தமிழகத்தின் 30வது மாவட்டமான கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டத்திலிருந்து உருவானதாகும். இம்மாவட்டம் பசுமையான மலைகளால் சூழப்பட்டுள்ளது. கிருஷ்ணா என்பது கறுப்பு என்றும் கிரி என்பது மலை என்றும் குறிக்கிறது. கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் இந்த மாவட்டம் கிருஷ்ணகிரி என பெயரிடப்பட்டுள்ளது. கிருஷ்ண தேவா ராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி இருந்ததால் மன்னரின் பெயர் பெற்றிருக்கலாம். தமிழை தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை தாய் மொழியாக கொண்ட பலர் வாழ்கின்றனர். இந்த மாவட்டத்தில் கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய பசுமையான இடங்களையும், ஆன்மிக தலங்களையும் இந்த பதிவில் பார்ப்போம்.
கே.ஆர்.பி அணை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தவிர்க்க முடியாத சுற்றுலா தலமான கே.ஆர்.பி அணை கிருஷ்ணகிரி - தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து துல்லியமாக பத்து கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இந்த அணையை அடைந்துவிடலாம். தமிழகத்தின் கிங் மேக்கர் என்றழைக்கபப்டும் காமராஜரால் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டது. இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பசுமையாக காட்சியளிக்கும் இந்த அணைப்பகுதியில் வாரவிடுமுறை நாட்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானமும், மான் பண்ணையும் இங்குள்ளது.
ஸ்ரீபாஸ்வா பத்மாவதி ஜெயின் கோவில்
ஜைதன மத துறவியான ஸ்ரீசுவாமி பாஸ்வ நாத பகவான் இங்கு காட்சியளிக்கிறார். உலகிலேயே உயரமான ஜெயின் சிலைகள் இக்கோவிலில் உள்ளது. கோவிலில் நடைபெறும் கொடியேற்ற விழாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தருவார்கள். கிருஷ்ணகிரியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் இருக்கிறது.
தளி ஏரி
கிருஷண்கிரியின் அழகமான மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் தளி ஏரி நகர்ப்புறத்தில் இருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நிலவும் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை காரணமாக அக்காலத்தில் தளி ஏரி பகுடியை ஆங்கிலேயர்கள் லிட்டில் இங்கிலாந்து எனக் அழைத்துள்ளனர். இந்த ஏரி படகுசவாரி செல்வதற்கும், மீன்பிடிப்பதற்கும் சிறந்த இடமாகும். கிழக்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஏரி சுமார் 120 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கிருஷ்ணகிரி கோட்டை
இந்திய தொல்லியல் துறை இந்த கோட்டையை நினைவுச் சின்னமாக பாதுகாத்து வருகிறது. கோட்டையின் மலை உச்சிக்கு செல்ல படிக்கட்டுகளும் உள்ளன. இந்த கோட்டை விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டதாகும். கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பாரமஹால் என்று குறிப்பிடப்படுகின்றன. இதற்கு பன்னிரண்டு கோட்டைகள் என அர்த்தம்.
காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில்
இக்கோயில் கிருஷ்ணகிரிக்கு மிக அருகிலேயே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயிலின் கர்ப்ப கிரகத்தில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சிலை உள்ளதாக கூறப்படுகிறது. மலையை குடைந்து ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்கள் தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை அங்கு வழங்க வேண்டும். இது வேண்டுதல் பை என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள நந்தி வடிவ பாறையை பக்தர்கள் 11 முறை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.
அய்யூர் இயற்கை பூங்கா
இந்த பூங்கா தேன்கனிக்கோட்டையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பூங்கா வனத்துறையினரின் கட்டுப்பாட்டின் உள்ளது. பூங்காவில் மூங்கில் குடில்கள், கண்காட்சி கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள் உள்ளன. இங்கு யானைகள் வலம் வருவதையும் காண முடியும்.
கெலவரப்பள்ளி அணை
இந்த அணை ஒசூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கர்நாடக மாநிலத்தின் எல்லை பகுதிக்கு மிகவும் அருகாமையில் அணை இருப்பதால் அம்மாநில இங்கு அதிகளவில் வருகை புரிகின்றனர். ஒசூர் மக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு தலமாகவும் கெலவரப்பள்ளி அணை விளங்குகிறது.
அவதானப்பட்டி ஏரி பூங்கா
அவதானப்பட்டி பூங்கா கிருஷ்ணகிரியில் இருந்து 7 கிலோ மீ ட்டர் தொலைவில் சேலம் – பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த ஏரிக்கு தேவையான நீர் ஆதாரம் கே.ஆர்.பி அணையில் இருந்து கிடைக்கப்பெருகிறது. எனவே இது வற்றாத ஏரியாக படகு சவாரிக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது.
அரசு அருங்காட்சியம்
கிருஷ்ணகிரியில் காந்திசாலை அப்சரா திரையரங்கம் அருகே மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. கலை மற்றும் தொல்லியல், மானிடவியல், மண்ணியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளைச் சேர்ந்த பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தின் வரலாறு, கலை, கலாச்சார பெருமைகளை இந்த அருங்காட்சியகம் எடுத்துரைக்கிறது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation