வெள்ளைப்படுதல், வயற்று வலி, சிறுநீர் நோய் தொற்று, சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் போன்ற பல பிரச்சனைகளைப் பெண்கள் எதிர்க்கொள்கின்றனர்.இது போன்ற கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் சிரமத்துக்கு உள்ளாகலாம். ஒரு சில பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்வதன் மூலம் தேவையற்ற மோசமான விளைவுகளைத் தவிர்க்க முடியும். சிறுநீர் நோய் தொற்று என்பது பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனையே. இது மோசமான சுகாதாரம் முதல் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை வரை பல காரணங்களினால் ஏற்படுகிறது.
பெண்கள் இது போன்ற பிரச்சனைகளைச் சந்தித்தால், முதலில் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம். எனினும், இவற்றிலிருந்து விடுபட ஒரு சில விஷயங்களை வீட்டிலிருந்தே நீங்கள் செய்து பார்க்கலாம். ஆயுர்வேத மருத்துவரான திக்ஷா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனைப் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் அரிசி தண்ணீர், சிறுநீர் நோய் தொற்றினை போக்க எவ்வாறு உதவுகிறது என்பதையும் விவரித்துள்ளார்.
ஆயுர்வேதத்தில், உங்கள் பிரச்சனைகளைச் சரி செய்யக்கூடிய பல வைத்தியங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் அரிசி தண்ணீர்.
அரிசி தண்ணீர் என்பது என்ன?
இதைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அரிசி கலைந்த நீரே இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதனை ஆயுர்வேதத்தில் தண்டுலோடகா என்றும் அழைப்பர்.
பொதுவாக இந்த தண்ணீரில் உள்ள மாவுச்சத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளை அளிக்கின்றன. பல பெண்கள், தங்களுடைய அழகை மெருகேற்ற அரிசி தண்ணீர் பயன்படுத்துகின்றனர். மேலும் இதனை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல் ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். அரிசி தண்ணீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், வைட்டமின் - B மற்றும் வைட்டமின் - C ஆகியவையும் அடங்கியுள்ளன.
அரிசி தண்ணீரை இவ்வளவு நாட்களாகக் கீழே ஊற்றி வந்தீர்களா? எனில், இனிமேல் அப்படி செய்யாதீர்கள். இதனை உங்கள் அன்றாட வாழ்வில், பல நன்மைகளுக்காகப் பயன்படுத்தலாம்.
அரிசி தண்ணீரை குடிக்க எப்படி தயாரிப்பது?
- 1 கப் அரிசியை ஒருமுறை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு மண் பாண்டம் அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் அரிசியுடன் குடிக்கும் தண்ணீர் சேர்த்து 2 முதல் 6 மணி நேரம்வரை ஊறவிடவும்.
- அதன்பிறகு, அந்த தண்ணீரில் இருக்கும் அரிசியை உங்கள் கைகளால் சிறிது பிசையவும்.
- பிறகு, அந்த தண்ணீரை வடிக்கட்டி ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். இதனை அந்த நாள் முழுவதும் வைத்திருந்து எப்போது வேண்டுமானாலும் குடித்து வரலாம்
- இந்த நீரை ஒரு பாட்டிலில் நிரப்பி, பகல் வேளையில் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்
- இதனை 6 முதல் 8 மணி நேரம்வரை உங்களால் சேமித்து வைத்திருக்க முடியும்
- 8 மணி நேரம் கழித்து இந்த நீரை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், இது புளித்து போய்விடும். அன்றாடம் குடிக்க தேவையான நீரை பிரெஷ்ஷாக தினமும் தயார் செய்யுங்கள்.
எந்த அரிசியை பயன்படுத்தலாம்?
அரிசி தண்ணீருக்கு, எந்த அரிசியை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம். பாலிஷ் செய்யப்படாத அரிசியாக இருப்பது நல்லது. மேலும், வேகவைக்கப்படாத, உமி அற்ற அரிசியாகத் தேர்வு செய்து கொள்ளுங்கள். 1 வருடத்திற்குள் உள்ளான அரிசியாக இருப்பது சிறந்தது. நீங்கள் வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, சிகப்பு அரிசி போன்ற எந்தவொரு அரிசியினையும் பயன்படுத்தலாம்.
தினமும் அரிசி தண்ணீர் குடிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
அரிசி தண்ணீரை தினமும் குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்களுடைய சருமம் மற்றும் முடிக்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.
- வெள்ளைப்படுதல் பிரச்சனையுள்ள பெண்களுக்கு அரிசி தண்ணீர் மிகவும் நல்லது
- இது உங்கள் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது
- இதன் குளிர்ச்சி தன்மை சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- இது வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும், அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு மற்றும் கை, கால்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு போன்றவற்றுக்கும் நற்பலன் அளிக்கிறது
- இதனைக் கொண்டு உங்கள் முகம், முடி மற்றும் சருமத்தை சுத்தம் செய்யலாம்
அரிசி தண்ணீரில் ‘இனோசிட்டால்’ எனப்படும் சேர்மம் உள்ளது. இது செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், வயதான தோற்றத்தைத் தடுக்க பயன்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஈரப்பதமிக்க தன்மை, சருமத்துக்கு மிகவும் நல்லது. அதோடு புறஊதா கதிர்களிலிருந்தும் சருமத்தை பாதுகாக்கிறது. இதன் காரணமாக, சருமம் இறுகி, வயதான தோற்றத்தையும் தடுக்கும்.
அரிசி தண்ணீரை யாரெல்லாம் குடிக்க கூடாது?
இதனை எனெர்ஜி பானமாகப் பலரும் குடிக்கின்றனர். இது பல நன்மைகளை அளித்தாலும், குளிர்ந்த தன்மை கொண்டது. அதனால், இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் இதனைக் குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. உங்களுக்குக் குளிர்ச்சியான விஷயங்கள் ஒத்துக்கொள்ளவில்லை எனில், கட்டாயம் தவிர்க்கவும்.
அரிசி தண்ணீர் மிகவும் நல்லது. எனினும், உங்கள் உணவு முறையில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது. வீட்டு வைத்தியங்கள் நன்மை அளிக்கக்கூடியது தான். ஆனால், இது ஒன்றும் மாயாஜாலம் அல்ல. உங்களுக்கு ஏதாவது உடல்நல குறைபாடு இருந்தால் நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation