herzindagi
image

Dry Scalp Remedies: குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போவதை கட்டுப்படுத்த உதவும் 5 வீட்டு வைத்தியங்கள் இதோ

Hair Care Tips: குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போவதை கட்டுப்படுத்த உதவும் 5 இயற்கையான வீட்டு வைத்தியங்களை இதில் பார்க்கலாம். இதன் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
Editorial
Updated:- 2025-12-02, 14:46 IST

Winter Hair Care: பருவ நிலைகளை பொறுத்தவரை, குளிர்காலம் பலருக்கு விருப்பமானதாக இருக்கும்.  ஆனால், இந்த காலநிலை மாற்றத்தால் உச்சந்தலை வறண்டு போய் காணப்படும். வெளிப்புறத்தின் குளிர்ந்த காற்றும், வீட்டிற்குள் பயன்படுத்தப்படும் கடுமையான வெப்பமூட்டும் கருவிகளும் சேர்ந்து, நமது சருமத்தின் இயற்கையான ஈரப்பசையை உறிந்து விடுகின்றன. இதனால் உச்சந்தலை பாதிக்கப்பட்டு வறட்சிக்கு உள்ளாகிறது.

குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போவதை கட்டுப்படுத்த உதவும் வீட்டு வைத்தியம்:

 

உச்சந்தலையின் ஈரப்பதம் குறையும் போது, முடி வலுவிழந்து, பொலிவை இழந்து, எளிதில் உதிரும் நிலைக்கு செல்கிறது. சில சமயங்களில் இது பொடுகு தொல்லைக்கும் வழிவகுக்கும். இருப்பினும், நீங்கள் விலையுயர்ந்த பியூட்டி பார்லர் சிகிச்சைகளுக்கோ அல்லது இரசாயனம் நிறைந்த தயாரிப்புகளுக்கோ செல்ல வேண்டியதில்லை. நமது சமையலறையில் உள்ள சில சக்திவாய்ந்த, இயற்கையான பொருட்கள் மூலம் இந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு காணலாம். குளிர்காலம் முழுவதும் உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும், உங்கள் கூந்தலை பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும் ஐந்து எளிய வீட்டு வைத்தியங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஈரப்பதத்தை அதிகரிக்க உதவும் தேங்காய் எண்ணெய்:

 

தேங்காய் எண்ணெய், தலைமுடிக்கு இயற்கையாக கிடைக்கும் மிகச் சிறந்த ஈரப்பதமூட்டிகளில் (Moisturizers) ஒன்றாகும். இதன் தனித்துவமான சிறிய மூலக்கூறு அமைப்பு, முடியின் வேர்க்கால்களுக்குள் எண்ணெய் ஆழமாக ஊடுருவி, சரியான நீரேற்றத்தை வழங்க உதவுகிறது. இந்த ஆழமான ஊடுருவல் உச்சந்தலையின் வறட்சியை வேரில் இருந்து சரிசெய்து, குளிர்காலத்தில் முடி இழக்கும் ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது. தேங்காய் எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவது, வறண்டு உச்சந்தலையை, ஆரோக்கியமான நிலைக்கு மாற்றும். மேலும், இது முடியின் வெளிப்புற அடுக்கில் இருந்து ஈரப்பதம் வெளியேறுவதை தடுக்கிறது.

Coconut Oil

 

தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் முறை:

 

  • 2 முதல் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கவும்.
  • இந்த எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையிலும், முடியிலும் மெதுவாக மசாஜ் செய்யவும். குறிப்பாக, முடி முனைகளில் கவனம் செலுத்தவும்.
  • 1 முதல் 2 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும்.
  • பின்னர், லேசான ஷாம்பு கொண்டு குளித்து விடலாம்.

ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் தேன்:

 

தேன், உங்கள் குளிர்கால தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்க்க வேண்டிய மற்றொரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். இது இயற்கையான ஈரப்பதத்தை தக்கவைக்கும் ஒரு பொருளாக செயல்படுகிறது. அதாவது, இது காற்றில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து, அதை முடியின் உள்ளேயே தக்க வைக்கிறது. இதனால், குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக உங்கள் முடி எளிதில் நீரிழப்புக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படும். தேனில் இயற்கையான அன்டிஆக்சிடென்ட்களும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கவும், அரிப்பால் ஏற்படும் சிறு காயங்களை ஆற்றவும் உதவுகின்றன.

 

தேனை பயன்படுத்தும் முறை:

 

  • 2 தேக்கரண்டி தேனை 1 கப் வெதுவெதுப்பான தண்ணீருடன் கலக்கவும்.
  • ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்தத் தேன் கலவையை உங்கள் முடி மீது ஊற்றவும். இது ஒரு கண்டிஷனர் போல செயல்படும்.
  • 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, சுத்தமான தண்ணீரில் நன்கு குளித்து விடலாம்.

மேலும் படிக்க: Winter Hair Care Tips: குளிர்காலத்தில் முடி உதிர்வு அதிகரிக்கிறதா? கூந்தலை இயற்கையாக வலுப்படுத்த உதவும் வீட்டு வைத்திய முறைகள்


கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கற்றாழை:

 

கற்றாழை, அதன் இதமளிக்கும் மற்றும் நீரேற்றம் செய்யும் பண்புகளுக்காக உலகளவில் அறியப்படுகிறது. எனவே, இது வறண்ட மற்றும் எரிச்சலடைந்த உச்சந்தலைக்கு ஒரு சிறந்த மருந்தாகும். கற்றாழை ஜெல், வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தது. இவை உச்சந்தலையை குளுமைப்படுத்தவும், சேதமடைந்த சரும செல்களை சரிசெய்யவும் உதவுகின்றன. இது எண்ணெய் பசை இல்லாமல் ஈரப்பதத்தை அளிப்பதால், கூந்தலில் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும். விரைவான நிவாரணத்திற்காக இது சிறந்த வழியாகும்.

 

கற்றாழையை பயன்படுத்தும் முறை:

 

  • கற்றாழை ஜெல்லிலிருந்து சாறை பிரித்து எடுக்க வேண்டும். இல்லையெனில், கடைகளில் விற்கும் சுத்தமான ஜெல்லை பயன்படுத்தவும்.
  • இதனை முடி மற்றும் உச்சந்தலையில் சமமாக தடவவும்.
  • 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, வெதுவெதுப்பான நீர் கொண்டு குளித்து விடலாம்.

மேலும் படிக்க: Winter Hair Care: குளிர்காலத்தில் வெதுவெதுப்பான எண்ணெய் குளியல் மூலம் உங்கள் கூந்தலுக்கு கிடைக்கும் அற்புத பயன்கள் என்னென்ன?

 

புரதச்சத்து நிறைந்த முட்டையின் மஞ்சள் கரு:

 

வறண்ட உச்சந்தலை காரணமாக உங்கள் முடி பலவீனமாகவோ அல்லது உதிரக்கூடியதாகவோ இருந்தால், முட்டையின் மஞ்சள் கரு ஒரு அற்புதமான தீர்வாகும். இதில் புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை சேதமடைந்த முடியை சரிசெய்து, அதன் இயற்கையான அமைப்பை மீட்டெடுக்க உதவுகின்றன. புரதங்கள் முடியின் கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன. அதே சமயம், கொழுப்புகள் ஒரு வலுவான பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, உடனடியாக மென்மையான ஒரு உணர்வை தருகின்றன. இந்த செயல்முறை, குளிர்கால வறட்சியால் சேதமடைந்த முடிக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

Egg Yolk

 

முட்டையை பயன்படுத்தும் முறை:

 

  • 1 முதல் 2 முட்டையின் மஞ்சள் கருவை ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • இந்தக் கலவையை உங்கள் முடியில், குறிப்பாக முனைகளில் மற்றும் வறண்ட உச்சந்தலை பகுதிகளில் கவனம் செலுத்தி தடவவும்.
  • 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
  • இறுதியாக குளிர்ந்த நீரில் மிதமான ஷாம்பூ பயன்படுத்தி குளித்து விடலாம்.

 

வாழைப்பழம் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்:

 

வாழைப்பழம் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க் என்பது உச்சந்தலைக்கு முழுமையான ஆற்றலை அளிக்கும் செயல்முறையாகும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இயற்கையான எண்ணெய்கள் நிறைந்துள்ளன. இவை முடியை மென்மையாக்கி, நெகிழ்வுத் தன்மையை பாதுகாக்கின்றன. தயிர் ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையை மென்மையாக சுத்தம் செய்து, முடிக்கு பட்டுப் போன்ற அமைப்பை அளிக்கிறது. இந்த இரண்டு பொருட்களின் கலவை குளிர்கால வறட்சி மற்றும் அதனால் ஏற்படும் சேதத்தை சரிசெய்யும் ஒரு சக்திவாய்ந்த சிகிச்சையாகும்.

 

ஹேர் மாஸ்க் பயன்படுத்தும் முறை:

 

  • ஒரு நன்கு பழுத்த வாழைப்பழத்தை அரை கப் சாதாரண தயிருடன் சேர்த்து மென்மையான விழுதாக கலக்கவும்.
  • இந்த மாஸ்க்கை உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவவும்.
  • ஊட்டச்சத்துகள் முழுமையாக உறிந்து கொள்ளப்பட 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும்.
  • இதற்கடுத்து குளிர்ந்த நீரில் நன்றாக குளித்து விடலாம்.

இந்த வீட்டுக் குறிப்புகள், குளிர்காலத்தில் வறண்ட உச்சந்தலையின் எரிச்சலூட்டும் அறிகுறிகளை நிர்வகிக்க இயற்கையான வழிமுறைகளாகும். இதில், உங்களுக்கு தகுந்த செயல்முறையை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com