
பூசணி விதைகள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், அவற்றில் அதிகப்படியான சத்துகள் நிறைந்திருக்கின்றன. உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கு நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தால், உங்களுக்கு பூசணி விதைகள் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.
குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தவையாக பூசணி விதைகள் விளங்குகின்றன. வலிமையாகவும், ஆரோக்கியமாகவும், அதிக உற்சாகத்துடனும் இருக்க விரும்பும் பெண்களுக்கு இவை நிச்சயம் பலன் அளிக்கும். எலும்புகளின் வலிமை, ஹார்மோன் சமநிலை என பல வகைகளில் பூசணி விதைகள் பயன்படுகின்றன. அவற்றை தற்போது பார்க்கலாம்.
பூசணி விதைகள், பெண்களுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துகளின் புதையல் ஆகும். அவற்றில் அதிக அளவில் மெக்னீசியம், சின்க், இரும்புச்சத்து மற்றும் ஆரோக்கியமான தாவர அடிப்படையிலான புரதம் உள்ளன. மெக்னீசியம், உடலில் 600-க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதில் மனநிலை, தசை செயல்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துபவையும் அடங்கும். சின்க், நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் சுழற்சி முதல் மாதவிடாய் நிறுத்தம் வரை முக்கியமான ஹார்மோன் ஒழுங்குமுறையை மேம்படுத்துகிறது.

இரும்புச்சத்து, குழந்தைப் பேறு வயதில் உள்ள பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில், அவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம். பூசணி விதைகள் இரும்புச்சத்துடன் பிற கனிமங்களையும் வழங்குகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் பொதுவாக பெண்களின் உணவில் உள்ள குறைபாடுகளை நிரப்ப உதவுகின்றன. மேலும், வளர்சிதை மாற்றத்தை இவை சீராக பராமரிக்கின்றன.
மாதவிடாய், கர்ப்பம் அல்லது மாதவிடாய் நிறுத்தம் என எதுவாக இருந்தாலும், ஹார்மோன் மாற்றங்களுடன் போராடும் பெண்களுக்கு, பூசணி விதைகள் ஆதரவான பங்களிப்பை வகிக்கின்றன. அவற்றில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் (Phytoestrogens) மற்றும் லிக்னன்கள் (Lignans) போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை ஹார்மோன் செயல்பாட்டை சமநிலைப்படுத்த பயன்படும். மேலும், அவற்றில் உள்ள அதிக சின்க், புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் உற்பத்திக்கு மிக முக்கியமானது. இருப்பினும், இவை ஹார்மோன்களை சரிசெய்வதற்கான மருந்து அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
மேலும் படிக்க: Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்
இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், கொழுப்பின் அளவை மேம்படுத்துவதன் மூலம் இருதய ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன. அதிக மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தவும் உதவும். சாப்பிட்ட பிறகு இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க இவை வழிவகுக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு, பெண்களுக்கு எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பூசணி விதைகள் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பிற ஊட்டச்சத்துகளை வழங்குவதன் மூலம் அந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்துகின்றன. இதற்காக மாத்திரைகளை மட்டுமே நம்பி இருக்காமல், பூசணி விதைகளை சாப்பிடுவதன் மூலம் அதன் சத்துகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: வேலை செய்யும் போது சோர்வாக இருக்கிறதா? உடனடி ஆற்றலுக்கு இந்த உணவுகளை சாப்பிடவும்
நீண்டகால மன அழுத்தம் முதல் ஹார்மோன்கள் குறைவது வரை அனைத்தும் பெண்களின் தூக்கம், மனநிலை மற்றும் ஆற்றலை சீர்குலைக்கலாம். பூசணி விதைகள் இதற்கு உதவும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன. அவற்றில் டிரிப்டோஃபான் (Tryptophan) உள்ளது. இந்த அமினோ அமிலம் சீரான உறக்கத்திற்கு உதவுகிறது. இதன் சின்க் மற்றும் மெக்னீசியம் கலவை, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தசைகளை தளர்த்தவும் பயன்பெறுகிறது.
பூசணி விதைகள் வெறும் சிற்றுண்டி அல்ல. அவை பெண்களுக்கு அன்றாட ஆரோக்கியம் மற்றும் நீண்ட கால நல்வாழ்வுக்கான ஒரு சிறிய முதலீடு ஆகும். ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது, வலுவான எலும்புகளை உருவாக்குவது அல்லது நிம்மதியான தூக்கத்தை பெறுவது என எதுவாக இருந்தாலும், ஒரு கைப்பிடி பூசணி விதைகள் வழங்கும் ஊட்டச்சத்து நன்மைகளை புறக்கணிக்க முடியாது. எனவே, பூசணி விதைகள் சாப்பிடுவதை பெண்கள் ஒரு வழக்கமாக ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com