தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு குறித்து பொது சுகாதாரத் துறை வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தென் மாவட்டங்களிலும் ஸ்க்ரப் டைபஸால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் ஸ்க்ரப் டைபஸ் என்றால் என்ன ? அறிகுறிகள், சிகிச்சை முறை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் மதுமிதா தொற்றுநோயியல் நிபுணர், எம்ஜிஎம் மருத்துவமனை அளித்துள்ள பிரத்யேக தகவல்கள் இங்கே...
ஸ்க்ரப் டைபஸ் என்றால் என்ன ?
ஸ்க்ரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று என்று டாக்டர் மதுமிதா குறிப்பிடுகிறார். இது Orientia tsutsugamushiபாக்டீரியா காரணமாக ஏற்படக்கூடிய நோய் பாதிப்பு ஆகும். பாதிப்படைந்த மைட் (பூச்சி இனம்) கடியின் காரணமாக ஸ்க்ரப் டைபஸ் பரவுகிறது. இந்த பூச்சியானது காடுகள், நிறைய செடிகள், சதுப்பு நிலப்பகுதிகளில் வாழக்கூடியது. இதை புஷ் காய்ச்சல் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பின் அறிகுறிகள்
மைட் கடித்த மறுநாளே காய்ச்சலால் நாம் அவதிப்படுவோம் என அர்த்தம் கிடையாது. பூச்சி கடித்த 7-10 நாட்களில் நமக்கு காய்ச்சல் வரலாம், தலைவலி, உடல்வலி, தசைவலி, சோர்வு ஏற்படும். சிலருக்கு தொடக்கத்திலேயே காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும்; சிலருக்கு படிப்படியாக காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புண்டு. இந்த அறிகுறிகள் பொதுவானவை. ஆரம்பத்திலேயே நாம் கவனிக்க தவறினால் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு கல்லீரல், மூளை, நுரையீரல் வரை பரவும் என மருத்துவர் மதுமிதா குறிப்பிடுகிறார். மூளை பாதிக்கப்பட்டால் நினைவு இல்லாமல் போக வாய்ப்புண்டு. தலைவலி அதிகரித்து வாந்தி எடுப்பீர்கள். பசியின்மை நிலவும்.
எந்த இடத்தில் மைட் கடிக்கிறதோ அந்த இடத்தில் புண் ஏற்படும். கருப்பு நிறத்தில் மரு போல மைட் கடித்த இடம் தெரியும். தொடை இடுக்கு, மார்பின் அடிப்பகுதி, முதுகு பகுதியில் மரு தெரியலாம். சிலபேருக்கு இந்த அறிகுறி இல்லாமல் போகலாம். எனினும் ஸ்க்ரப் டைபஸ் பாதிப்புள்ள 60-70 விழுக்காட்டினருக்கு கருப்பு நிற மரு தெரியும். மேலும் சிலருக்கு காய்ச்சல் பாதிப்போடு தோலில் தடிப்புகள் இருக்கும்.
ஸ்க்ரப் டைபஸ் மனித பரவல் ?
ஸ்க்ரப் டைபஸ் ஒருத்தரிடம் இருந்து மற்றொரு நபருக்கு பரவாது. அதாவது மனித பரவலுக்கு வாய்ப்பில்லை என்கிறார் மருத்துவர் மதுமிதா. டிரெக்கிங், அடர்ந்த செடிகள் இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பான உடைகளை அணியவும். தோட்டம், புல் வெளியில் வெறுமனே படுக்காதீர்கள். டிரெக்கிங்கில் பூச்சி விரட்டி ரசாயனத்தை பயன்படுத்தவும்.
மேலும் படிங்ககை நடுங்கிட்டே இருக்கா ? இயற்கையான வழியில் நிறுத்தலாம்; இதை மட்டும் செய்யுங்க
ஸ்க்ரப் டைபஸ் பாதிப்புக்கு சிகிச்சை
ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பினை உறுதி செய்வதற்கு மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர் மதுமிதா அறிவுறுத்துகிறார். இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும். ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பினால் உயிரிழப்பு அபாயமும் உண்டு. முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர் கோமாவுக்கு செல்லலாம். எனவே ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation