
2025ஆம் ஆண்டிற்கான மகளிர் ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீராங்கனை கமலினியை வாங்க மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. மகளிர் ஏலம் டிசம்பர் 15ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. ஒவ்வொரு வீராங்கனைக்கும் அடிப்படை ஏலத் தொகையாக 10 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதில் 16 வயதான தமிழகத்தின் கமலினியின் பெயர் அறிவிக்கப்பட்ட போது மும்பை இந்தியன்ஸ் அவரை எப்படியாவது வாங்க வேண்டும் என துடித்தது. டெல்லி கேபிடல்ஸும் முனைப்பு காட்ட கமலினியின் ஏலத் தொகை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. இறுதியாக 1.6 கோடி ரூபாய்க்கு கமலினியை மும்பை இந்தியன்ஸ் ஏலம் எடுத்தது.
16 வயதான கமலினி இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். அவருடைய ஆட்டத்திறன் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற்ற 19 வயது உட்பட்டோருக்கான உள்ளூர் டி-20 கோப்பையில் கமலினி 8 ஆட்டங்களில் 311 ரன்கள் குவித்து தமிழக அணி வெற்றி பெற உதவினார். அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன இடது கை வீராங்கனை கமலினி அந்த தொடரில் 10 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். கமலினியின் சிக்ஸ் அடிக்கும் திறனை கண்டு பலரும் வியந்தனர்.

Madurai to Mumbai via #SuperKingsAcademy !💛🌟
— Super Kings Academy (@SuperKingsAcad) December 15, 2024
Watch her journey, full video now out on @chennaiipl Youtube 🎥 click link below👇https://t.co/Xo1cY3DiTn#TrainLikeASuperKing🦁#CricketKadhaigal#ACCWomensU19AsiaCup #WPL2025 #WPLAuctions pic.twitter.com/1K8fCByYPC
இதையடுத்து இந்திய ஜூனியர் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக 79 ரன்கள் குவித்தார் கமலினி. இதன் காரணமாக மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் ஆசிய டி-20 கோப்பையின் இந்திய அணியில் கமலினிக்கு இடம் கிடைத்தது. அதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 29 பந்துகளில் 44 ரன் எடுத்து அணியின் சேஸிங்கிற்கு உதவினார்.
கமலினியின் திறமையே ஏலத்தில் அவருடைய மதிப்பை உயர்த்தியது என்று சொல்லலாம். மதுரையில் பிறந்தவரான கமலினி சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். விக்கெட் கீப்பரான கமலினியால் பகுதி நேர சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்பட முடியும். இதை உணர்ந்தே மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் அவரை வாங்கிட விட வேண்டும் என மல்லுக்கட்டியது. அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 உலக கோப்பையிலும் பங்கேற்க உள்ளார்.
ஏலத்தின் போது வருத்தப்பட்டது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மட்டுமே. ஏனென்றால் சென்னை பட்டறையில் உருவான வீராங்கனை பரம எதிரியான மும்பை இந்தியன்ஸிற்கு விளையாட போகிறார் அல்லவா...
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com