
நம்மில் பலருக்கும் வலுவான மற்றும் பளபளப்பான தலைமுடியை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். விலை உயர்ந்த முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதால் அவ்வப்போது தலைமுடி பளபளப்பாக தோன்றும். ஆனால் இது நம் தலைமுடி ஆரோக்கியத்தை பாதிக்க செய்கிறது. நீண்ட கால அடிப்படையில் உங்கள் தலைமுடி வறண்டு போகாமல் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இயற்கையாகவே வேர்களில் இருந்து தலை முடியை வளர்ப்பதும், முடியின் வேர்க்கால்களை வலுவாக வைத்திருக்க அடிக்கடி தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதும் அவசியம். வீட்டில் இருந்தபடி தலைமுடியின் அழகை மேம்படுத்தவும் பளபளப்பான தலைமுடியை பராமரிக்கவும் சில வழிமுறைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பளபளப்பான தலைமுடியை பெறுவதற்கு மிகவும் பயனுள்ள ஒரு வழிமுறை நீரேற்றமாக இருப்பது. நாள் முழுவதும் அதிகளவு தண்ணீர் குடிப்பது உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நீரேற்றமாக இருக்க பெரிதும் உதவுகிறது. இது பளபளப்பான ஆரோக்கியமான தலைமுடியை ஊக்குவிக்க உதவும். குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீரை குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். நம் உடலை நீரேற்றம் ஆக வைத்திருந்தால் தலைமுடி இயற்கையாகவே வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் சாப்பிடும் உணவு முறை முக்கிய பங்கு வகிக்கிறது. பளபளப்பான தலைமுடியை மேம்படுத்துவதற்கு உடலுக்கு தேவையான வைட்டமின் ஈ சத்து, பயோடின் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். நட்ஸ் வகைகள், விதைகள், மீன் மற்றும் கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
நம் தலை முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க இயற்கை எண்ணெய்களை பயன்படுத்துவது முக்கியம். தேங்காய் எண்ணெய், ஆர்கான் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தி வந்தால் தலைமுடி பளபளப்பாகவும் வலுவாகவும் மாறும். உங்கள் கைகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து தலைமுடியில் மசாஜ் செய்து சிறிது நேரம் பிறகு தலைக்கு குளிக்கலாம். இயற்கை முறையில் பளபளப்பான பட்டுப் போன்ற தலைமுறைக்கு தேங்காய் எண்ணெய் தடவி சில மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும்.
நம் தலை முடியில் அதிகப்படியாக கெமிக்கல்ஸ் அல்லது ஸ்டைலிங் செய்யும்போது இயற்கையான ஊட்டச்சத்துக்கள் சேதம் அடைய வாய்ப்புகள் அதிகம். அதே போல ஸ்டைலிங்க்கு பயன்படுத்தும் வெப்ப கருவிகள் நம் தலை முடியை வலுவிழக்க செய்யும். முடிந்தவரை தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்க கெமிக்கல்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் தலைமுடியை ஷாம்பு அல்லது சீக்காய் வைத்து கழுவிய பின்பு கண்டிஷனிங் செய்வது அவசியம். இதற்குப் பிறகு குளிர்ந்த தண்ணீரில் இறுதியாக தலைமுடியை அலச வேண்டும். குளிர்ந்த நீர் பயன்படுத்தும் போது தலைமுடி ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாறுகிறது. இது நம் தலை முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
