Nellai pongal 2024: தைத்திருநாளில் நெல்லை மாவட்ட மக்களின் சிறப்புகள்!

பல கிராமங்களில் இளவட்ட கல் தூக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உற்சாகத்துடன் கலந்துக் கொள்வார்கள்.

 
Nellai pongal

திருநெல்வேலி என்றாலே அரிவாள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். வீரத்திற்கும், கோபத்திற்கும் மட்டுமல்ல, பாசத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சம் இல்லாதவர்கள் என்பதை சில சமயங்களில் நிரூபித்துவிடுவார்கள் நெல்லை சீமை மக்கள். அதிலும் தைப்பொங்கல் தினத்தில் பொங்கல் வைக்கும் வழக்கத்தோடு சில உணவு முறைகளையும் தொன்று தொட்டு பயன்படுத்தி வருகின்றனர். அப்படி என்ன சிறப்பு என அறிந்துக் கொள்ள வேண்டுமா? இதோ கொஞ்சம் படிங்க...

thamiraparani

நெல்லை சீமையில் தைப்பொங்கல்:

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை ஆதரமாகக் கொண்டு பல விவசாயங்கள் இங்கு நடைபெறுகிறது. தைத்திருநாளில் தங்களது நிலத்தில் விளைந்த காய் கறிகள் மற்றும் சிறுதானியங்களைக் கொண்டு சூரிய பொங்கல் வைப்பார்கள். குறிப்பாக மதுரைக்கு தெற்கே உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் மட்டுமே பெருமளவில் கிடைக்கக்கூடிய சிறு கிழங்குகளை சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்.

பொங்கல் வந்துவிட்டாலே ஒவ்வொருவரின் வீட்டிலும் சிறுகிழங்குகள் நிச்சயம் இல்லாமல் இருக்காது. இதை சமைக்க வேண்டும் என்றால் முதலில், கோணி சாக்கைக் கொண்டு தோலை உரிக்க வேண்டும். பின்னர் மசாலா சேர்த்து அல்லது சேர்க்காமல் கடலை எண்ணெயில் தாளித்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும் என நெல்லை மாவட்ட மக்கள் மகிழ்வுடன் தெரிவிக்கின்றனர்.

மற்ற காய் கறிகளைப் போன்றில்லாமல் சமைத்தாலும் ஓரளவிற்கு மண் வாசனை வரக்கூடும். இதுவே இந்த உணவிற்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும். மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மண் மனம் மாறாத ஆற்றலும் கிடைக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது.

sirukilangu

அடுத்ததாக நெல்லையில் பொங்கல் தினத்தில் அவியல் செய்யப்படுவது வழக்கம். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வாழைக்காய், கத்தரிக்காய், தக்காளி, தயிர், தேங்காய் எண்ணெய் என உடலுக்கு ஆற்றலை அளிக்கக்கூடிய அனைத்துப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அவியல் பொங்கல் தினத்தில் ஸ்பெஷல் ரெசிபியாக இன்றவும் இருக்கிறது. இதையடுத்து பனங்கிழங்கு. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பரவலாக பனங்கிழங்கு சாகுபடி நடைபெறும். இதுவும் பொங்கலுக்கு ஸ்பெஷல் உணவாக உள்ளது. இது போன்ற பல வகையான விருந்துகளோடு பொங்கல் தினம் நெல்லை சீமையில் கொண்டாடப்படுகிறது.

புதுமண தம்பதிகளுக்கு கொடுக்கப்படும் பொங்கல் சீர்வரிசையில் மண்ணிற்கு அடியில் விளையக்கூடிய அனைத்துப் பொருள்களும் கொடுப்பார்கள். குறிப்பாக மண்ணிற்கு அடியில் விளையக்கூடிய கிழங்குகள் தான் இங்கு பிரதானம். எப்படி அனைத்து சூழலையும் அனுசரித்துக் கொண்டு மண்ணிற்கு அடியில் கிழங்குகள் செழிப்பாக வளர்கிறதோ? அது போன்று புகுந்த வீட்டில் எந்த சிக்கல் வந்தாலும் அதை சமாளித்து செழிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசிர்வாதத்தோடு சீர் வரிசைகள் வழங்கி வருவதாக நெல்லை மாவட்ட மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

Nellai special game

தைத்திருநாளில் சில இடங்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு வண்டி பந்தயமும் நடைபெறுவது வழக்கம். பல கிராமங்களில் இளவட்ட கல் தூக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உற்சாகத்துடன் கலந்துக் கொள்வார்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP