herzindagi
image

Dandruff Control Tips: குளிர்காலத்தில் அதிகரிக்கும் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த உதவும் வீட்டு வைத்திய முறைகள்

Home Remedies for Dandruff: குளிர்காலத்தில் அதிகரிக்கும் பொடுகு தொல்லையை எவ்வாறு வீட்டு வைத்திய முறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று இதில் காணலாம். இவை உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-12-04, 13:18 IST

Hair Care Tips: குளிர்காலம் தொடங்கியதில் இருந்து இதமான குளிருடன் சேர்த்து சரும வறட்சி மற்றும் கூந்தல் பிரச்சனைகளும் நம்மை தேடி வரும். குறிப்பாக, இந்த சீசனில் பலரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பொடுகு தொல்லை ஆகும். தலைமுடியில் பனித்துளிகள் போல படிந்திருக்கும் இந்த வெள்ளை செதில்கள், கடுமையான அரிப்பு மற்றும் முடி உதிர்விற்கும் வழிவகுக்கும்.

குளிர்காலத்தில் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த வீட்டு வைத்திய முறைகள்:

 

பொடுகு தொல்லையை கட்டுப்படுத்த கடைகளில் கிடைக்கும் இரசாயனம் கலந்த ஷாம்பூக்களை பயன்படுத்துவதை விட, நம் வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு எளிமையாக தீர்வு காண முடியும். குளிர்காலத்தில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எவ்வாறு கையாள்வது? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்ன? என்பதை இதில் விரிவாக காண்போம்.

 

பொடுகு குறித்த விளக்கம்:

 

பொடுகு என்பது உங்கள் உச்சந்தலை ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். நமது உச்சந்தலையில் உள்ள சரும செல்கள் இறந்து உதிர்வது இயல்பான ஒன்று தான். ஆனால், இந்த செயல்முறை மிக வேகமாக நடக்கும் போது, அந்த இறந்த செல்கள் ஒன்றாக சேர்ந்து செதில்களாக உதிர்கின்றன. இதையே நாம் பொடுகு என்கிறோம். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் என்று கூறி விட முடியாது. இருப்பினும், இது உச்சந்தலையில் அதிகப்படியான அரிப்பு, சிவந்து போதல் மற்றும் பிசுபிசுப்பான திட்டுக்களை உருவாக்கும்.

மேலும் படிக்க: How to use Rosemary Oil: குளிர்காலத்தில் உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க ரோஸ்மேரி எண்ணெய்யை பயன்படுத்தும் முறைகள்

 

பொடுகு ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன?

 

பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து கொண்டால், அதற்கான தீர்வை காண்பது எளிது. பொடுகு வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான சில காரணங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Dandruff Home Remedies

 

  • வறண்டு போன உச்சந்தலை: காற்றில் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், நமது சருமம் மற்றும் உச்சந்தலை இயல்பாகவே வறண்டு போகும். உதடுகள் வெடிப்பது போல, உச்சந்தலையும் வறண்டு தோல் உரிந்து பொடுகாக மாறுகிறது. இதுவே குளிர்காலத்தில் பொடுகு அதிகரிக்க முக்கிய காரணமாகும்.
  • தலைக்கு குளிப்பதை தவிர்த்தல்: சிலர் குளிருக்கு பயந்து பல நாட்களாக தலைக்கு குளிக்காமல் இருப்பார்கள். இதனால் தலையில் சேரும் எண்ணெய் பிசுக்கு, தூசி மற்றும் இறந்த செல்கள் ஒன்றாக தேங்கி பொடுகை உருவாக்கும்.
  • அதிக இரசாயன பொருட்கள்: தலைமுடிக்கு பயன்படுத்தும் சில வகை ஜெல் (Gel), ஸ்ப்ரே மற்றும் ஹேர் கலரிங் போன்றவற்றில் உள்ள இரசாயனங்கள் உச்சந்தலையில் ஒவ்வாமையை ஏற்படுத்தி பொடுகை வரவழைக்கும்.

மேலும் படிக்க: Dry Scalp Remedies: குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போவதை கட்டுப்படுத்த உதவும் 5 வீட்டு வைத்தியங்கள் இதோ

 

பொடுகை தடுக்கும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்:

 

இத்தகைய பொடுகு பிரச்சனையை சில வகை வீட்டு வைத்திய முறைகள் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும். இதில் உங்கள் கூந்தலுக்கு சிறந்த வழிமுறையை கண்டறிந்து அதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

 

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு:

 

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் உச்சந்தலையில் உள்ள பி.ஹெச் (pH) அளவை சமநிலைப்படுத்த உதவும். இரண்டு ஸ்பூன் மிதமாக சூடுபடுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய்யுடன், சில துளிகள் எலுமிச்சை சாறை கலக்கவும். இதை உச்சந்தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பிறகு மென்மையான சிகைக்காய் கொண்டு குளித்து விடலாம்.

 

பொடுகை கட்டுப்படுத்தும் கற்றாழை:

 

கற்றாழை குளிர்ச்சித் தன்மை கொண்டது. இது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைத்து, பூஞ்சை தொற்றை தடுக்கிறது. கடைகளில் விற்கும் ஜெல்லுக்கு பதிலாக, இயற்கையான கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை தனியாக எடுக்கவும். இதை நேரடியாக தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் குளிக்கலாம். இது பொடுகை கட்டுப்படுத்த ஒரு இயற்கை தீர்வாகும்.

 

பொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் வேப்பிலை நீர்:



ஆயுர்வேதத்தில் வேப்பிலை ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. இது பொடுகை உருவாக்கும் கிருமிகளை தடுப்பதில் சிறப்பாக செயல்படும். ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அந்த நீர் ஆறியதும், தலைக்கு குளித்து முடித்த பிறகு இறுதியாக இந்த நீரால் முடியை அலசவும். இதன் மூலம் கூந்தல் மிருதுவாகவும் காட்சியளிக்கும்.

Hair Care Tips

வெந்தயம் பயன்படுத்தும் முறை:

 

வெந்தயம் உடல் சூட்டை தணிப்பதோடு, தலையில் உள்ள வறட்சியை போக்க உதவும். இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊறவைக்கவும். காலையில் அதை அரைத்து ஹேர்பேக்காக பயன்படுத்தலாம். இதனை, 30 நிமிடங்கள் தலையில் வைத்திருந்து பின்னர் குளித்து விடலாம்.

 

பொடுகை கட்டுப்படுத்த வாழ்க்கை முறை மாற்றங்கள்:

 

  • சீரான உணவு முறை: நம்முடைய உணவுமுறை சத்தாகவும், சரியான அளவிலும் இருந்தால் தலை முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
  • நீர்ச்சத்தின் அவசியம்: குளிர்காலத்தில் தாகம் எடுக்காது என்று தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டாம். உடல் மற்றும் சருமம் வறண்டு போகாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

 

இவை அனைத்தையும் சரியாக பின்பற்றினால் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தலாம். ஆனால், பொடுகு தொல்லை அதிகரிப்பதாக உணர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com