உணவு நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இந்நிலையில் உங்கள் உணவு பழக்க வழக்கங்களை சார்ந்தே உங்கள் ஆரோக்கியமும் இருக்கும். பொதுவாக தங்கள் உடல் எடையை குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ முயற்சி செய்பவர்கள் குறிப்பிட்ட டயட் அல்லது உணவு முறையை பின்பற்றுகிறார்கள்.
உடல் எடையை பராமரிக்க டயட் இருப்பது தவறல்ல ஆனால் அதற்கான சரியான வழிமுறை மற்றும் வழிகாட்டுதலுடன் பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக நீங்கள் ஒரு டயட்டை பின்பற்றுவதற்கு முன்னால் ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால், நீங்கள் டயட் இருப்பதற்கான இலக்கை எளிதில் அடையலாம்.
இந்த பதிவும் உதவலாம்: யோகா மூலம் முகத்தை இளமையாக மாற்றுவது எப்படி?
முதலில் இரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள்
இது மிகவும் முக்கியமானது. நீங்கள் எந்த டயட் முறையை பின்பற்ற திட்டமிட்டிருந்தாலும் சரி, அதை தொடங்குவதற்கு முன் இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். சுயமாக டயட் இருக்கும் பலரும் இந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், தைராய்டு, வைட்டமின் D, வைட்டமின் B12 மற்றும் பிற விஷயங்கள் உங்கள் உடலில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இரத்த பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ற சரியான உணவுகளை தேர்வு செய்ய இந்த முதல் கட்டம் மிகவும் முக்கியமானது.
உணவியல் நிபுணரை ஆலோசிக்கவும்
மற்றவர்களுக்கு ஒரு டயட் கொடுக்கும் சிறந்த முடிவுகளை பார்த்து, அதே டயட் அல்லது உணவு முறையை பலரும் பின்பற்ற தொடங்குகிறார்கள், இது தவறானது. எல்லோருடைய உடல் நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உங்களுக்கான பிரத்தியேகமான டயட்டை பற்றி அறிய ஒரு உணவியல் நிபுணரை ஆலோசனை செய்வதே நல்லது. உங்களுடைய உணவு பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை மற்றும் உடல் நல பிரச்சனையை கேட்டறிந்து, உங்களுக்கு ஏற்ற சரியான டயட்டை உங்கள் உணவியல் நிபுணர் திட்டமிடுவார்.
மனதளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்
உங்களுடைய வழக்கமான உணவு முறையை மாற்றி அமைத்து ஒரு புதிய டயட் அல்லது உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது கடினமானது தான். டயட் தொடங்கிய ஒரு சில நாட்களில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கலாம். அதற்குப் பிறகு உணவின் மீதான விருப்பம் முன்பை விட அதிகமாக இருக்கும். இதனால் உங்கள் திட்டத்தில் இல்லாத ஒரு சில உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கும். எனவே ஒரு டயட்டை பின்பற்றுவதற்கு முன் உங்களை மனதளவில் தயார்படுத்திக் கொள்ளுங்கள். இதை தவறாமல் கடைப்பிடிப்பதற்கு நிறைய மன வலிமையும் தேவைப்படும்.
இந்த பதிவும் உதவலாம்: வீட்டில் இருந்தபடியே 7 நாட்களில் எடையை குறைப்பது எப்படி?
பிடித்த உணவுகளை சாப்பிட திட்டமிடுங்கள்
டயட்டை ஆரம்பிக்கும் போது பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். திருமண விழாக்கள், பண்டிகைகள் போன்ற ஒரு சில கொண்டாட்டங்களினால் உங்கள் டயட்டை நீங்கள் பின்பற்ற முடியாமல் போகலாம். பண்டிகை அல்லது வீட்டு விசேஷங்களின் போது டயட்டை கடைபிடிப்பது மிகவும் கடினம். இதுபோன்று தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். வாரத்தில் 1-2 நாட்கள் என உங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கான நாளை திட்டமிடலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik