herzindagi
image

உங்கள் ஆடைகளை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? ஆடைகளை பராமரிக்க டிப்ஸ்

தங்கள் ஆடைகளை அடிக்கடி சலவை செய்ய விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சில ஆடைகளை அதிக நாட்கள் அணிவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Editorial
Updated:- 2025-07-30, 22:29 IST

உங்கள் ஆடைகளை சலவை செய்வதற்கு சோம்பலாக உணர்கிறீர்களா? ஜீன்ஸ் போன்ற தடிமனான ஆடைகளை வாரம் கணக்கில் அணிந்துவிட்டு சலவை செய்யாமல் இருப்பீர்களா? துணிகளில் கடுமையான அழுக்கு அல்லது துர்நாற்றம் தெரியும் வரை துணி துவைப்பதை தள்ளிப்போடுகிறீர்களா? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

உலகளவில், தங்கள் ஆடைகளை அடிக்கடி சலவை செய்ய விரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், சில ஆடைகளை அதிக நாட்கள் அணிவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அந்த வரிசையில் நீங்கள் அணியும் ஜீன்ஸ், உள்ளாடை, சாக்ஸ், சட்டைகள், டி-ஷர்ட்டுகள், வெள்ளை ஆடைகள் மற்றும் ஹூடிஸ் போன்றவற்றை எத்தனை நாட்களுக்குப் பிறகு சலவை செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.  

ஜீன்ஸ்: அடிக்கடி சலவை செய்யக்கூடாது:


ஜீன்ஸ் தடிமனானது மற்றும் கடினமானது என்பதால், அதிகமாக சலவை செய்தால் விரைவாகத் தேய்ந்து கிழிந்து விடும். சில நேரங்களில் அதிகம் துவைத்தால் ஜீன்ஸ் பேண்டின் நிறம் மங்கிவிடும். எனவே இந்த ஜீன்ஸ் ஆடைகளை 4 முதல் 6 முறை அணிந்த பிறகே சலவை செய்வது நல்லது. மேலும், சலவை செய்த பிறகு வெயிலில் காய வைப்பது அதில் உள்ள பாக்டீரியா கிருமிகளை கொல்ல உதவும்.

how-often-should-you-wash-jeans-1-2000-14a77f32b65b4beea22f755c43cb874a

உள்ளாடை: ஒவ்வொரு முறையும் சலவை செய்ய வேண்டும்:


உள்ளாடைகளை (ஜெட்டி, பிரா) ஒவ்வொரு முறை அணிந்த பிறகும் மறக்காமல் சலவை செய்ய வேண்டும். ஏனென்றால், உடலின் உணர்திறன் பகுதிகளில் இருந்து வியர்வை, எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளாடைகளில் ஒட்டிக்கொள்கின்றன. இவற்றை சலவை செய்யாமல் மீண்டும் அணிவது தோல் அரிப்பு, அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்கும்.

சாக்ஸ்: தினமும் சலவை செய்யுங்கள்


சாக்ஸ்கள் வியர்வை மற்றும் பாக்டீரியாக்களை விரைவாக ஈர்க்கின்றன, அதனால் ஒவ்வொரு நாளும் சலவை செய்வது அவசியம். சாக்ஸில் இருந்து வரும் துர்நாற்றத்தைத் தடுக்க, சலவை செய்வதற்கு முன் சாக்ஸின் உள்புறத்தை வெளியே திருப்பி துவைக்கவும்.

sockcare1

சட்டைகள்: அணிவதைப் பொறுத்து சலவை செய்யலாம்


சட்டைகள் உள்ளாடைகளுக்கு மேலே அணியப்படுவதால், அவற்றை ஒவ்வொரு 1 - 2 முறை அணிந்த பிறகு சலவை செய்யலாம். ஆனால், நீங்கள் அதிகம் வியர்க்கும் பணிகளைச் செய்தால், ஒவ்வொரு முறை அணிந்த பிறகும் சலவை செய்வது நல்லது.

மேலும் படிக்க: பட்டுப்புடவையை இனி வீட்டிலேயே வாஷ் செய்யலாம்; காசு மிச்சமாகும் இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க

டி-ஷர்ட்டுகள்: ஒரு முறை அணிந்தால் சலவை செய்யுங்கள்


டி-ஷர்ட்டுகள் நேரடியாக உடலுடன் தொடர்பு கொள்வதால், ஒவ்வொரு முறை அணிந்த பிறகும் சலவை செய்ய வேண்டும். குறிப்பாக வெப்பமான காலநிலையில் அதிக வியர்வை ஏற்படும் போது, அவற்றை உடனடியாக சலவை செய்வது சுகாதாரத்திற்கு நல்லது.


வெள்ளை ஆடைகள்: கறைகளை எளிதில் காட்டும்


வெள்ளை நிற ஆடைகள் அழுக்கு மற்றும் கறைகளை எளிதில் காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் சலவை செய்வது அவற்றை
புத்தம் புதியதாக வைத்திருக்க உதவும்.

a-hand-washing-white-clothes-in-soapy-water.

ஹூடிஸ்: பயன்பாட்டைப் பொறுத்து சலவை செய்யுங்கள்


ஹூடிஸ் பெரும்பாலும் மற்ற ஆடைகளுக்கு மேல் அணியப்படுகிறது, எனவே அதிக அழுக்கு தெரியாது. ஆனால், வியர்வை மற்றும் உடல் இயக்கங்களால் ஹூடியில் வாடை ஏற்படலாம். எனவே, 3 - 4 முறை அணிந்த பிறகு இதை சலவை செய்வது நல்லது.

ஒவ்வொரு ஆடையின் தன்மைக்கு ஏற்றவாறு சலவை செய்வது அந்த ஆடையின் ஆயுளை நீட்டிக்கும் மற்றும் உடல் சுகாதாரத்தை பராமரிக்கும். எனவே, மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகளை பின்பற்றி உங்கள் ஆடைகளை சரியான நேரத்தில் சலவை செய்து புதிது போல வைக்கலாம். 

Image source: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com