Valentine's Week List 2025: காதல் என்கிற உன்னதமான உணர்வு ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்தாலும், அதனைக் கொண்டாடும் விதமாக பொதுவான ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து, முன்னிறுத்தி, அடையாளப்படுத்த காதலர் தினம் உருவானது. அதன்படி சமூக நிலைகளை கடந்து இரு உள்ளங்களை இணைக்கும் காதலின் புனிதத்தை போற்றும் நாளாக பிப். 14ல் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பிரபஞ்சத்தின் பேரன்பு காதல். அதை அள்ளி அணைக்க காத்திருக்கும் நாளே காதலர் தினம். அதை கொண்டாட வெறும் ஒரு நாள் போதாது.
காதலர் தினம் பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது 3 ஆம் நூற்றாண்டில் ரோம பேரரசர் கிளாடியஸ் கோதிகஸ் ஆட்சி காலத்தில் பாதிரியாராக இருந்த புனித வாலண்டைன் பற்றியது. காதல் உறவில் உள்ள படை வீரர்கள் மற்றும் திருமண உறவில் உள்ள படை வீரர்களை விட ஒற்றை படை வீரர்கள் போரில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நம்பிய பேரரசர் கிளாடியஸ் கோதிகஸ் அந்நாட்டில் இளைஞர்களுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில் அரசரின் உத்தரவை மீறி பாதிரியார் வாலண்டைன் காதல் ஜோடிகளுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதையறிந்த அரசர், வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் கிபி 269 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று வாலண்டைன் தூக்கிலிடப்பட்டார். வாலண்டைன் உயிர் தியாகம் செய்த பிப்ரவரி 14 அவரின் பெயரால் வாலண்டைன்ஸ் டே காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
காதல் ஜோடிகள் தங்கள் உறவை வலுப்படுத்தவும், ஒருதலை காதலர்கள் தங்கள் காதலை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தவும் 18 ஆம் நூற்றாண்டில் இருந்து காதலர் தின வாரம் கொண்டாடப்படுவதாக வரலாற்று தரவுகள் கூறுகின்றன. அதன்படி பிப்ரவரி 7ல் ரோஸ் டே முதல் பிப்ரவரி 13ல் கிஸ் டே வரை உள்ள காதலர் தின வாரத்தில் ஏழு நாட்களும் கொண்டாடப்படுகின்றன.
ரோஸ் டே காதலர் தின வாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்நாள் அன்பின் உலகளாவிய சின்னமான ரோஜா மூலம் பாசத்தைக் காட்டும் நாளாகும். பண்டைய அரபு மற்றும் ரோமானியர்கள் காதலை வெளிப்படுத்தவும் அன்புக்குரியவருடன் சண்டை என்றால் அவர்களை சமாதானம் செய்யவும் ரோஜா பூவை பயன்படுத்தியுள்ளனர். இந்த நாளில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் ரோஜாக்களை பரிமாறிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க : Valentines Day Dress Code : காதலர் தினத்தின்று எந்த நிறத்தில் ஆடை அணியலாம் ?
ப்ரப்போஸ் டே என்பது காதல் உறவில் இருக்கும் தம்பதிகளுக்கு மற்றும் காதலை வெளிப்படுத்த காத்திருக்கும் ஒருதலை காதலர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நாள். 1477ல் பேரரசர் ஆஸ்திரிய ஆர்ச்டியூக் மாக்சிமிலியன் வைர மோதிரம் ஒன்றை மேரி ஆஃப் பர்கண்டிக் என்பவருக்கு வழங்கி ப்ரோபோஸ் செய்ததாகக் கூறப்படுகிறது. இதே போல 1816ஆம் ஆண்டு பிரிட்டன் இளவரசி சார்லோட் தனது நிச்சயதார்த்தத்தின் போது வருங்கால கணவருக்கு பரிசு ஒன்றை வழங்கி ப்ரோபோஸ் செய்ததாக வரலாறு உண்டு.
ரோஜா பூவை போல் சாக்லேட் என்பதும் அன்பு மற்றும் பாசத்தின் உலகளாவிய அடையாளமாகும். தம்பதிகள் தங்கள் அன்பின் அடையாளமாக சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் தினம். சாக்லேட்டின் மூலப்பொருள் கோகோ பீன் கசப்பு சுவையில் இருக்கும். அதுவே சாக்லேட்டாக மாறியதும் இனிப்பாக இருக்கும். இது காதல் சில நேரம் கசப்பாகவும் சிலநேரம் இனிப்பாகவும் இருப்பதை குறிக்கிறது.
காதலர் தின வாரத்தின் நான்காம் நாளாக டெடி டே கொண்டாடப்படுகிறது. டெடி பொம்மைகள் அழகாகவும், அரவணைப்பாகவும், ஆறுதலாகவும் இருப்பது பெண்கள் அதை விரும்ப காரணமாக இருக்கிறது. அமெரிக்காவின் 26வது ஜனாதிபதியான தியோடர் டெடி ரூஸ்வெல்ட் வேட்டைக்காக சென்ற போது அவர் பிடியில் கரடி ஒன்று சிக்கியுள்ளது. அவர் உடன் இருந்தவர்கள் கரடியை சுட சொல்லி கூறியுள்ளனர். ரூஸ்வெல்ட் கரடியை சுட மறுத்துவிட்டார்.
இந்நிகழ்வை கார்டூனாக வரைந்த கார்டூனிஸ்ட் ஒருவர் அதை பத்திரிகையில் வெளியிட்டதும் அது நாடு முழுவதும் மக்களால் பேசப்பட்டது. இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட பொம்மை தயாரிப்பாளர் கார்டூனில் இருந்தது போல் கரடியை பொம்மைகளாக உருவாக்கி, அதற்கு ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் நினைவாக ‘டெடி பியர்’ என்று பெயரிட்டார். இந்த டெடி பியர் பொம்மைகள் பிரபலமாகி, அதிகமாக விற்பனையானது.
நம்பிக்கை மற்றும் புரிதலில் தான் பலரின் காதல் பயணிக்கிறது. அப்படி அன்பின் பந்தத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று ஒருவருக்கொருவர் உறுதிமொழி எடுப்பது தான் ப்ராமிஸ் டே. இந்த நாள் உங்கள் காதல் உறவின் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
மேலும் படிக்க : கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்க; இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்
நாம் விரும்புபவருக்கு அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் கொடுப்பதுதான் ஹக் டே. ஒருவருக்கொருவர் தழுவி கட்டிப்பிடிப்பது உணர்ச்சிகளை இதயப்பூர்வமாக பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பை அளிக்கும். அறிவியல் ரீதியாக பார்த்தால் கட்டியணைக்கும் போது காதல் ஹார்மோன் எனப்படும் ஆக்ஸிடாசினை வெளியிடுகிறது. இது கவலை மற்றும் மன அழுத்தத்தை போக்கும் என்று கூறப்படுகிறது.
காதலர் தினத்திற்கு முந்தைய நாள் கிஸ் டேவாக கொண்டாடப்படுகிறது. எந்த உறவாக இருந்தாலும் அன்பின் வெளிப்பாடாக முத்தம் உள்ளது. நெற்றி, உதடுகள், கன்னங்களில் முத்தமிடுவது எதுவாக இருந்தாலும் அவை உங்கள் இருவருக்குமான உறவின் பிரதிபலிப்பாகும். உளவியல் ரீதியாக முத்தங்கள் பாசம், மகிழ்ச்சி மற்றும் ஏக்கத்தின் சைகைகளாக பகிரப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் விக்டோரியன் காலத்தில் பொது வெளியில் முத்தமிடுவது சங்கடமானதாக கருதப்பட்டாலும், கிஸ் டே மிகவும் ரகசியமாக மக்களால் கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14 தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள் பூக்கள் மற்றும் சாக்லேட்டுகள் பரிமாறிக்கொள்வது, பரிசுகள் வழங்குவது, வெளியே செல்வது, ஒருவருக்கொருவர் காதல் சைகைகள் செய்வது என்று காதலர் தினத்தை கொண்டாடுவதன் மூலம் அன்பு, பாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்த சந்தர்ப்பமாக அமைகிறது.
இப்படி தான் காதலர் தினத்திற்கு வரலாற்றில் சான்றுகள் கூறப்பட்டுள்ளன.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com