தனக்கு தெரிந்த பிரியாணி கடைகளில் வித விதமான பிரியாணியை ருசி பார்த்து யூடியூபில் பதிவேற்றி வருபவர் யூடியூபர் இர்ஃபான். சமூக வலைதளங்களில் இவரை லட்சக்கணக்கான நபர்கள் பின்தொடரும் நிலையில் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ போட்டு அது பேசுபொருளானதும் அந்த வீடியோவை நீக்குவதையும் மன்னிப்பு கோருவதையும் வாடிக்கையாக கொண்டவர். ஏற்கெனவே தனது குழந்தையின் பாலினத்தை கண்டறிய துபாய் சென்று அந்த விஷயத்தை வீடியோவாக பதிவேற்றி இருந்தார். இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை பிறக்கும் முன்பே கண்டறிவது சட்டப்படி குற்றம் என்பதால் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். தனக்கு தெரிந்த அரசியல் பிரபலங்களை வைத்து அப்பிரச்னையை சமாளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளார்.
பிரசவ அறைக்கு சென்று தனது மனைவி குழந்தையை பிரசவிக்கும் நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த இர்ஃபான் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை நீக்குகிறார். மேலும் குழந்தை பிறந்த போது நடந்த நிகழ்வுகள் மொத்தத்தையும் யூடியூப் ஷார்ட்ஸாக பதிவேற்றியுள்ளார். இதை லட்சக்கணக்கானோர் கண்டுள்ளனர். இதையடுத்து பிரசவ அறையில் வீடியோ எடுக்க அனுமதி வழங்கியது யார் ? அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இருந்தும் இர்ஃபான் தொப்புள்கொடியை வெட்ட அனுமதித்து யார் ? தவறாக எதுவும் நடந்திருந்தால் யார் பொறுப்பு ? அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில் இர்ஃபானுக்கு மட்டும் தமிழகத்தில் எதுவும் தனி சலுகை உள்ளதா என பலரும் கேட்க தொடங்கியுள்ளனர். யூடியூப் பார்த்து பிரசவம் செய்த தம்பதி, சேலத்தில் குழந்தையின் பாலினத்தை கண்டறிய செயல்பட்ட குழு மீது அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு சிலரை கைது செய்துள்ளது. ஆனால் இர்ஃபானுக்கு மட்டும் நோட்டீஸ் கேட்டு விளக்கம் அளிப்பது ஏன் ? சட்டப்படி அவர் மீது வழக்கு பதிந்து கைது மேற்கொள்ளலாம் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். வியூஸிற்காக ஒருவர் எதை வேண்டுமானாலும் பதிவேற்ற அனுமதிப்பதா என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் பிரசவம் நடந்த சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனையையும் விசாரிக்க வேண்டும். ஏனெனில் பிரசவ அறையில் மருத்துவ பயிற்சி பெறாத ஒருவர் எப்படி தொப்புள்கொடியை வெட்ட அனுமதிக்கப்பட்டார் என்பதற்கு உரிய பதில் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com