பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, ஜோதிகா உள்ளிட்ட நடிகர்கள் நடித்த சந்திரமுகி திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்று வரை திரையரங்கில் அதிக நாட்கள் ஓடிய படங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் சந்திரமுகி கதாபாத்திரம் எந்த அளவுக்கு மனதில் இருக்கிறதோ அதே அளவுக்கு இப்படத்தில் வரும் வேட்டையன் ராஜா அரண்மனையும் இன்றளவும் அனைவரின் மனதிலும் இருக்கிறது. அப்படி இப்படத்தில் வரும் வேட்டையன் அரண்மனையின் பெரும்பாலான உட்புற காட்சிகள் கர்நாடக மாநிலம் பெங்களூரு அரண்மனையில் தான் படமாக்கப்பட்டது.
பெங்களூரு அரண்மனை வரலாறு
பெங்களூருவின் மையத்தில் உள்ள இந்த கம்பீரமான அடையாளம் 1878-ல் மன்னர் சாமராஜேந்திர வாடியாரால் கட்டப்பட்டது. 1874-ல் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் 1878-ல் முடிவடைந்தது. அப்போது பெங்களூர் மத்திய உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக இருந்த ரெவரெண்ட் ஜே காரெட் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. வாடியார் வம்சம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்ததால் இந்த அரண்மனை இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் அரண்மனையின் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது. அக்காலத்தில் இந்த அரண்மனையை கட்ட மொத்தமாக 40,000 ரூபாய் செலவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: வார இறுதி நாளில் பெங்களூர் டூர் ப்ளான் இருக்கா? அப்ப இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
மைசூர் அரச குடும்பத்திற்கு மைசூர் அரண்மனைக்கு பிறகு பெங்களூரு அரண்மனை துணை இல்லமாக இருந்து வந்தது. அதன் பின் அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மேம்பாடுகளை கண்ட பெங்களூரு அரண்மனை தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு முதல் பல சட்ட சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. அதன் பின்பு அரச குடும்ப வாரிசின் கட்டுப்பாட்டில் அரண்மனை வந்தது. 2005 ஆம் ஆண்டு முதல் இந்த அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
பெங்களூரு அரண்மனையின் கட்டிடக்கலை
பெங்களூருவின் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் இந்த அரண்மனை நாற்பத்தி அஞ்சு ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது, அதனை சுற்றியுள்ள மைதானம் 454 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த அரண்மனையில் சுமார் 35 அறைகள் ஆகும். அவற்றில் பெரும்பாலானவை படுக்கையறைகள். மேலும் ஒரு நீச்சல் குளமும் இருக்கிறது. இந்த கோட்டையின் வெளிப்புறத்தில் உள்ள கோபுரங்கள் மற்றும் செங்குத்தான கூரைகள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் விதமாக இருக்கிறது. மேலும் அரண்மனையின் உள்ளே உள்ள மர சிற்பங்கள், கண்ணாடி பொருட்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் கலைப்பொருட்கள் நம்மை வசீகரித்து அக்காலத்திற்கே கொண்டு செல்கிறது.
தர்பார் ஹால்
முதல் தளத்தில் உள்ள தர்பார் ஹால் இந்த அரண்மனையின் பிரதான இடமாக உள்ளது. அக்காலத்தில் அரச கூட்டங்கள் நடைபெறும் இடமாக தர்பார் ஹால் திகழ்ந்தது. இங்குள்ள பெரிய யானைத் தலை, ஆடம்பரமான மலர் வடிவங்கள், பெரிய ஜன்னல்கள் மற்றும் உயர்ந்த தூண்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக உள்ளது.
பெங்களூர் அரண்மனை மைதானம்
அரண்மனையை சுற்றி பார்த்த பிறகு வெளியே பரந்த திறந்தவெளி மைதானத்தில் உள்ள தோட்டங்களை பார்வையிட்டபடி நண்பர்கள், குடும்பத்தினருடன் ரிலாக்ஸாக பொழுதை கழிக்கலாம். மேலும் இங்குள்ள ஃபன் வேர்ல்ட் கேளிக்கை பூங்காவில் குழந்தைகளுக்கு பிடித்த தண்ணீர் விளையாட்டுகள் மற்றும் சவாரிகள் உள்ளன.
மேலும் படிக்க: "குகைக்குள் அற்புதம்" வள்ளிமலை முருகன் கோயிலின் வரலாறும் சிறப்புகளும்
பெங்களூர் அரண்மனை நுழைவு கட்டணம் மற்றும் நேர விவரம்
நுழைவு கட்டணம்
இந்தியர்களுக்கு ரூ.230 மற்றும் வெளிநாட்டவருக்கு ரூ.460 நுழைவு கட்டணமாக உள்ளது.
கேமரா கட்டணம்
மொபைல் கேமராவுக்கு ரூ.285, ஸ்டில் கேமராவுக்கு ரூ.685, டியோ கேமராவுக்கு ரூ.1,485 அனுமதி கட்டணமாக உள்ளது.
பார்வை நேரம்
காலை 10:00 மணி முதல் மாலை 5.30 வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation