீகரமான பட்டு வகைகள் என இதில் ஏராளமானவை அடங்கும். இவை சாதாரண கலை பொருளாக மட்டுமல்லாமல், பல நூற்றாண்டின் வரலாற்றையும் சுமந்து நிற்கின்றன. அந்த வகையில், இந்தியாவில் மிக பிரபலமாக விளங்கும் ஜவுளி வகைகள் குறித்து காணலாம்.

பனாரசி பட்டு:

வாரணாசியில் உருவான பனாரசி பட்டு அரச தோற்றத்திற்கும், நேர்த்தியான ஜரிகை வேலைப்பாடுகளுக்கும் பிரபலமானது. பாரம்பரியமாக, கைத்தறிகளில் நெய்யப்படும் இந்த புடவைகள் முகலாயர்கள் காலத்தின் மலர் டிசைன்களில் அமைந்திருக்கும். திருமணத்திற்கான சிறந்த ஆடையாக கருதப்படும் பனாரசி பட்டு புடவையை நெய்வதற்கு, சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

Saree design

காஞ்சிபுரம் பட்டு:

புடவை வகைகளில் காஞ்சிபுரம் பட்டுக்கு சிறப்பிடம் இருக்கிறது. இதனை உடுத்தும் பெண்கள் பார்ப்பதற்கு ராணி போன்று தோன்றுவதாகவும் உவமைகள் கூறப்படுவது உண்டு. மல்பெரி பட்டு மற்றும் கனமான தங்க ஜரிகை ஆகியவற்றால் இந்தப் புடவைகள் நெய்யப்படுகின்றன. இவை அழகிய தோற்றம் தருவதுடன் நீடித்த உழைப்பையும் கொடுக்கின்றன. இந்த வகையான பட்டுப் புடவைகள், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன.

சந்தேரி:

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேரி ஆடைகள், பட்டு மற்றும் பருத்தியின் கலவையாகும். இதில் ஜொலிக்கும் ஜரிகை வேலைப்பாடுகளும், நேர்த்தியான எம்ப்ராய்டரிகளும் அதன் அழகை அதிகரிக்கச் செய்கிறது. சந்தேரி ஆடைகள், ஒளி ஊடுருவும் தன்மைக்கும், நாகரீகமான தோற்றத்திற்கும் பெயர் பெற்றது ஆகும். பருத்தி கலந்த பட்டில் இருந்து உருவாக்கப்படும் சந்தேரி புடவைகளை அன்றாட பயன்பாட்டிற்கும், விசேஷ நிகழ்வுகளுக்கும் அணியலாம்.

கலம்காரி:

கலம்காரி ஆடைகள் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மிகவும் பிரபலமானவை. இது இயற்கை சாயங்களை பயன்படுத்தி, துணிகளில் கையால் அல்லது அச்சுப் பதிக்கும் பழமையான முறையாகும். 3000 ஆண்டுகள் பழமையான இந்த கலை, கோயில்களில் கதைகளை கூற மூங்கில் பேனாக்கள் மூலம் வரையப்பட்டதால், "கலம்" மற்றும் "காரி" என்ற பெயர்கள் இணைந்தன. இது, புவியியல் குறியீடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Kalamkari silks

மேலும் படிக்க: Wedding Malai ideas: திருமணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மணமக்களுக்கான லேட்டஸ்ட் திருமண மாலை டிசைன்கள்

பஷ்மினா:

பஷ்மினா என்பது காஷ்மீரில் காணப்படும் இமயமலை ஆடுகளின் உடலில் உள்ள மென் ரோமம் மூலம் செய்யப்படுவது ஆகும். இந்த கம்பளி சால்வைகள், குளிர் பிரதேசங்களில் நம் உடலை இதமாக வைத்திருக்க உதவி செய்கிறது. இதில் காணப்படும் அழகிய எம்பிராய்டரி, இதனை கலைப்பொருளாகவும் அதே நேரத்தில் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் மாற்றுகிறது.

சிக்கன்காரி:

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உருவாக்கப்படும் சிக்கன்காரி, ஒரு மென்மையான மற்றும் கலைநயமிக்க எம்ப்ராய்டரி நுட்பமாகும். இதனை குர்தாக்கள் மற்றும் புடவைகளில் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் கிடைக்கிறது.

Saree texture

பந்தானி:

பந்தானி என்பது குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தோன்றியது ஆகும். இந்தியாவின் டை-டையிங் பாரம்பரியத்தின் அங்கமாக பந்தானி விளங்குகிறது. இவை தனித்துவமான வடிவங்களால் எளிதாக அடையாளம் காணப்படுகின்றன. வழக்கமாக புடவைகள், தலைப்பாகைகள் மற்றும் துப்பட்டாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனை அதிகமாக பண்டிகை காலங்களில் பயன்படுத்துகின்றனர்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP